• Sat. Oct 11th, 2025

துபாயில் ஓட்டுனர் இல்லா பறக்கும் டாக்சி அறிமுகம்

Byadmin

Jun 20, 2017

2 பேர் பயணம் செய்யும் ‘ஓட்டுனர் இல்லா பறக்கும் டாக்சி’யின் சோதனை ஓட்டம் துபாயில் வெற்றி பெற்றுள்ளது.

இது குறித்து துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2030-ம் ஆண்டுக்குள் 25 சதவீத போக்குவரத்தானது தானியங்கி தொழில்நுட்பத்தில் இயக்கப்பட வேண்டும் என்பது துபாய் அரசின் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து உத்திகளில் ஒன்றாக இருக்கிறது.

அந்த வகையில் தரைவழி போக்குவரத்தில் ஏற்கனவே ஓட்டுனர் இல்லா பயணிகள் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. அதே போல் இந்த ஆண்டில் ஓட்டுனர் இல்லா பறக்கும் வாகனங்களை அறிமுகம் செய்வதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன.

ஜெர்மனி நாட்டின் ‘வோலோகாப்டர்’ நிறுவனம் தயாரித்துள்ள ‘ஓட்டுனர் இல்லா பறக்கும் டாக்சி’ ஒன்று சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் அறிமுகம் செய்யப்பட்டு சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்த பறக்கும் டாக்சியில் 2 பேர் பயணம் செய்யலாம்.

இந்த டாக்சியில் உள்ள மோட்டார்கள் அனைத்தும் மின்சாரத்தால் இயங்கக்கூடியது. பறக்கும் டாக்சியின் உச்சகட்ட வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டராகும். சராசரியாக 50 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து 30 நிமிடங்கள் வானில் இந்த டாக்சியால் பறக்க முடியும். இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய 40 நிமிடங்கள் தேவைப்படு கிறது. ஒரு விமானத்தில் உள்ளதுபோல் பாராசூட் உள்பட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் இதில் உள்ளன.

இந்த பறக்கும் டாக்சியானது, ஹெலிகாப்டர் போல நின்ற இடத்தில் இருந்து வானில் பறக்கவும், கீழே இறங்கவும் கூடிய வசதி உடையது. இதில் பயணிகள் செல்ல வேண்டிய இடம், முகவரியை பதிவு செய்தவுடன், இந்த பறக்கும் டாக்சி, தானாக வானில் பறக்க தொடங்கி, குறிப்பிட்ட இடத்திற்கு பாதுகாப்பாக கொண்டு சேர்த்து விடும்.

இந்த டாக்சியை எந்த ஒரு தனி நபரும் இயக்கலாம். அதற்கு விமானம் ஓட்டுவதற்கான உரிமம் வைத்திருக்க வேண்டும்.

தற்போது இந்த பறக்கும் டாக்சியின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. அனைத்து வகையான பாதுகாப்பு சோதனைகளும் நிறைவடைந்து இந்த வாகனம் போக்குவரத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த பறக்கும் டாக்சிகளை வர்த்தக ரீதியில் தயாரித்து தருவதற்கு ஜெர்மனி நாட்டின் ‘வோலோகாப்டர்’ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் துபாயில் பறக்கும் டாக்சிகள் செயல்பட தொடங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *