முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட 5 பேரும் தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்துச் செய்து, தம்மை வழக்கில் இருந்து முற்றாக விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றினால் இன்று(11) நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நடந்து வந்த நிலையில், இன்று அந்த வழக்கை ஆராய்ந்த பிரதம நீதியரசர் பியசாத் டெப் தலைமையிலான ஐந்து நீதியரசர்கள் அமர்வு குறித்த மனுவினை நிராகரித்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு ஒக்டோபர் எட்டாம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது முல்லேரியா பிரதேசத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குறித்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த கொழும்பு மேல் நீதிமன்றம் துமிந்த சில்வா உட்பட 5 பேருக்கு கடந்த 2016ம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தமையும் குறிப்பிடத்தக்கது.