இறைவா, இவரா என்னுடன் சுவனத்தில் இருப்பார்.._ நபி மூஸா கண்ட சுவர்க்க வாதி!

(இறைவா, இவரா என்னுடன் சுவனத்தில் இருப்பார்.._ நபி மூஸா கண்ட சுவர்க்க வாதி!)
”தாயின் பாதத்தின் கீழ் சொர்க்கலோகம் இருக்கிறது தாயின் அன்பைப் பெறாதவன் இறையன்பைப் பெற முடியாது. தந்தையின் கோபத்திற்குள்ளானவன் இறைவனின் கோபத்திற்குள்ளாகிறான். (நபிமொழி)
‘இறைவா! சுவனத்தில் என்னுடன் இருப்பவர் யார்?’ என நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்டார்கள்.
”அதோ அங்குச் சென்று பாருங்கள். அங்கிருப்பவர் தான் உங்களுடன் இருப்பார்” என இறைவன் கூறினான். அங்கு சென்று பார்க்கிறார்கள்.
ஒரு வயதிய மூதாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவள் அருகில் தட்டில் உணவை வைத்துக்கொண்டு ஒருவர் நிற்கிறார்.
”ஏன் இவ்விதம் நிற்கிறீர்கள்?” என வினவுகிறார்கள்.
அந்த மனிதர் சொல்கிறார், ”என் தாயாருக்கு எப்பவுமே என் கையால் உணவூட்டிய பிறகு நான் சாப்பிடுவது வழக்கம். இன்று நான் தாமதமாக வந்ததால் என் தாயார் சாப்பிடாமலேயே தூங்கிவிட்டார்கள். அவர்களுடைய தூக்கத்திற்கு இடையூறு இன்றி அவர்கள் விழித்த பிறகு கொடுக்கலாம் எனக் காத்து நிற்கிறேன்” என்பதாக.
”என்ன தொழில் செய்கிறீர்கள்?” என நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் கேட்டார்கள்.
”ஆட்டு இறைச்சி விற்றுப் பிழைக்கிறேன்” என்பதாக அவர் கூறுகிறார்.
”இறைவா! இவரா என்னுடன் சுவனத்தில் இருப்பார்?” என ஆச்சிரியப்பட்டுக் கேட்கும்போது, இறைவன், ”ஆம்!” என்று கூறுகிறான்.
தாய்க்குச் செய்யும் நன்றி அவர்களுடைய முதுமைப் பருவத்தில் அவர்களுக்கு ஊழியனாக இருந்து தொண்டு செய்வதிலும், இனிமையாகப் பேசுவதிலும், அவர்கள் கொடும் சொல் கூறினாலும் அன்பு மொழியில் பதில் சொல்வதிலும், நிறைவேறும் அதன் மூலம் இறைவனிடம் தணிச் சிறப்பைப் பெறமுடியும்.
ஒரு சமயம், பனீ இஸ்ரவேலர்களில் மூன்று பேர் ஒரு குகையில் மழைக்காக ஒதுங்கி நிற்கும்போது ஒரு கல் குகையின் வாயிலை அடைத்துவிடுகிறது. மூவரும் அவரவர் செய்த நல்ல அமல்களை நினைத்து, அதன் பொருட்டால் இந்த கல்லை விலகச் செய்வாயாக என இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.
அவர்களில், ஒருவர் ”இரட்சகா! எனக்கு வயோதிகத் தாய், தந்தை இருந்தனர். நான் பகலெல்லாம் ஆடு மேய்த்துவிட்டு இருட்டிய பின் வீடு வருவேன்.
பாலைக் கறந்து முதலில் என் தாய், தந்தைக்குக் கொடுப்பேன். அவர்கள் அருந்திய பிறகு தான் நானும், என் மனைவி மக்களும் குடிப்பது வழக்கம். ஒரு நாள் வீடு திரும்ப நேரமாகிவிட்டது.
அவசரமாக பாலைக்  கறந்து கொண்டு போய் பார்த்தபோது இருவரும் தூங்கிவிட்டார்கள். தூக்கத்திற்கு இடையூறு கொடுக்க பயந்து அவர்கள் அருகாமையில் வெகு நேரம் நின்று காத்திருந்தேன். அப்போது என் பிள்ளைகள் பசியால் துடித்தன. அதையும் பொருட்படுத்தாது, என் தாய் தந்தை கண் விளிப்பதை எதிர்பார்த்து நின்றேன்.
அவர்கள் விழித்ததும் முதலில் அவர்களுக்கு பாலை அருந்தச் செய்த பிறகு என் பிள்ளைகளுக்குக் கொடுத்து, நானும் சாப்பிட்டேன்.
எனவே, அந்த ஒரு காரியத்தின் பொருட்டால் இந்தக் குகை வாயிலை அடைத்து நிற்கும் கல்லை அகற்றுவாயாக எனக் கூறி முடிப்பதற்குள் அந்தக் கல் அகன்று வழி விட்டது. மூவரும் வெளியே வந்ததாக ஹதீஸில் ஒரு சரித்திரம் காணப்படுகிறது.
சிந்திக்க இரு சம்பவங்கள்! இன்னும் நிறைய சரித்திரங்கள் இருக்க்கிறது.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
-சத்திய பாதை இஸ்லாம்-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*