“மக்களின் நலன்களை பாதுகாக்க பேதங்களுக்கப்பால் நின்று செயற்பட வேண்டும்” – பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்

(“மக்களின் நலன்களை பாதுகாக்க பேதங்களுக்கப்பால் நின்று செயற்பட வேண்டும்” – பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்)

இன்று எமது அமைச்சினால் வழங்கப்படுகின்ற நஷ்டஈடானது முப்பது வருடகால கொடிய யுத்தம் அரங்கேற்றிய வலிகளுக்கும் அதனையொட்டியெழுந்த வடுக்களுக்கும்  தீர்வாகயமையாத போதிலும்,எமது மக்களின் துயரமான வலிகளை ஓரளவாவது நிவர்த்திக்கும் என்பதை நானறிவேன் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர்  காதர் மஸ்தான் குறிப்பிட்டார்.

இன்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்கும் வைபவத்திலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யுத்தத்தால் நிர்மூலமாக்கப்பட்ட வணக்கஸ்தலங்கள், உடமைகள்,உடற்சேதங்கள்,உயிரிழப்புக்கள் என பல்வேறு வகைகளிலும் இழப்புக்களை சந்தித்த சுமார் 647 இழப்பீட்டாளர்களுக்கு  இந்த நஷ்டஈட்டுக் கொடுப்பனவுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா மாவட்டத்தில் சுமார் 92 இழப்பீட்டாளர்களுக்கும் மன்னார் மாவட்டத்தில் மதஸ்தலம் ஒன்றுக்கும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வதியும் சுமார் 554 இழப்பீட்டாளர்களுக்கும் என மொத்தமாக 647 இழப்பீட்டு கொடுப்பனவுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

இந்த வைபவத்தில்  உரையாற்றிய கெளரவ பிரதி அமைச்சர் மேலும் கூறியதாவது.

இந்த நஷ்டஈட்டு கொடுப்பனவுகளை எமது மக்களுக்கு வழங்குவதற்கு எமக்கு ஆதரவளித்த எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் எமது அமைச்சர் சுவாமிநாதனுக்கும் எனது நன்றிகளை இவ்விடத்தில் பொறுப்புணர்வோடும் பெருமையோடும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். யுத்தத்தின் கோரத்தால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் பரந்தும் செறிந்தும் வாழ்கின்ற பாதிக்கப்பட்டோருக்கு அவர்களது நலன்களை பேணுவதற்கும் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கும் ஜனாதிபதி அவர்கள் திடவுறுதியோடு செயற்பட்டு வருகிறார்கள்.
அந்த அடிப்படையில் இந்த நஷ்டஈட்டு கொடுப்பனவுகள் இன்று வழங்கப்படுகின்றன.

எம்மத்தியில் இன மத மொழிப் பாகுபாடுகள் கிடையாது.
மனிதாபிமான மனச்சாட்சிகளின் அடிப்படையிலேயே எமது பணிகளை நிதானமாக ஆற்றி வருகிறோம்.

யுத்தத்தின் அவலங்கள் எம்மத்தியில் விதைத்திருக்கின்ற வில்லங்கமான பாதிப்புகளிலிருந்து மக்களை  மீட்டெடுக்க வேண்டிய பாரிய பொறுப்புக்களை நாங்கள் சுமந்திருக்கிறோம்

பாதிக்கப்பட்ட மக்களின் அவசிய, அத்தியாவசிய நிலைமைகளை கருத்திற்கொண்டு நஷ்டஈடு வழங்குவதில்  முன்னுரிமையளிக்கும் நியாயமான பொறிமுறையொன்றை வருங்காலத்தில் நடைமுறைப்படுத்த  விரும்புகிறோம் எனவும் குறிப்பிட்டார்..

இந்த வைபவத்தில் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி அரச அதிபர்கள் ரெப்பியா நிறுவன தலைவர் திரு.அன்னலிங்கம்,பணிப்பாளர் ஜனாப்.பதூர்தீன், அரச அதிகாரிகள் பயனாளிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*