உக்குவெல பிரதேச முஸ்லிம்களின் வரலாறு – மாபேரிய கிராமம்

(உக்குவெல பிரதேச முஸ்லிம்களின் வரலாறு – மாபேரிய கிராமம்)

மாபேரிய கிராமம் என்பது மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டத்தில் உக்குவெல பிரதேச சபைக்கு உட்பட்ட   கொழும்பியிலிருந்து 102 KM தொலைவில் அமைந்துள்ள அழகிய கிராமம் ஆகும்

உக்குவெல பிரதேசத்தில் மாபேறிய,உக்குவெல,பறகஹவெல,மானம்பொட ,ரைத்தலவெல,வாரகாமுற ஆகிய கிராமங்களில் முஸ்லீங்கள் செறிந்து வாழ்கிறார்கள். எமது உக்குவெல பிரதேச முஸ்லிம்களின் வரலாறு என்பது மிகவும் தொன்மை வாய்ந்தது இலங்கை வாழ் முஸ்லிம் என்ற வகையில் எங்களுடைய உக்குவெல பிரதேச முஸ்லீம்களின் வரலாறுகளை நாங்கள் அறிந்துகொள்ள வேண்டும் . அந்தவகையில்தான் இதை எழுதியுள்ளேன் . நாம் எமது உக்குவெல பிரதேச முஸ்லிம்களின் வரலாறுகளை ஆய்வு செய்யும் போது 500 வருடங்கள் தொன்மைவாய்ந்தது என்று தோன்றுகின்றது
ஒருவிடயத்தை கூறிவிட்டு உக்குவெல முஸ்லீம்களின் வரலாற்றில் நுழையலாம்

“”தன் வரலாற்றை, பூர்வீகத்தை அறிந்து கொள்ள, ஆவணமாக்க தவறும் ஒரு சமூகம் எதிர்காலத்தில் தம் இருப்பையும் அடையாளத்தையும் இழக்க ஆரம்பிப்பதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்துகின்றது.””
இத்த கட்டுரை நீளமானது என்பதால் பகுதி பகுதியாக பதிவேற்றலாம் என நினைக்கிறேன் அந்த அடிப்படியில் ஒவ்வொரு முஸ்லீம் கிராமங்கள் பற்றிய வரலாற்றை பதிவேற்றலாம் என தீர்மானித்துள்ளேன் .

கண்டிஅரசன் “மடிகே” பொறுப்பை வழங்கியிருந்ததும் மாத்தளைக்கும்
வரக்காமுறைக்கும் இடையில் தவளன்கொயா(Tawalankoya) என்ற ஊர் இருப்பதும் இப்பகுதிக்குத்தவளம் போக்குவரத்தோடு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கும் என்பதைப் புலப்படுத்துகின்றது.

பின்னர் போத்துக்கேயர் காலத்திலும், ஒல்லாந்தர் காலத்திலும் கரையோரப் பிரதேசங்களினின்றும் விரட்டப்பட்ட முஸ்லிம்களும், தாமாகவே அப்பிரதேசத்தை விட்டு வெளியேறிய முஸ்லிம்களும் கண்டி இராச்சியத்தில் குடியேற வந்தபோது அவர்கள் உக்குவெலப் பிரதேசத்தில் மாபேரிய பகுதிகளிலும் தம் குடியேற்றங்களை அமைத்தாகக் கருதலாம்.

இவ்வாறு வந்தவர்கள் அனைவரும் வியாபாரத்தில் ஈடுபடக் கூடிய அளவிற்கு உக்குவெலப் பிரதேச வர்த்தகம், வளர்ச்சியடைந்திருக்க முடியாது. இதனால் பலர் விவசாயத்தில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.


 எனவே நீர் வசதியை அடிப்படையாக வைத்துச் சில விவசாயக். குடியேற்றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். மாபேரிய, பலகஹவெல,மானாம்பொட,

மாருகொன,நிதுல்கஹகொட்டுவ,
ரைத்தலாவெல, வரக்காமுறை, போன்ற கிராமங்களில் விவசாயத்திற்காகவும் முஸ்லிம்கள் குடியேறியிருக்கலாம்.
ஆங்கிலேயர் காலத்தில் கண்டி மாத்தளை புகையிரதபாதை அமைக்கப்பட்டபோது உக்குவெலயில் வர்த்தகத்திற்காக சில முஸ்லிம்கள் குடியேறினர்.

அவ்வாறே பெருந்தோட்டச் செய்கை வளர்ச்சியினால் ஏற்பட்ட வியாபாரப் பெருக்கத்தின் காரணமாக, உக்குவெல போன்ற இடங்களிலும் சில முஸ்லிம் குடியேற்றங்கள் உருவாகின.மேற்கூறப்பட்ட முஸ்லிம் குடியேற்றங்கள் பெரும்பாலும் சிறியனவாகவே இருந்தன. இக்குடியேற்றகள் ஆரம்பத்தில் ஒரு சில வீடு களை உள்ளடக்கியனவாகவே இருந்துள்ளன.
கி.பி. 1762-ஆம் ஆண்டு கண்டி மன்னனான கீர்த்தி சிறி ராஜசிங்க னைச்சந்திக்க வந்த ஆங்கிலேய தூதுவரான ஜோன்பிபஸ் திருகோண மலையிலிருந்து கண்டி வந்தபோதுதான் கண்ட ஊர்களைப்பற்றி சில குறிப்புகள் வரைந்துள்ளார்.இக்குறிப்புகளைப் பார்க்கும்போது இப்பாரிய பிரதேசம் குறைந்த சனத்தொகையை உடையதாகவே இருந்தது என்பது புலப்படுகின்றது.

இக்காலத்தில் மூதூருக்கும் மின்னேரியாவுக்கும் இடையில் இருந்த ஒரு முக்கியமான கிராமமாக “பங்குரான”என்றும் முஸ்லிம் கிராமம்கருதப்பட்டது.
ஆனால் இங்கு இருந்தது பத்து, பதினைந்து சிறிய வீடுகள் மாத்திரமே, கல்லால் கட்டப்பட்ட ஒரு வீடாவது இங்கு இருக்கவில்லை யென்றும் பிபஸ் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தளை மாவட்டத்தில் அமைந்திருந்த ஒரு முக்கியமான
முஸ்லிம் கிராமமான உக்குவெலயைப் பற்றி விவரிக்கும் போது அது ஏழு, எட்டு குடிசைகளைக் கொண்ட ஒர் ஊர் என்றும் தான் தங்குவதற்காக தயார் செய்யப்பட்டிருந்த வீட்டை வர்ணிக்கும் போது அது ‘கேவலமான, அசுத்தமான ஒலையால் வேயப்பட்ட ஒரு மாட் டுக் கொட்டகை” எனவும் பிபஸ் கூறிஉள்ளார்.

மாத்தளை போன்ற சிங்களக் கிராமங்களைப் பற்றியும் அவர் எதுவும் விஷேசமாக கூறவில்லை. “இப்பகுதியில் மக்கள் வசிக்கின்றனர் என்று கூறுவதற்குச் சில அறிகுறிகள் தென்படுகின்றன” என்றே கூறுகிறார்.

எனவே 1770 களில் உக்குவெல பிரதேசத்தில் அமைந்திருந்த முஸ்லிம் குடியேற்றங்கள் சிறியனவாகவும் சனத் தொகை குறைந்தனவாகவுமே இருந்திருக்க வேண்டும் என்பது புலப்படுகின்றது.
கி.பி. 1814-ஆம் ஆண்டில் உக்குவெல பிரதேசத்தில் 130 முஸ்லிம்களே வாழ்ந்தனர் எனச் சில பதிவுகள் காட்டுகின்றன.

அதில் உக்குவெலயிலேய மிக பழைமையானது தாய் கிராமமாக கருதப்படுகின்ற மாபேரிய கிராமம் பற்றியது இப்பதிவில் நோக்குவோம்
நான் பிறந்த வளர்ந்து இந்த கிராமம் என்பதால் முதலில் மாபேரிய கிராமத்திலிரந்தே ஆரம்பம் செய்வோம் . உக்குவெலப் பகுதியிலேயே மிக தொன்மையான முஸ்லிம் குடியேற்ற்மாக கருதப்படுகின்ற மாபேரிய எனும் கிராமத்தில் இருந்த பழைய பள்ளிவாசலுக்குப்பாவிக்கப்பட்டிருந்த மரச்சட்டங்கள், சலா கைகள், கதவு நிலைகள், கதவுகள் என்பன இன்றும் காணப்படுகின் அதை பல ஆண்டுகள் பழைய பள்ளியில் ஹஸரத் தங்கி இருக்கும் அறையிலும் மோதீன் அவர்களின் அறையிலும் நான் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன . அதை என் கண்ணால் கண்டு இருக்கின்றேன்.
மாபேரியில் இருந்தவர்கள் 50 வருடங்கள் வரலாறு அறிந்த பழைய
மூதாதை கர்களின் வாக்கு மூலம் இவை முந்நூறு நானூறு வருடங்கள் பழைமையானவையெனக்கருதக் கூடியவை.

இப்போது தடயங்களுக்காக விட்டு சென்று இருக்கின்றது மையவாடியில் குளிப்பதற்காக செல்ல கூடிய மகாவலி சுதுகங்கை ஆற்றிற்கு அந்த பள்ளிவாசலின் தேவைக்காக கட்டப்பட்டிருந்த படிகளின் அமைப்பும், அப்படிகளை அமைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள கருங்கற்களின் அளவும் இப்பள்ளியின் தொன்மையைப் பறைசாற்று கின்றன. இன்றும் பார்வையிடலாம்…

உக்குவெல நகரத்துக்கு அண்மையில் அமைந்திருக்கும் மாபேரிய எனும் கிராமம், மாத்தளை மாவட்டத்தில் உள்ள மிகப் பழைமையான முஸ்லிம் குடியேற்றங்களில் ஒன்றாகும்.

14-ஆம் நூற்றாண்டில், துருக்கி தேசத்தைச் சேர்ந்த நான்கு குடும்பத்தினர்கள் இப்பகுதியில் பிரயாணம் செய்ததாகவும் அவர்கள் மாபேரிய என்று இன்று அழைக்கப்படும் பிரதேசத்தில் கிடைத்த நீரைப் பார்த்து “சுத்தமான நீர்” என்று பொருள்பட தம்மொழியில் “மாபெரி” என்று கூறியதாகவும் “மாபெரி” என்ற சொல்லே காலப்போக்கில் மாபேரிய என்று திரிந்து விட்டதாகவும் பழைய வயோதிக குடி மக்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்நான்கு குடும்பங்களில் ஒன்று மாபேரியில் தங்கிவிட்டதாகவும் மற்ற மூன்று குடும்பத்தினரும் முறையே மானாம்பொடை, வரக்காமுறை, கோட்டகொடை ஆகிய மூன்று ஊர்களிலும் குடியேறியதாகவும் இவர்கள் கூறுகின்றனர். இவ்வூர் மக்கள் கூறுவது உண்மையென்றால் இரண்டு விஷயங்கள் வெளிப்படுகின்றன.

1. மாபேரிய முஸ்லிம் குடியேற்றம் துருக்கிய முஸ்லிம்களால் ஆரம்பிக்கப்பட்டது,
2. இக்குடியேற்றம் 14-ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்துவிட்டது
.
இவ் விரண்டு,”செய்திகளையும்” உண்மைபடுத்துவதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால் மாபேரிய முஸ்லிம் குடியேற்றம் பழைமை யானது என்பதற்கு திரு. AC லோஹி தரும் ஒரு தகவல் ஆதாரமாக இருக்கிறது. மத்திய மாகாணத்தில் இருந்த கிராமங்களின் நிலையை அறிவதற்கு எமக்கு பெரிதும் உதவும் திரு AC லோஹியின் நூல், மாபேரிய பள்ளிவாசல் மாருக்கொன முதியான்சே என்பவரால் கட்டப்பட்டது என்று கூறுகின்ற்து.
மானாம்பொடை கிராமத்தைப் பற்றிக் கூறும்போதுமானாம்பொடையில் ஒரு குளம் விஜயபால எனும் அரசனது காலத்தில் மாருக்கோன முதியான்ஸே என்பவரால் கட்டப்பட்டது என்று லோறி கூறுகிறார்.

1635-ஆம் ஆண்டில் தன்தந்தையான சேனரத்தின் மரணத்திற்குப் பிறகு மாத்தளை உபராச்சியத்தின் அரசனான விஜயபாலவின் ஆட்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. தனது இளைய சகோதரனும், கண்டி மன்னனுமான இரண்டாம் ராஜசிங்கன் தனது மற்ற சகோதரனும், ஊவ உபராச்சியத்தின் மன்னனுமானகுமார சிங்கனை விஷம் ஊட்டி கொன்று விட்டான் என்பதை அறிந்ததும் வரலாற்றில் கூறப்பட்டிருப்பது போல ‘ஒரு குதிரை வண்டியில் ஏறி நாட்டைவிட்டு ஓடிவிட்டான்”.

உண்மையில் தன்னுடைய சகோதரன் குமாரசிங்கனுக்கு நடந்தது தனக்கும் நடக்கலாம் என்று அஞ்சிய விஜயபால ஒல்லாந்தரிடம் ஓடி விட்டான். எனவே விஜயபால மாத்தளையிலிருந்து மிக நீண்ட காலம் ஆட்சி செய்யவில்லை. பதினைந்து வருடங்கள் ஆட்சி செய்திருப்பான் என்று வைத்துக் கொண்டாலும், அவனுடைய ஆட்சி 1650-ஆம் ஆண்டளவில் முடிந்திருக்கும்.
எனவே விஜயபால எனும் அரசனது காலத்தில் மாருக்கோன முதியான்ஸே,
மானாம்பொடை குளத்தைக் கட்டினாரென்றால் அது 1650-ஆம் ஆண் டுக்கு முன்னர் கட்டப்பட்டிருக்க வேண்டும். அப்படியாயின் மாபேரிய பள்ளி ஏறத்தாள, சமகாலத்திலேயே, அதாவது 1650-ஆம் ஆண்ட ளவில் கட்டப்பட்டிருக்கலாம். இந்த அடிப்படையில் பார்த்தால்கூட மாபேரிய குடியேற்றம் ஏறத்தாள 350 வருடங்கள் தொன்மையானது என்பது புலப்படும்.
மாபேரிய கிராமத்திற்குக் கிழக்கே தெஹிதெனிய எனும் கிராமமும், மேற்கே மானாம்பொடை கிராமமும் தெற்கே கல்லோயாவும் வடக்கே மாருக்கொன எனும் கிராமமும் எல்லைகளாக உள்ளன. இக்கிராமம் மாபேரிய, நிதுல்கஹகொட்டுவ, பரகஹவெல திகனச் சேன, தலகொட்டுவ, ஆனகால ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. எனவே தான் இப்போதும் இப்பகுதி மக்களுக்கெல்லாம். மாபேரிய பள்ளிவாசலே 18 வருடங்களுக்கு முன்பு ஜும்ஆ பள்ளிவாசலாக இருந்திருக்கிறது.

சுது கங்கை ஆற்றின் இரு மருங்குகளிலும் மக்கள் குடியேறி வாழத்தொடங்கினர். மாபேரிய கிராமத்தில் ஆரம்பத்தில் விவசாயமும்; வியாபாரமுமே முக்கியத் தொழில்களாக இருந்துள்ளன. பரகஹவெலயில் மாருக்கோண முதியான்ஸேயினால் அமைக்கப்பட்டிருந்த குளம் இவர்களுக்கு தேவையான நீரை வழங்கியிருக்கும், சிலர் ஆற்று நீரை அடிப்படையாக வைத்தும் விவசாயத்தை மேற்கொண்டனர்.

இவர்கள் வியாபாரத்திலும் முக்கியமாக ஈடுபட்டிருந்ததனால் லக்கல, பள்ளேகம, இரத்தொட்ட, தெஹிதெனிய, வெஹிகல, குரளவெல போன்ற சிங்கள ஊர்களுடன் இவர்களுக்குத் தொடர்பு ஏற்பட்டது. பலர்அப்பகுதிகளில் வயற்காணிகளை வாங்கி குத்தகைக்கு விட்டிருந்தனர். காலக் கிரமத்தில் இவை விற்கப்பட்டிருக்கலாம், அல்லது மற்ற வர்களால் பிடிக்கப்பட்டிருக்கலாம்.

உக்குவெலப் பிரதேசத்தில் உள்ள ஏனைய முஸ்லிம் கிராமங்களோடு ஒப்பிடும்போது, மூத்த கிராமமான மாபேரிய, கல்வித்துறையில் மிகவும் பின்தங்கியிருந்தது விசித்திரமானதாகவே இருக்கிறது. ரைத்தளாவளை, மாருக்கோன, பரகஹவெல மானாம்பொடை
போன்ற பகுதிகளில் 1930களில், 1940களில் கல்வியில் முஸ்லிம்கள் ஒரளவு அக்கறை காட்டுவதைப் பார்க் கின்றோம். ஆனால் இந்தளவு கூட அக்கறை மாபேரியில் காட்டப்படவில்லை.

விவசாயமும் வியாபாரமும் இப்பகுதி மக்களின் கவனத்தைத் தேவைக்கு அதிகம் ஈர்த்து விட்டனவோ தெரியாது.உக்குவெல அஜ்மீர் தேசிய பாடசாலை இப்போது இயங்கும் இடத்தில் உக்குவெல தமிழ்ப் பாடசாலை அமைக்கப்பட்ட பிறகே மாபேரிய முஸ்லிம்கள் ஒரளவுக்கு கல்வியில் அக்கறை காட்ட ஆரம்பித்திருக்கின்றனர். மாபேரியில் மர்ஹூம் ஏ.சம்மூன் மிருக வைத்தியத் துறையில் சிறந்து விளங்கினார். சிங்கள கிராமத்து மக்களும் இவருடைய உதவியைப் பெறுவர் அறிய கிடைக்கிறது. மாத்தளை சாகிராக் கல்லூரியில் நீண்டகாலமாக சேவையாற்றும் ஜனாப் SA ரபாக் அவர்களே மாபேரிய கிராமத்திலே முதன் முதலாக ஆசிரியர் நியமனம் பெற்றவராவர். ஆரம்ப ஆசிரியர்களில், மாபேரியகிராம முன்னேற்றத்தில் பெரும்கரிசனைக்காட்டிவரும் ஜனாப் ஐனுத்தீன் (குவால்தீன் மாஸ்டர்) அவர்களும் ஒருவராவார்.

காணிகளை ஒழுங்காக பதிவு செய்ய ஆரம்பித்த காலகட்டமான ஆயிரத்தி எண்ணுாற்று அறுபதுகளில் மாத்தளை மாவட்ட காணிப் பதிவுக் காரியாலயத்தில் காணப்படும் சில விவரங்கள் வரக்காமுறை, நிதுல்கஹகொட்டுவ, மாபேரிய, போன்ற பகுதிகளில் முஸ்லிம்கள் நெடுங் காலமாக வாழ்ந்திருக்கின்றனர் காணி உடைமையாளர்களாக இருந் திருக்கின்றனர் என்ற உண்மையை வெளிப்படுத்துகின்றன.

தனிப்பட்ட முஸ்லிம்களிடம் இருக்கும் பத்திரங்கள் பலவும் கி.பி. 1800-ஆம் ஆண்டளவிலே முஸ்லிம்கள் உக்குவெல பிரதேசத்தில் ஏராளமான காணிகளுக்கு உரிமையாளர்களாக இருந்தனர் என்பதைப் புலப்படுத்துகின்றன. மேற்கூறப்பட்ட கூற்றுகளுக்குச்சான்றுகளாக மாத்தளை காணிப்பதிவு காரியாலயத்தில் பெறப்பட்ட சில விவரங்கள் கீழே தரப்படுகின்றன.

(1) 1864 ஆண்டு ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி பதிவு செய்யப்பட்ட ஒரு காணிவிபரம்,

இது மாபேரிய சிற்றூர் கிராமமான நிதுல்கஹகொட்டுவ எனும் கிராமத்தில் இருந்த காணி ஒன்றை பெரிய தம்பி வெதராலயின் பிள்ளைகளான சேகு
உம்மாவும், பிச்சை உம்மாவும் மாபேரிய கிராமத்தைச் சேர்ந்த
நெய்னாபுள்ளை பக்கீர்தம்பிக்கு வழங்கியதைக் கூறுகின்றது.

முஸ்லிம் பெண்களும் வரக்காமுறையில் இருந்த தமது காணி ஒன்றை
நெய்னா புள்ளை பக்கீர்த் தம்பிக்கு வழங்கும் விவரத்தைத்தருகின்றது.
இது வெவ்வேறு முஸ்லிம் கிராமங்களுக்கிடையே இருந்த தொடர்பையும் காட்டுகின்றது.

(ii)கி.பி. 1864-ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஒரு பதிவு. இது மொஹிதீன் அப்துல் காதர் மொஹிதீன் (எனது தந்தையின் 4 வது தலமுறை) என்பவருக்கு வரக்காமுறையில் உரித்தாக இருந்த சேகுபுள்ளைவத்த என்ற காணியின்எல்லை களைக் குறிப்பிடுகின்றது.

(iii) வடக்கில் ஆதம் புள்ளையின் தோட்டம் கிழக்கில் பக்கீர்த்தம்பியின் தோட்டம் தெற்கில் சின்னக்குழந்தையின் தோட்டம் மேற்கில் உதுமான் லெப்பையின் தோட்டம்.இது வரக்காமுறையில் முஸ்லிம்களுக்கு நிறைய காணிகள்இருந்ததை உணர்த்துகின்றது.
(iv) கி.பி. 1864-ஆம் ஆண்டு பதிவு: இது பரகஹவல கிராமத்தில் வசிக்கும் சுலைமா புள்ளே சின்னத்தம்பி என்பவர் மானாம் பொடையில் உள்ள ஒரு காணியைச் சுலைமான் புள்ளையின் மகளான கொழந்தை என்பவரிடம் இருந்து வாங்கியதைக் குறிக்கின்றது.

காணிப் பதிவுக் காரியாலயத்தில் காணப்படும் இந்த ஆதாரங்களும் முன்னர் கூறப்பட்ட ஏனைய ஆதாரங்களும் ஆங்கிலேயரின்
ஆட்சிஆரம்பமானபோது உக்குவெலயின் பலபகுதிகளிலும் தாய் கிராமமான மாபேரிய முஸ்லிம் குடியேற்றங்கள் பரவலான முறையிலே அமைந்து விட்டன என்பதை உறுதிப்படுத்துகின்றன

1891 ஆம் ஆண்டு உக்குவெல மாபேரிய  முஸ்லிம் கிராமங்களின் சனத்தொகை ஆண்கள் – 30 பெண்கள்  மொ த்தம் – 53 நிதுல்கஹகொட்டுவ ஆண்கள் – 8 பெண்கள் – 25 மொ த்தம் – 43 மொத்தம் எண்ணிக்கையாக கிட்டத்தட்ட 100 முஸ்லிங்கள் ஆரம்பமாக மாபேரியில் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வரலாம்

மாத்தளையின் பெரும் வளர்ச்சியினால் அது இலங்கையில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, மாத்தளை நகர பரிபாலனம் 1888 ஆம் ஆண்டு லோக்கல் போர்ட் (Local Board) எனும் உள்ளூராட்சிமன்றத்தின் பொறுப்பில் விடப்பட்டது. இவ்வாறே உக்குவெல பிரதேசமும் சிறுநகரங்களாக உருவெடுத்திருந்தன அதில் மாபேரிய கிராமமும் இடம்பெறுகின்றது. தற்போது மாபேரயில் விளையாட்டு மைதானத்தில் றப்பர் பயிர் செய்கையபட்டுள்ளது அதே போன்று ஹனீபா ஹாஜியார் தோட்டம் தேலையார் வீடு இடப்பரப்பில் தேயிலையும் பயிர் செய்கையபட்டுள்ளது தற்போதுள்ள தேயிலை செடிகள் சான்று பகிர்கின்றன…

சிறு நகரங்கள் எனும்போது நேரான ஒரு பாதையின் பக்கங்களிலே இடை இடையே வீடுகள், ஒரு சில கடைகள் – “கால” என்றழைக்கப்பட்ட மாட்டுக்கொட்டில்கள்  (இன்னும் மாபேரியில்  ஆணகால இடம் உண்டு )- என்றே பொருள் எடுக்க வேண்டும். ஆகவே மாபேரிய கிராமம் ,அதன் சிற்ரூர் கிராமமான  மாருகொன சிறிய கிராமம் என்ற இரு கிராமங்கள் உக்குவெலயில் இரண்டு கிராமங்கள் இருந்திருக்கின்றன.இதற்கான  “செனிடரி போர்ட் (Sanitary Board) என்றழைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பில் விடப்பட்டிருந்திருக்கின்றகின்றன .

பெருந்தோட்டங்களின் வளர்ச்சியும் அதன் விளைவாக ஏற்பட்ட வர்த்தக வளர்ச்சியும், நகரங்களின் தோற்றமும் உக்குவெல முஸ்லிம் சமூகத்தைப் பெரிதும் பாதித்தன.அச்சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின. ஆரம்பத்தில் மாபேரியில் குடியேறிய முஸ்லிம்களில் கணிசமான தொகையினர் விவசாயத்தில் ஈடுப்பட்டனர் என்பது உண்மை.

ஆனால் ஏனைய இடங்களில் வசித்த முஸ்லிம்களுக்குபோலவே உக்குவெல பிரதேச முஸ்லிம்களுக்கும் வியாபாரம் என்பது அவர்களின் உடம் பின் இரத்தத்தோடு ஓடிய ஒன்றாக இருந்தபடியால், இப்போது வர்த்தக வாய்ப்புகள் பெருக ஆரம்பித்தவுடன் பலர் இந்த புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தனர்.சிலர் விவசாயத்தைக் கைவிட்டு வியாபாரத்தில் ஈடுபட்டனர்.சிலர் விவசாயம் செய்துகொண்டே வர்த்தகத்திலும் ஈடுபடலாயினர்.

தவறும் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்…”  இதுனுடன் சேர்க்க வேண்டிய விடயங்கள் இருந்தால் சேர்த்துக்கு கொள்ளலாம் உங்களக்கு அறிந்த தெரிந்த விடயங்கள் தடயங்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

உசாத்துணை நூல்கள்
——————————————
1. A.G.A. Matale – Administrative Report – 1901
2. A.C. Lawry – Gazetteer of the Central province of Ceylon.
3. Census Report – 1921
4. A.C. Lawry – Gazetteer of the Central Province of Ceylon.
5. History of Matale.
6. AC.Lawry – Gazetteer of the Central Province of Ceylon
7. S.M. Haniffa – The Great Son
8. A.G.A Matate – Administrative Report – 1921
9. GA Matate – Administrative Report – 1912
10. AGA Matate – Administrative Report – 1899

ஐதீன் சேர் (குவால்தீன் சேர்  ) அஜ்மீர் தேசிய பாடசாலை ஆசிரியர் /மஸ்ஜிதுல் அக்பர் நிர்வாக சபை ஆலோசகர் சபை தலைவர்

சட்டத்தரணி முபாரக் சேர் ( LLB )
ஹலீம்தீன் சேர் அஜ்மீர் தேசிய பாடசாலை முன்னால் ஆசிரியர்

முஹம்மத் அஸ்லம் கத்தர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*