• Sat. Oct 11th, 2025

பாகிஸ்தான் பொதுத்தேர்தல் – பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது

Byadmin

Jul 25, 2018

(பாகிஸ்தான் பொதுத்தேர்தல் – பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது)

பாகிஸ்தானில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து அக்கட்சியின் 5 ஆண்டுகால ஆட்சி கடந்த மே மாதம் முடிவுக்கு வந்தது. இதனால் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 25-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிப்பதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 342. இவர்களில் 272 பேர் மக்களால் நேரடியாக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். மீதமுள்ள 70 இடங்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மை வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே ஆட்சியை கைப்பற்ற ஒரு கட்சியோ அதன் கூட்டணியோ 172 இடங்களில் வென்றாகவேண்டும். எனவே, 272 பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. அத்துடன் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துன்க்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் இன்று தேர்தல் நடத்தப்படுகிறது.

நாடு முழுவதும் மொத்தம் 10 கோடியே 59 லட்சம் பேர் வாக்காளர்கள் உள்ளனர். இதில் பாராளுமன்ற தொகுதிகளுக்கு 3,459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 577 மாகாண சட்டசபை தொகுதிகளுக்கு 8,396 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஓட்டுப் பதிவிற்காக நாடு முழுவதும் 89 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. பாதுகாப்பு பணியில் 4 லட்சம் போலீசாரும், 3,71,000 ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத் தேர்தலில் ஏராளமான கட்சிகள் போட்டியிட்டாலும் ஆளும் கட்சியான நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ- இன்சாப், மறைந்த பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை பிரதான கட்சிகளிடையே நேரடி போட்டி உள்ளது.

ஓட்டுப் பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது.  ஓட்டுப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 24 மணி நேரத்தில் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகிவிடும் என்று பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. #PakistanElection2018 #PakistanElection #ImranKhan #ShabazSharif

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *