“சட்டங்களை தனிநபர்களோ குழுக்களோ தம் கைகளில் எடுக்க முடியாது” – காதர் மஸ்தான்

(“சட்டங்களை தனிநபர்களோ குழுக்களோ தம் கைகளில் எடுக்க முடியாது” – காதர் மஸ்தான்)

தேசத்தின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட சட்டங்களை அமுல்படுத்த பொலிசும் நீதிமன்றங்களும் உள்ள ஜனநாயக இலங்கையில் சில தனிநபர்களும் குழுக்களும் சட்டங்களை பொருற்கோடல் செய்து நீதிபதிகள் போன்று நடக்க முற்படுவது ஜனநாயகத்திற்கு மிகுந்த ஆபத்தான விடயமாகும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மீள் குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…..

அண்மையில் நடைபெற்ற  முஸ்லிம் பெயர்தாங்கிகளின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களின் பின்பு இந்நாட்டில்  நடைபெற்று வரும் கசப்பான சம்பவங்களை மனிதநேயம் கொண்ட எவரும் அங்கீகரிக்க மாட்டார்கள்.

இந்த நாட்டின் மீது அரிய பற்றுக்கொண்ட முஸ்லிம் சமூகம் மேற்கொண்ட துரிதமானதும் விவேகமானதுமான நடவடிக்கைகளினால் இந்த நாட்டுக்கேற்படவிருந்த பாரிய அனர்த்தங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என்பதை நாட்டுப்பற்றுள்ளோர் விளங்கிக்கொண்டுள்ள   அதேவேளையில் ஆங்காங்கு ஒரு சிலர் இனத்துவேஷமான செயற்பாடுகளில் ஈடுபட்டு அரசாங்க சட்டங்களை கையிலெடுப்பதை உடனடியாக கைவிடவேண்டும் இன்றேல் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனைகளை எதிர்நோக்க வேண்டும்.

குறிப்பாக முகத்திரை அணிதலானது ஆண்,பெண் எனும் பாகுபாடின்றி பொதுவாக தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் பர்தா அணியும் முஸ்லிம் பெண் அரச உத்தியோகத்தர்கள் மீது சிலர்  காழ்ப்புணர்வுடன்  நடக்க முற்படுவது சட்டவிரோதமான அடிப்படை உரிமை மீறலான செயற்பாடாகும் 
எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகப்பிரிவு.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*