• Sun. Oct 12th, 2025

முந்திரி பருப்பு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா?

Byadmin

Feb 5, 2018

(முந்திரி பருப்பு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா?)

தினமும் முந்திரி பருப்பு சாப்பிடுபவர்கள் உடலில் கெட்ட கொழுப்பு மாறி நல்ல கொழுப்பு உருவாகும். மேலும், ரத்த அழுத்தம் அளவும் மிகவும் குறையும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சுவை அதிகம் கொண்ட உணவு பொருட்களில் முதன்மையான இடத்தை பிடித்திருப்பது முந்திரி பருப்பு.

ஆனால் முந்திரி பருப்பு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் சீர்கெட்டு விடும், கெட்ட கொழுப்பு உருவாகி ரத்த குழாய்களை அடைத்துக் கொள்ளும், மாரடைப்பு ஏற்படும் என இதுவரை டாக்டர்கள் கூறிவந்தனர். ஆனால் இப்போது நடத்தப்பட்டுள்ள ஒரு ஆய்வில் முந்திரி பருப்பு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று தெரியவந்துள்ளது.

முந்திரி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மற்றும் மத்திய வர்த்தக அமைச்சகம் ஆகியவற்றின் சார்பில் சென்னையில் உள்ள மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி மையத்தின் டாக்டர் மோகன் தலைமையிலான குழுவினர் இதுசம்பந்தமாக ஆய்வு நடத்தி உள்ளனர்.

இதன் அறிக்கை ஊட்டச்சத்து தொடர்பான சர்வதேச ஆய்வு அறிக்கை பத்திரிகையில் வெளிவந்துள்ளது. இந்த ஆய்வு 2-ம் வகை நீரிழிவு நோய் உள்ள 300 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது. 300 பேரை பாதியாக பிரித்து அந்த நபர்களுக்கு தினமும் 30 கிராம் பச்சை முந்திரி வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு முந்திரி வழங்கப்படவில்லை.

3 மாதம் இவ்வாறு வழங்கப்பட்ட பின் அவர்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். அதில் தினமும் முந்திரி பருப்பு சாப்பிட்டவர்கள் உடலில் கெட்ட கொழுப்பு மாறி நல்ல கொழுப்பு உருவாகி இருந்தது. மேலும், ரத்த அழுத்தம் அளவும் மிகவும் குறைந்திருந்தது.

உயர் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தவர்களுக்கு 5 மி.மீ. அளவுக்கு ரத்த அழுத்தம் குறைவாக காணப்பட்டது. அதேபோல உயர் அடர்த்தி கொழுப்பு புரதத்தில் மாற்றம் ஏற்பட்டு நல்ல கொழுப்பாக மாறி இருந்தது. இது 2 மில்லிகிராம் அளவிற்கு உயர்ந்திருந்தது.

முந்திரி சாப்பிட்டவர்களுக்கு உடலில் வேறு தீங்குகளோ, உடல் எடை அதிகரிப்போ, சர்க்கரையின் அளவு அதிகரிப்போ ஏற்படவில்லை. பாதாம் பருப்பு, வால்நட்ஸ் போன்ற கொட்டை பொருட்களை சாப்பிட்டால் உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் முந்திரி பருப்பில் இந்த பலன்கள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்போது முந்திரி பருப்பில் அதைவிட நல்ல பலன் உள்ளது இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. கொட்டை சம்பந்தமான உணவுகளில் (நட்ஸ்) நல்ல கொழுப்பு அதிகமாக இருக்கிறது.

பொதுவாக இந்தியர்களின் உணவு பொருட்களில் கார்போ ஹைட்ரேட் தான் அதிகமாக உள்ளது. நமது உடலுக்கு கிடைக்கும் 64 சதவீத சக்தி நாம் சாப்பிடும் தீட்டப்பட்ட அரிசி, சுத்தப்படுத்தப்பட்ட கோதுமை போன்றவற்றில் இருந்து கிடைக்கிறது. 7.8 சதவீதம் சக்தி மட்டுமே நல்ல கொழுப்பு கொண்ட பொருட்களில் இருந்து கிடைக்கிறது.

ஆனால் நல்ல கொழுப்பு பொருட்களில் இருந்து கிடைக்கும் சக்தி 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை தேவை என்று மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி டாக்டர் மோகன் கூறும்போது, கொட்டைகள் மற்றும் முந்திரி பருப்பில் அதிக அளவில் முழுமைப்படுத்தப்பட்ட நல்ல கொழுப்பு இருக்கிறது.

அதே நேரத்தில் எண்ணை, நெய், இறைச்சி போன்றவற்றில் மோசமான கொழுப்பு இருக்கிறது. முந்திரி பருப்பில் 20 சதவீதம் வரை முழுமைப்படுத்தப்பட்ட நல்ல கொழுப்பு உள்ளது. அதே நேரத்தில் முந்திரியை அப்படியே பச்சையாக சாப்பிட வேண்டும்.

அதில் உப்பு சேர்த்தாலோ அல்லது மற்ற மசாலாக்களை சேர்த்தாலோ அதன் பலன் இல்லாமல் போய்விடும் என்று கூறினார். நாம் சாப்பிடும் உணவில் 60 இருந்து 65 சதவீதம் கார்போ ஹைட்ரேட்டாகவும், 15-ல் இருந்து 25 சதவீதம் கொழுப்பாகவும் மற்றவை புரோட்டீனாகவும் இருக்கிறது.

தினமும் 30 கிராம் முந்திரி பருப்பை காலையிலும் அல்லது மாலையிலும் சாப்பிட்டால் கார்போ ஹைட்ரேட் சதவீதம் குறைந்து நல்ல கொழுப்பு சக்தி அதிகம் உடலுக்கு கிடைக்கும். முந்திரி பருப்பு சாப்பிடுபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் 1.9 மடங்கு குறைந்திருந்தது.

16 மடங்கு நல்ல கொழுப்பு அதிகரித்திருக்கிறது. குறிப்பாக ஆசிய மக்களிடம் ரத்தத்தில் உள்ள கொழுப்பு அமிலத்தின் தன்மை அதிகமாக இருக்கிறது. இதனால் தான் நீரிழிவு நோயும் ஏற்படுகிறது. 86 சதவீத ஆண்களுக்கும், 98 சதவீத பெண்களுக்கும் ரத்த கொழுப்பு அமிலத்தன்மை அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

முந்திரி பருப்பு சாப்பிட்டால் இதன் தாக்கம் குறையும் என்று தெரியவந்துள்ளது. முந்திரி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டாலும் ஆய்வு முழுவதும் தன்னிச்சையாக எந்த அழுத்தத்துக்கும் இடமளிக்காமல் நடத்தப்பட்டிருப்பதாக டாக்டர் மோகன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *