கல்வித்துறையில் களமாடி முஸ்லிம்களினால், பெண் மேதையாக போற்றப்பட்ட லைலா மொஹிடீன்

(கல்வித்துறையில் களமாடி முஸ்லிம்களினால், பெண் மேதையாக போற்றப்பட்ட லைலா மொஹிடீன்)

யாழ்ப்பாணம், சோனக தெருவைச் சேர்ந்த மீரா மொஹிடீன் – மரியம் தம்பதியினருக்கு ஐந்து பிள்ளைகளுள் மூன்றாவது பிள்ளையாக லைலா மொஹிடீன் 29-12-1934 அன்று பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் ஆரம்பக் கல்வியைக் கற்ற முஹம்மதிய்யா கலவன் பாடசாலையில் (அல்லாபிச்சை பள்ளி) கற்றார்.
தொடர்ந்து லைலா மொஹிடீன் அவர்கள், யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றார். வேம்படி மகளிர் கல்லூரியில் மாணவியாக இருக்கும் போது எழுத்துலகில் கால் பதித்தார். லைலா மொஹிடீன் புனைக்கதை, தொடர்கதை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றிலும் சமயம், இலக்கியம், கல்வி எனும் துறைகளிலும் எண்ணற்ற கட்டுரைகள் எழுதியுள்ளார். கவிதைகளும் வடித்துள்ளார். லைலா மொஹிடீன் அவர்களின் முதலாவது சிறுகதையான “தற்கொலை” , “விதியா மதியா” என்பன வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் சஞ்சிகையில் 1949,1950 ஆம் ஆண்டுகளில் வெளியானது. இவரது தொடர்கதையான “மீண்ட இன்பம்” 1960,1961 ஆம் ஆண்டுகளில் YMMA வெளியிட்ட “வாலிப முஸ்லிம்” மாத சஞ்சிகையில் வெளியானது.
1952,1953 ஆம் ஆண்டுகளில் இவர் பாடசாலை சஞ்சிகைக்கு எழுதிய “சுயெஸ் கால்வாய் பிரச்சினை”, “பாரசீக எண்ணெய் தகராறு” என்பன பாடசாலையில் சிறந்த கட்டுரைகளுக்காக பரிசில்களை பெற்றவையாகும்.
லைலா மொஹிடீன் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் கல்வி கற்ற பின் இந்தியாவில் தமிழ்நாட்டில் திருச்சியில் அமைந்திருக்கும் Holy Cross College இல் பி.ஏ. பட்டப்படிப்பை நிறைவு செய்தார். அதன்பின்  நாடு திரும்பி தர்கா டவுண் மத்திய மகளிர் கல்லூரியில் அதிபராக 1958 இல் பதவியேற்றார். அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீட் அவர்களின் விருப்பதிற்கிணங்க மாத்தளை சாஹிரா மகளிர் கல்லூரியில் (ஆமினா) 1961 இல் அதிபராக பதவியேற்றார். அங்கிருந்து திரும்பவும் தர்கா டவுண் மகளிர் கல்லூரிக்கே அதிபராக பதவி வகித்தார். அந்த சந்தர்ப்பங்களில் தர்கா டவுண் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சனி, ஞாயிறுகளில் பகுதிநேர விரிவுரையாளராக கடமையாற்றினார். 1965 இல் டிப்ளோமா செய்வதற்காக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடர்ந்தார். டிப்ளோமாவை முடித்ததன் பின் தர்கா டவுண் மகளிர் கல்லூரிக்கே அதிபராக நியமனம் பெற்றார். தர்கா டவுண் மகளிர் கல்லூரியில் லைலா மொஹிடீன் அவர்களின் அதிபர் காலம் பொற்காலமாக அமைந்தது.
சொந்த ஊரான யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்க யாழ்ப்பாணம் கதீஜா கல்லூரியில் 1969 இல் அதிபராக நியமனம் பெற்றார். 1985 ஆம் ஆண்டு வரைக்கும் கதீஜா கல்லூரியில் அதிபராக பதவி வகித்தார். அக்காலங்கள் கதீஜா கல்லூரிக்கு பொற்காலமாக அமைந்தது. லைலா மொஹிடீன் அவர்கள் அதிபர் பதவியில் முதலாம் தரத்தை கொண்ட இவர் SLAS, SLEAS போன்ற பரீட்சைகளில் தேர்வு பெற்றார்.
அபுதாபியில் 1985 இல் இஸ்லாமிய ஆங்கிலப் பாடசாலையொன்றில் பகுதித் தலைவியாக பதவியேற்று 13 ஆண்டுகள் திறம்பட சேவையாற்றினார்.  1998 இல் இல்மா சர்வதேச மகளிர் பாடசாலையில் தனது பணியை தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு வரை திறம்பட சேவை புரிந்தார்.
2004 ஆம் ஆண்டு தொடக்கம் லைலா மொஹிடீன் இஸ்லாமிய கலாசார பண்பாட்டு அமைச்சின் ஆலோசகராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் இறுதிவரை சேவை புரிந்தார்.
லைலா மொஹிடீன் அவர்களுக்கு 2005 ஆம் ஆண்டு கலாசார அமைச்சினால் “கலாபூஷணம்” பட்டமளித்து கௌரவிக்கப்பட்டார்.
ரவீந்திரநாத் தாகூரின் பல சிறுகதைகளை இவர் மொழிபெயர்த்துள்ளார். “காபுலி வாலா”, “விடுதலை”, “நாகப்பாம்பு”ஆகியன மணிக்குரல் சஞ்சிகையில் 1960,1965 காலப்பகுதிகளில் வெளியாகின. மற்றொரு மொழிபெயர்ப்புக் கதையான “பேசும் கண்கள்” 1961 இல் வீரகேசரியில் வெளியானது.
ஆங்கிலத்தில் எழுதிய “Pearl Fishing in Ceylon” 1952 இல் வேம்படி மகளிர் பாடசாலை சஞ்சிகையிலும் “Mouwlana Azad and his Concept of Training Courses” 1965 இல் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி சஞ்சிகையில் வெளியானது.
இஸ்லாம் சம்பந்தமாக “ரமழான் மகத்துவம்” வீரகேசரியிலும் “திருக்குர்ஆன் மகத்துவம்”   ஈழ நாட்டிலும் 1970 இல் வெளியானது. பதிப்பாசிரியர் கவிஞர் சாரணா கையூம் அவர்களின் “இக்பால்” விஷேட மலரில் “இக்பால் தத்துவம்” பற்றி எழுதினார். 1969 இல் தினகரனில் ஆறுமுக நாவலர் பற்றி ஒரு கட்டுரை எழுதினார்.
தமிழ் இலக்கியங்களில் நன்கு ஊறித்திளைத்தவரான லைலா மொஹிடீன் “இலக்கியம் கண்ட ஏந்திழையர்” என்ற தலைப்பில் மணிக்குரலிலும் “அன்பினைத்திணை” பற்றி 1960 இல் காலி ஆசிரிய பயிற்சிக் கல்லூரி சஞ்சிகையிலும் “இஸ்லாமிய இலக்கியங்களில் அரபுத் தமிழ்” என்ற தலைப்பில் 1968 இல் அளுத்கம ஆசிரிய பயிற்சிக் கல்லூரி சஞ்சிகையிலும் கட்டுரைகள் எழுதி வெளியிட்டார்.
பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் வெளியிட்ட சஞ்சிகையில் “எழுத்தாளர் அபுல்கலாம் ஆஸாத்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை சிறந்த ஆய்வாக அமைந்தது.
ஒலிபரப்புத் துறையைப் பொறுத்தவரையில் வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் இவரது பங்களிப்புகள் அளப்பரியது.
லைலா மொஹிடீன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக பட்டப்பின் கல்வித் தகுதி தேர்விலே ஆக்கப் படைப்பாக “பல்கலைக்கழக புதுமுக வகுப்புக்கு பாஞ்சாலி சபதம்” என்பதனை வெளியிட்டார்.
லைலா மொஹிடீன் கல்வித்துறையில் கற்ற கல்வியும் பெற்ற அனுபவமும் அவரைக் கல்வித் துறையின் பால் நன்கு சிந்திக்கத் தூண்டின. இதன் பயனாக கல்வியோடு சம்பந்தப்பட்ட பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். “முத்தமிழில் ஒன்று நாடகம்” (1961), “கட்டுரையாக்கம்” (1962), “பாடசாலைகளில் சரித்திரம் கற்பித்தல்” (1966), “கட்புல, செவிப்புல சாதனங்கள்” (1967), “வகுப்பறையில் உளவியல்” (1969), “புதிய கல்வித்திட்டம்” (1974) இதனை விடவும் மேலும் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
லைலா மொஹிடீன் அவர்கள் 45 ஆண்டுகள் ஆசிரியையாக , அதிபராக, கல்வி நிர்வாகியாக, கல்வி ஆலோசகராக களம் பல கண்ட இவர், தனது இறுதி சில மாதங்கள் நோய்வாய்ப்பட்டு 10-05-2010 இல் தனது 75 ஆவது வயதில் வபாத்தானார்.  இவரால் யாழ்ப்பாண முஸ்லிம்கள் பெருமை அடைகிறார்கள். மேலும் இவரைப் போன்ற முஸ்லிம் பெண் மேதைகள் உருவாக வேண்டும்.

– பரீட் இக்பால் – 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*