கோட்டாபயவை ஆதரிக்குமாறு முஸ்லிம்களிடம் துமிந்த கோரிக்கை

(கோட்டாபயவை ஆதரிக்குமாறு முஸ்லிம்களிடம் துமிந்த கோரிக்கை)

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வரலாற்றுக் காலம் தொடக்கம் ஆதரவு வழங்கி வரும் தமிழ் – முஸ்லிம் மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்கும் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு திரட்டும் முதலாவது பிரதான பரப்புரைக் கூட்டம் அநுராதபுரத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இன, மத வேறுபாடு கிடையாது. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் மீது நம்பிக்கை கொண்டே தமிழ் – முஸ்லிம் மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

அன்று வழங்கிய ஆதரவை எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு வழங்க வேண்டும். அமோக வாக்குகளினால் அவரை வெற்றியடையச் செய்ய வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தின் தீர்மானத்துக்கு அமையவே பொதுஜன முன்னணியுடன் இணையத் தீர்மானித்தோம். ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு இரண்டு ஒப்பந்தங்களை பொதுஜன முன்னணியுடன் செய்துகொள்ளவுள்ளோம்” – என்றார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*