யாழ்ப்பாண முஸ்லிம்களின், கல்விக்கு வித்திட்ட ஹாமீம் அதிபர்

(யாழ்ப்பாண முஸ்லிம்களின், கல்விக்கு வித்திட்ட ஹாமீம் அதிபர்)

யாழ்ப்பாணம் சோனக தெருவைச் சேர்ந்த அப்துல் ஹமீது – ஜெமீலா தம்பதியினருக்கு புதல்வனாக ஹாமீம் அவர்கள் 1937 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை முஹம்மதியா (அல்லா பிச்சை) கலவன் பாடசாலையில் ஆரம்பித்து விஞ்ஞானத்துறை பட்டப்படிப்பை தமிழ்நாட்டில் நிறைவு செய்தார்.  மேலும் கல்வித்துறையில் டிப்ளோமா பட்டமும் பெற்றார். இவர் சாவகச்சேரி ட்றிபேக் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றினார். அங்கு இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம்களின் நன்மதிப்பையும் அபிமானத்தையும் பெற்றுக் கொண்டார். 
30-06-1974 இல் ஏ.எச். ஹாமீம் அவர்கள் ஒஸ்மானியா கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக் கொண்டார். அப்போது பல வருடங்கள் அனுபவமுள்ள அதிபரிடம் காணக்கூடிய ஆளுமை அவரிடம் காணப்பட்டது. கல்வித்துறையில் மட்டுமல்ல விளையாட்டுத் துறையையும் மேம்படுத்துவதில் அரும்பாடுபட்டார். இவரது அயராத முயற்சியால் உதைப்பந்தாட்டக் குழு தேர்ச்சியடைந்த நிலையில் காணப்பட்டது. 
யாழ்ப்பாண பாடசாலைகள் விளையாட்டு சங்கத்தினால்  1976 இல் நடாத்தப்பட்ட உதைப்பந்தாட்டப் போட்டியில் ஒஸ்மானியா கல்லூரியின் மூன்றாவது பிரிவு (பதின்மூன்று வயதிற்குக் கீழ்) உதைப்பந்தாட்டக் குழுவினர் யாழ் மாவட்ட சம்பியன் விருதை பெற்றமையும் அக்குழு தோல்வி காணாத வீரர்கள் (unbeaten Champian) எனும் சாதனையை புரிந்தமையும் ஹாமீம் அதிபரின் உழைப்புக்கும் ஊக்கத்திற்கும் கிடைத்த வெற்றியாகும். 
ஹாமீம் அதிபரது  காலத்தில் கல்லூரியின் முற்றமும் வளாகமும் சீரமைக்கப்பட்டது. பசுமையான மரங்களும், மலர்ச் செடிகளும் பயன்தரு பயிர்களும் நாட்டப்பட்டு இயற்கையான குளிர்ச்சியான சூழலை உருவாக்கிய பெருமையும் ஹாமீம் அதிபரையே சாரும்.   
ஹாமீம் அதிபரது முயற்சியால் 1986  இல் பழைய மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டு அச்சங்கத்தினரால் கல்லூரியின் ஜின்னா மைதானத்தை சுற்றியுள்ள எல்லைச் சுவர்கள் யாவும் பூரணமாக்கப்பட்ட நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க விடயமாகும். 
ஒஸ்மானியாக் கல்லூரியின் வெள்ளி விழாவை ஹாமீம் அதிபர் 1987 இல் வெகு சிறப்பாக கொண்டாடினார். அல் ஹிக்மா எனும் மலர் வெளியீடும் சிறப்பான முறையில் வெளியிட அரும்பாடுபட்டார். 
யாழ் முஸ்லிம் மாணவர்களின் கல்வி மறுமலர்ச்சிக்கு அரும்பணியாற்றிய ஒரு மாமேதை என்றே ஹாமீம் அதிபரைக் குறிப்பிடுதல் வேண்டும். ஆளுமைத் திறனிலும் நிர்வாகத் திறமையிலும் கைதேர்ந்த ஹாமீம் அதிபர் யாழ் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்பைச் செய்தார். முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சி, கல்வி வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது என்பதை உணர்ந்த ஹாமீம் அதிபர் பலதரப்பட்ட இன்னல்களுக்கு மத்தியில் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியை தலைசிறந்த கல்லூரியாக மாற்றினார். 
ஹாமீம் அதிபரது பாசறையில் பயின்ற மாணவர்கள் இன்று உயர் தொழில்களில் மட்டுமன்றி தொழிலதிபர்களாகவும் பொறியியலாளர்களாகவும் விரிவுரையாளர்களாகவும் வைத்தியர்களாகவும் அதிபர்களாகவும் ஆசிரியர்களாகவும் கடமையாற்றுகின்றனர். 
ஹாமீம் அதிபர் பாடசாலை மட்டத்தில் புலமைப் பரிசில் வழங்கும் திட்டமொன்றை உருவாக்கி அதன் மூலம் பயன்பெற்ற பட்டதாரி மாணவர்கள் இலங்கையின் பல பாகங்களிலும் செயலாற்றுகின்றனர். மாணவர்களை சாதனைகளில் சளைக்காது ஈடுபடுத்துவதில் ஹாமீம் அதிபர் தனது நேரம், பொருள், உழைப்பு அனைத்தையும் அர்ப்பணம் செய்துள்ளார்கள். தனக்காக வாழாது பிறருக்காகவே உழைப்பதில் திருப்தி கண்டார்கள். 
ஹாமீம் அதிபர் முன்னாள் மன்னார் அரசாங்க அதிபர் எம்.எம். மக்பூல் அவர்களின் சகோதரியான மன்சூராவை திருமணம் செய்து இரண்டு முத்தான பெண்பிள்ளைகளான நிம்னாஸ், நிஸ்மியா ஆகியோரை பெற்றெடுத்தார்.  
ஹாமீம் அதிபர் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கோட்பாட்டைக் கொண்டே கல்லூரியை நிர்வாகம் செய்தார். 
யாழ் முஸ்லிம்கள் 1990 இல் வெளியேற்றப்பட்டதன் பின்பு ஹாமீம் அதிபர் குடும்பத்துடன் மாவனெல்லையிலும் தொடர்ந்து பாணந்துறையிலும் வசித்து வந்தார். ஹாமீம் அதிபர் 2002 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி இறையடி எய்தினார். அன்னாரின் சேவைகள் ஏனைய அதிபர்களுக்கு முன்மாதிரியான உதாரணங்களாகும்.

– பரீட் இக்பால் –

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*