இந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் – டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி

(இந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் – டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி)

தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை சொல்லி வருகின்றார்கள். எமது சமூகத்தில் பெரும்பாலானவர்கள் அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறார்கள். தடுப்பூசிக்கும் யூதர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. 50 வருடங்களுக்கு முன்பு இலங்கையில் ஒவ்வொரு வீட்டிலும் போலியோவால் பாதிக்கப்பட்ட முடமான பிள்ளைகள் காணப்பட்டார்கள். தடுப்பூசி மருந்துகள் ஏற்றப்பட்டமையினாலேயே போலியோ இல்லாமல் போனது. நியுமோகொகைல் என்றொரு தடுப்பூசி உள்ளது. இந்தத் தடுப்பூசி ஏற்றப்படுவதன் மூலம் மூளைக் காய்ச்சல் வருவது குறைவு. ஒரு முறை ஒரு பிள்ளைக்கு மூளைக் காய்ச்சல் வந்து அதனால் அப்பிள்ளையின் காது செவிடாகியது. அந்தப் பிள்ளை என்னிடம் அழைத்து வரப்பட்டது. அப்பிள்ளையை பரிசோதித்த போது நியுமோ கொகைல் பிள்ளையின் உடம்பில் சென்றிருப்பதை அறிந்து கொண்டேன். நீங்கள் இந்தப் பிள்ளைக்கு தடுப்பூசி ஏற்றவில்லையா? தடுப்பூசி ஏற்றியிருந்தால் இப்படி வந்திருக்காதே என்று நான் பிள்ளையின் பெற்றோரிடம் கூறினேன். அப்போது அவர்கள், தடுப்பூசி போடக்கூடாதென்று ஒரு கூட்டத்தில் சொன்னார்கள் அதனால் நாம் போட வில்லை என்றார்கள்.
தற்போது இந்தப் பிள்ளைக்கு கொக்லியோ இன்பிளான்ட் (காதில் உள்ள கொக்லியரை மாற்ற வேண்டும்) செய்ய வேண்டும் என்றும், இலங்கையில் இதைச் செய்வதென்றால் 37 லட்சம் செலவாகும் என்றும் கூறினேன். 37 லட்சம் செலவு செய்து கொக்லியோ இன்பிளான்ட் செய்ய வேண்டும், அப்படிச் செய்தாலும் 10 வீதமே முன்னேற்றம் வரும் என்றேன். பள்ளிவாயல்களிலும் கூட்டங்களிலும் தடுப்பூசி கூடாதென குறிப்பிடுபவர்கள் சிகிச்சை நிலையங்களில் இவ்வாறான சம்பவத்தை காண்பதில்லை. அந்தப் பெற்றோர் என் முன்னால் அழுத அழுகை என் கண்ணுக்குள் அப்படியே பதிந்திருக்கிறது. தடுப்பூசி தேவையில்லை எனக் கூறுபவர்கள் எந்த விதமான அறிவுப் பின்னணியும் இன்றி சமூகத்திற்கு மிகப்பெரும் பாதிப்பை செய்து வருகின்றனர்.
இலங்கையில் தற்பொழுது போலியோ நோய் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இன்னும் போலியோ நோய் காணப்படுகிறது. பாகிஸ்தானில் போலி யோ மருந்து கொடுக்கச் சென்ற வைத்தியர்கள் மீது தலிபான் கள் துப்பாக்கிச் சூடு நடாதியுள்ளனர். நைஜீரியாவில் போலியோ நோய் முற்றாக இல்லாமல் இருந்தது. ஆனால் அறிவில்லாத சிலர் போலியோ ஹராம், தடுப்பூசி கூடாதென்ற கருத்துக்களை மக்களிடம் கூறியமையினால் அங்கு போலியோ தடுப்பு மருந்து நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 10 வருடங்களாக போலியோ மருந்தின்றி பிள்ளைகள் முடமாகத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நைஜீரிய ஜம்மிய்யத்துல் உலமா முன்வந்து இது ஹராமில்லை, இந்தத் தடுப்பூசியை போடுங்கள் என மிகப்பெரும் பிரசாரத்தை மேற்கொண்டார்கள். அதன் பின்னரே அங்கு  சுகமான நிலை வந்துள்ளது.
அறிவற்ற சமூகமே அறிவிலிகளின் கருத்துக்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். கலீபா உமர் (ரலி) அவர்கள் மிம்பர் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு பெண் எழுந்து நின்று கேள்வியொன்றை கேட்டுள்ளார். அந்தப் பரம்பரையில் வந்தவர்களே நாங்கள். கதைப்பவர்கள் மோட்டுத்தனமான முறையில் கதைப்பார்கள். ஆனால் நாம் அவற்றை வெறுமனே கேட்டுக்கொண்டிருக்க கூடாது. எழுந்து நின்று கேள்வியெழுப்ப வேண்டும். அப்படியானதொரு சமூகமே உருவாக வேண்டும். தடுப்பூசி, தடுப்பு மருந்துகளில் எந்த விதமான பிரச்சினைகளும் இல்லை. அவற்றை கட்டாயம் போடுங்கள். கொழும்பு கண்டி வீதியில் எத்தனையோ விபத்துக்கள் இடம்பெறுகின்றன. அதற்காக வேண்டி நான் கொழும்புக்கு போகாமல் இருக்க முடியாது. ஆபத்துக்கள் இடம்பெறத் தான் செய்யும். இது போன்று தான் எல்லா விடயங்களும். தலைவலிக்கு பெனடோல் குடிக்கிறோம். அதிகம் பணடோல் அருந்தினால் ஈரல் பழுதடைந்துவிடும். இதிலும் ஆபத்து இருக்கிறது.
ஆபத்தில்லாத வாழ்வில்லை. இந்தச் சமூகத்தை மீண்டும் குட்டிச்சுவராக்கும் கூட்டமொன்று உள்ளது. அவர்களே இந்த மடத்தனமான பிரச்சாரங்களை முன்னெடுக் கின்றனர். ஏற்கனவே நாம் அரசியல், பொருளாதார, சுகாதார, அறிவுத்துறைகளில் பின்தங் கியவர்களாக இருக்கிறோம்.
இலங்கையில் உள்ள 10 வீத முஸ்லிம்களுள் 23 வீதமானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 43 வீதமான முஸ்லிம்களுக்கு ஏதாவது நோயிருக்கிறது. சிங்களவர்களுள் 22 வீதமானவர்களுக்கே நோயுள்ளது. தமிழர்களில் 20 வீதமானவர்களுக்கே நோயுள்ளது. ஆனால் முஸ்லிம்களில் 43 வீதமானவர்களுக்கு நோயுள்ளது. எனவே இப்படிப் பின்தங்கிய நிலையில் அடிமட்டத்தில் உள்ள சமூகத்தை இன்னும் பூமியில் புதைக்கும் நடவடிக்கைகளையே இவர்கள் மேற்கொள்கிறார்கள். இதற்கு நீங்கள் இடமளிக்க வேண்டாம்.

– Dr. ரயீஸ் முஸ்தபா –

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*