அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை; வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்

(அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை; வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்)

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை குழப்பியதால் அக்கூட்டத்தை பகிஷ்கரித்து அதில் இருந்து வெளிநடப்புச் செய்தார் சுகாதார,போசணை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சரும்  பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான பைஸல் காஸீம்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பிரதி அமைச்சர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு எழுத்து மூலம் முறைப்பாடும் செய்துள்ளார்.இது தொடர்பில் மேலும் அறிய வருவதாவது:

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று காலை அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் ஆரம்பமானது.அதில் பிரதேச அபிவிருத்திக்குழுவின்இணைத்தலைவர்களான பிரதி அமைச்சர் பைஸல் காசீம் மற்றும் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை  ஆகியோரும்  அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அந்தச் சந்தர்ப்பத்தில் பிரதி அமைச்சர் பைஸல் காஸீமின் அக்கரைப்பற்றுக்கான இணைப்பாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் மற்றும் நீதி,மற்றும் சிறைச்சாலைகள் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் வஹாப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை இந்த இருவரும் கலந்துகொண்டதை எதிர்த்தார்.அந்த எதிர்ப்பை நிராகரித்த பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் அந்த இருவரும் பிரதி அமைச்சர்களின் இணைப்பாளர்களாகவும் அபிவிருத்தி பணிகளில் பங்கெடுப்பவர்களாகவும் இருப்பதால் அவர்கள் பங்குபற்றுவது நியாயம் என்ற வாதத்தை முன் வைத்தார்.

இதை ஏற்காத உதுமாலெப்பை தொடர்ந்தும் கூட்டத்தை குழப்பும் முயற்சியில் ஈடுபட்டார்.இதனால் பைஸல் காஸீம் கூட்டத்தில் இருந்து  உடனே வெளியேறினார்.இது தொடர்பில் அவர் உடனடியாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

அரசியல் அதிகாரங்கள் அற்ற-மக்கள் செல்வாக்கை இழந்தவர்களை பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்கு இணைத் தலைவர்களாக நியமிப்பதால் இவர்கள் அரசின் சேவைகள் மக்களை சென்றடைவதைத் திட்டமிட்டுத் தடுக்கின்றனர் என்றும் இவ்வாறானவர்கள் இந்தத் தலைமைத்துவத்தில் இருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தங்களின் அரசியல் நோக்கத்தை பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களின் ஊடாக நிறைவேற்ற முடியாமல் போகின்றபோது இவ்வாறான குழப்பங்களில் ஈடுபட்டு கூட்டங்களை குழப்பி மக்களுக்கு சேவைகள் சென்றடைவதைத் தடுக்கின்றனர் என்று பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*