(மியான்மர் ராணுவம் மீது தடை – ரோஹிங்கியா இன அழிப்பு என குறிப்பிட்ட அமெரிக்கா)
மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ராணுவத்தினராலும் இனவாதிகளினாலும் கொன்று குவிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
பல்லாயிரக்கணக்கானோர் பலியான நிலையில், உயிரை காக்க லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக வங்கதேசத்தை நோக்கி படையெடுத்துள்ளனர்.
வங்கதேசத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இவர்களை சொந்த நாட்டுக்கே அனுப்பும் ஒப்பந்தம் வங்கதேசம் – மியான்மர் இடையே கையெழுத்தானாலும், இதுவரை அகதிகளாக உள்ளவர்கள் நாடு திரும்பவில்லை.
மியான்மரின் செயல்பாட்டுக்கு ஐ.நா, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் கண்டனம் தெரிவித்ததோடு, ரோஹிங்கியாக்கள் மீண்டும் கன்னியத்துடன் வாழ மியான்மர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில், மியான்மர் ராணுவம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்திய ஒடுக்குமுறையை ‘இன அழிப்பு’ என்று அமெரிக்கா கூறியுள்ளது. மனித உரிமைகளை மீறும் வகையில் செயல்பட்ட மியான்மர் ராணுவத்தை சேர்ந்த அதிகாரிகள் மீது தடை விதிப்பதாகவும் அமெரிக்க கருவூல துறை அறிவித்துள்ளது.