குழந்தைகளை மொபைல் எப்படி பாதிக்கிறது?

(குழந்தைகளை மொபைல் எப்படி பாதிக்கிறது?)

இன்றைய குழந்தைகள் மொபைலில் புகுந்து விளையாடுகிறார்கள். பெற்றோர்களும் அதனைப் பார்த்து பூரித்துப் போகிறார்கள். மேலும் மேலும் அதனைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறார்கள். ஆனால் மருத்துவத்துறை இதனை கடுமையாக கண்டிக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது குழந்தைகளை அழைத்துக்கொண்டு எலும்பு சிகிச்சை நிபுணர்களிடமும் பிசியோதெரபி மையங்களுக்கும் வரும் பெற்றோர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமாக அதிகரித்திருக்கிறது. அதற்கு காரணம் குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும், பெற்றோர்களை பூரிப்பில் ஆழ்த்தும் இந்த மொபைல்தான்.

பல மணி நேரம் ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்தபடி செல்போன், டேப்லட் போன்றவற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றால் முதுகு எலும்பு மற்றும் தசைகள் பாதிப்படைகின்றன. மேலும் கண்கள், மனம், தூக்கம் என எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் குழந்தைகள் இழக்கத் தொடங்குகிறார்கள். கடைசியில் உடல் பருமன் என்ற பாதிப்பில் சிக்கிக்கொள்கின்றன.

சும்மா உட்கார்ந்தபடி தொடுதிரையை விரல்களால் தேய்த்துக் கொண்டிருக்கும் பழக்கம் விரல்களுக்கோ கைகளுக்கோ போதுமான பயிற்சியை தருவதில்லை. இயல்பாக குழந்தைகளின் விரல்கள் மற்றும் கைகள் அந்த வயதில் பெறவேண்டிய ஆற்றலைப் பெறுவதில்லை. அதனால் அவை திடமான வளர்ச்சி அடைவதில்லை. இப்படியே பழகும் குழந்தைகள் அதன்பின் பள்ளிகளில் சேரும்போது பிரச்சினை முளைக்கத் தொடங்குகிறது. அவர்கள் இரண்டு, மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து தேர்வு எழுத முடியாமல் திணறிப் போகிறார்கள். கைகள் எழுத ஒத்துழைப்பதில்லை.

மேலும், குழந்தைகள் வீட்டுக்குள்ளே அடங்கிக் கிடப்பதால், வெயிலில் அலைந்து உடல் பெறும் அவசியமான வைட்டமின்கள் எதுவுமே அவர்களுக்கு கிடைப்பதில்லை. அதோடு உடலை வருத்தி எந்த விளையாட்டிலும் ஈடுபடாததால் உடல் பருமன் ஏற்படுகிறது. இது பிறகு சர்க்கரை நோயிலும் உயர் ரத்த அழுத்தத்திலும் கொண்டு வந்து விட்டு விடுகிறது.

ஒளிரும் திரையை பல மணி நேரம் பார்ப்பதால், கண்களும் பாதிப்புக்கு ஆளாகின்றன. கண்கள் சிவக்கின்றன. விழிகள் உலர்ந்து போய் பார்வைத்திறன் பாதிக்கப்படுகிறது. மிக இளம் வயதிலேயே கிட்டப்பார்வை குறைபாடு ஏற்பட்டு விடுகிறது. பொதுவாக பெற்றோர்களும் மற்றோர்களும் பேசிப்பேசித்தான் குழந்தைகளின் பேச்சுத்திறனும் மூளைத்திறனும் வளர்ச்சி பெறும். இந்த வளர்ச்சியை மொபைல் போன்ற பொருட்களின் திரைகளில் தோன்றும் மாயக்காட்சிகள் குழந்தைகளை வெறும் பார்வையாளர் என்ற நிலைக்கு அடிமை ஆக்கிவிடுகின்றன.

இப்படி மொபைல்களுக்கு அடிமையான குழந்தைகள் யார் முகத்தையும் பார்த்துப் பேசுவதில்லை. கேட்கும் கேள்விகளுக்கு உடனே வார்த்தைகளை கோர்த்து பதில் சொல்லத் தெரிவதில்லை. மற்றவர்களோடு பழகவோ பிற குழந்தைகளோடு இணைந்து விளையாடவோ தெரியாமல் தனிமைப்பட்டு விடுகின்றனர். இது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*