“சட்ட ஒழுங்குகளைப் பேணி உழ்ஹிய்யாக் கடமையை நிறைவேற்றவும்” – அமைச்சர் பைஸர் முஸ்தபா

(“சட்ட ஒழுங்குகளைப் பேணி உழ்ஹிய்யாக் கடமையை நிறைவேற்றவும்” – அமைச்சர் பைஸர் முஸ்தபா)

நாளை  (22) புதன்கிழமை கொண்டாடப்படவுள்ள புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினம் மற்றும் அதனைத் தொடர்ந்து மூன்று நாட்களிலும் உழ்ஹிய்யாக் கடமையை நிறைவேற்றும்போது, முற்று முழுதாக அதன் சட்ட ஒழுங்கு விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு, உழ்ஹிய்யாக் கடமையை நிறைவேற்றுவோர்களிடம்  மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

உழ்ஹிய்யாவுக்காக அறுக்கப்படும் பிராணிகளை வீதிகளிலோ அல்லது வாகனங்களிலோ எடுத்துச் செல்லும்போது, நூறு வீதம் அதன் சட்ட ஒழுங்கு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படல் வேண்டும். அத்துடன், கால் நடைகளை தூர இடங்களிலிருந்து கொண்டு வரும் சமயம், உரிய முறையில் அனுமதிகளைப் பெற்றுக் கொள்ளல் போன்ற சட்ட திட்டங்களைப் பேணி நடந்து கொள்ளுமாறும், இது தவிர  குறிப்பாக, போயா தினமாகிய சனிக்கிழமையன்று மறைமுகமாகவேணும் உழ்ஹிய்யாக் கொடுப்பதைக் கட்டாயம் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்றும்  அமைச்சர் வலியுறுத்திக்  கேட்டுள்ளார்.

உழ்ஹிய்யாக் கடமைகளை நிறைவேற்றும் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள்  மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஆகியோரும், குறித்த ஒழுங்குகளை அறிந்து வைத்திருப்பதும் மிகவும் முக்கியமானதாகும்.  இப்பிராணிகளின் கழிவுகளை, கண்ட கண்ட இடங்களிலெல்லாம் வீசி எறிந்து அசிங்கப்படுத்தாமல் இருப்பதோடு, பொதுக் குப்பைத் தொட்டிகளிலோ அல்லது ஆறுகளிலோ அதன் கழிவுகளைப்  போடுவதைத் தவிர்த்து, அவ்வாறான கழிவுகளை இயன்றளவு குழி தோண்டிப் புதைப்பது எல்லோருக்கும் சாலச்சிறந்தது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். உழ்ஹிய்யாக் கடமையை நிறைவேற்றுவதில் அசெளகரியங்களைத் தவிர்த்துக் கொள்ள, முன் கூட்டியே உள்ளூராட்சி மன்றங்களில்  அறுப்பதற்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்று, அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். அனுமதிப் பத்திரங்களை இதுவரையில் எடுக்காதவர்கள், உடனடியாக அவற்றைப் பெற்றுக்கொள்ளுமாறும்  அமைச்சர் முஸ்லிம்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நல்லாட்சியின் கீழ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இயங்கும் தேசிய அரசாங்கத்தில் எந்தவொரு சமயத்திற்கும் மார்க்க ரீதியிலான சட்டதிட்டங்களில் எவ்விதப் பாதிப்புக்களும் ஏற்பட இடமளிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், குறிப்பாக முஸ்லிம்களின் சமயரீதியிலான மார்க்க அனுஷ்டானங்களுக்கு அரசாங்கம் என்ற வகையிலும், பொறுப்பு வாய்ந்த அமைச்சர் என்ற ரீதியிலும் நாம் முன்னுரிமை வழங்கி வருகின்றோம்.

எனவே, குறித்த மேற்படி ஒழுங்கு விதிமுறைகளைப் பேணி அசெளகரியங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு, உழ்ஹிய்யாக் கடமைகளை நிறைவேற்றும் அனைவரிடமும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றும் அமைச்சர் பைஸர் முஸ்தபா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

-ஐ. ஏ. காதிர் கான்-

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*