அரசியல் அநாதைகளாக தெருவில் நிற்கப் போகும் முஸ்லிம்கள்

(அரசியல் அநாதைகளாக தெருவில் நிற்கப் போகும் முஸ்லிம்கள்)

புதிய முறைமையிலான மாகாண சபைத் தேர்தலால் அரசியல் அநாதைகளாக முஸ்லிம்கள். தெருவில் நிற்கப் போகும் நிலை ஏற்பாடு என பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் தெரிவிப்பு.

”மாகாண சபைத் தேர்தலை புதிய முறையின்கீழ் நடத்தினால் முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாகி நடுத் தெருவுக்குச் செல்லும் நிலை ஏற்படும்.அத்தேர்தலை புதிய முறைமையின்கீழ் நடத்த வேண்டாம் என்றும்  இப்போதுள்ள முறைமையின் கீழே நடத்த வேண்டும் என்றும்  நாம் அரசை வலியுறுத்தி வருகிறோம்”.

-இவ்வாறு சுகாதார,போசணை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைஸல் காஸிம் தெரிவித்துள்ளார்.மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டு வருகின்றமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்;

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிந்த கையோடு மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்ற கோசம் முன்வைக்கப்பட்டு வருகின்றது.இப்போதுள்ள முறைமையின் கீழ் நடப்பட வேண்டும் என்று ஒரு சாராரும் புதிய முறைமையின் கீழ் நடப்பட வேண்டும் என்று இன்னொரு சாராரும் கூறி வருகின்றனர்.

புதிய முறைமை முஸ்லிம்களுக்குப் பேராபத்தைக் கொண்டுள்ளது.முஸ்லிம்களை அரசியல் அநாதைகளாக மாற்றி நடுத் தெருவிற்குத்  தள்ளிவிடும்.இந்த ஆபத்தான புதிய முறைமையை  எம்மால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது.

புதிய முறைமையால் தேர்தல் செலவு குறையும் என்று கூறுகின்றார்கள்.அது பொய்.செலவு கூடுமே தவிர குறையாது.நாடாளுமன்றத் தேர்தலுக்கு செலவழிப்பதுபோல் புதிய முறைமையின் கீழான மாகாண சபைத் தேர்தலுக்கு செலவழிக்க வேண்டும்.

இந்தப் புதிய முறையை அதிகம் விரும்புவது ஜேவிபிதான்.அவர்கள் அவர்களின் அரசியல் நலன்களை அடிப்படையாகக் கொண்டே இதற்கு ஆதரவு வழங்குகின்றனர்.தோல்வியடைகின்ற கட்சிக்கு புதிய முறைமை அதிக நன்மைகளை வழங்கும்.அந்த வகையில்,இது ஜேவிபிக்கே பொருத்தமான முறைமையாக அமையும்.

புதிய உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறைமை எப்படி வென்ற கட்சியை தோல்வியடைந்த கட்சியாக மாற்றி தோல்வியடைந்த கட்சியை வெற்றிபெறச் செய்ததோ அதேபோன்றதொரு ஆபத்தான நிலைமையையே புதிய மாகாண சபை முறைமையும் செய்யும்.இது உண்மையில் பெரும் அநீதியாகும்.

ஒரு கட்சியை அல்லது நபரை மக்கள் தோல்வியடையச் செய்வதும் வெற்றியடையச் செய்வதும்  ஜனநாயகம்.அதை நாம் ஏற்கமாட்டோம்.ஆனால்,அந்த மக்கள் எடுத்த நிலைப்பாட்டை திரிவுபடுத்தி மக்கள் விரோத தீர்மானம் ஒன்றை வழங்கினால் அது ஜனநாயகம் அல்ல.அதை ஒருபோதும் ஏற்க முடியாது.

 உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் இந்த அநீதியையே இழைத்தன.வென்றவர்கள் தோல்வியடைந்தார்;தோல்வியடைந்தவர் கள் வென்றார்கள்.தோல்வியடைந்தவர்கள் ஆட்சியை அமைத்தார்கள்.நிலைமை இப்படி இருந்தால் மக்கள் நம்பி வாக்களிக்கமாட்டார்கள்.நாம் எந்தத் தீர்ப்பை வழங்கினாலும் அது மாற்றப்படும் என்று அஞ்சுகின்றனர்.இதனால் உள்ளூராட்சி சபை முறைமையை ஒத்த புதிய மாகாண சபை முறைமையை மக்கள் எதிர்க்கின்றார்கள்.

மறுபுறம்,இது முஸ்லிம்களுக்கு அதிக ஆபத்தைக் கொண்டுள்ளது.எமது பிரதிநிதித்துவம் பாரியளவில் குறையும்.எமது மக்கள் அளிக்கும் வாக்குகள் அனைத்தும் வீணாகவே செல்லும்.நாம் அளிக்கும் வாக்குகள் எம்மை அரசியல் அநாதைகளாக மாற்றி நடுத் தெருவுக்கு கொண்டு வந்துவிடும்.இந்த நிலை ஏற்பட்டால் நாம் பழைய நிலைக்குத் திரும்புவது மிகக் கடினம்.

இந்த ஆபத்தில் இருந்து நாம் தப்ப வேண்டும் என்றால் இப்போதுள்ள முறைமையின் கீழே தேர்தல் நடத்தப்பட வேண்டும்.இந்த விவகாரம் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் கட்சி பேதமின்றி ஆபத்தில் தள்ளுகின்ற ஒன்றாக இருப்பதால் முஸ்லிம்கள் அனைவரும் ஒரே அணியில் நின்று புதிய முறைமையை எதிர்க்க வேண்டும்.எமது அரசியல் பிரதிநிதித்துவத்தை தக்க வைப்பதன் ஊடாக எமது அரசியல் உரிமையை பாதுகாக்க வேண்டும்.-

சுயாதீன எல்லை நிர்ணய குழுவின் உறுப்பினர் பேராசியர் எஸ்.எச். ஹஸ்புள்ளாஹ் இந்த ஆபத்து தொடர்பில் வெளிப்படையாகக் கூறி இருந்தார்.அதற்காக அவருக்கு நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.-எனத் தெரிவித்துள்ளார்.

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*