“இலங்கை பொலிஸ் சேவையை சர்வதேச மட்டத்தில் மதிப்புமிக்கதாக மாற்ற எதிர்பார்த்துள்ளேன்” ஜனாதிபதி

(“இலங்கை பொலிஸ் சேவையை சர்வதேச மட்டத்தில் மதிப்புமிக்கதாக மாற்ற எதிர்பார்த்துள்ளேன்” ஜனாதிபதி)

இலங்கை பொலிஸ் சேவையை தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் உயர் மதிப்பினையுடைய சேவையாக மாற்றுவதற்காக பொலிஸ் திணைக்களம் தனது கட்டுப்பாட்டின் கீழ் காணப்படும் இக்காலப்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

களுத்துறை பொலிஸ் பயிற்சி நிலையத்தின் மகளிர் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (08) பிற்பகல் இடம்பெற்றதோடு, அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளின் பொலிஸ் சேவைகளோடு ஒப்பிடும்போது இலங்கை பொலிஸ் சேவையில் பெருமளவு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

பொலிஸ் திணைக்களம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட சில மாத காலங்களுக்குள்ளாகவே அந்த வெற்றிகளை நோக்கி இலங்கை பொலிஸ் திணைக்களம் பயணிப்பதற்காக பொலிஸ் திணைக்களத்தில் உள்ளக ரீதியில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் பணியில் மாத்திரம் ஈடுபடுத்தப்பட்டிருந்த இலங்கை பொலிஸார் இன்று மக்களின் நலன் பேணல் சேவைகளில் நிறைவேற்றும் சிறப்பான மனித நேய பணிகளை ஜனாதிபதி அவர்கள் இதன்போது பாராட்டினார்.

இன்று பிற்பகல் களுத்துறை பொலிஸ் பயிற்சி நிலையத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்களுக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.

இலங்கை பொலிஸ் பயிற்சி நிறுவனத்தின் வரலாற்றில் மகளிர் பொலிஸ் படையணியொன்று பயிற்சியை நிறைவு செய்து பிரிந்து செல்லும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பதோடு, பொலிஸ் பயிற்சி நிறுவனத்தின் பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த 586 மகளிர் கான்ஸ்டபிள்கள் மற்றும் 27 உதவி பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட 616 பேர் இன்றைய தினம் பிரிந்து சென்றனர்.

விசேட திறமைகளை வெளிக்காட்டிய மகளிர் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்களும் விருதுகளும் ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டதோடு, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கினார்.

இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்கிரமசிங்க, பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன உள்ளிட்ட பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2019.04.08

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*