• Sun. Oct 12th, 2025

பலஸ்தீனுக்கு ஆதரவாக பேசியதால் CNN இனால் பணிநீக்கம் செய்யப்ட்ட ஊடகவியலாளர் மார்க் ஹில்….

Byadmin

Dec 15, 2018

(பலஸ்தீனுக்கு ஆதரவாக பேசியதால் CNN இனால் பணிநீக்கம் செய்யப்ட்ட ஊடகவியலாளர் மார்க் ஹில்….)

ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம்
(மூலம்: அல்ஜஸீரா)
பலஸ்தீன மக்களின் தாயக உரிமைப் போராட்டங்களை நியாயப்படுத்தி
உரையாற்றினார் எனும் குற்றச்சாட்டில் பல்கலைப் பேராசிரியர் மார்க் ஹில் என்பவரை அமெரிக்காவின் பிரபல ஊடகம் CNN அண்மையில் பணிநீக்கம் செய்துள்ளமையானது நடுநிலை ஊடக அமைப்புக்கள் மத்தியில் பாரிய சலனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் CNN ஊடகத்தின் இஸ்ரேல் சார்புநிலைப் போக்கு மீள வலியுறுத்தப்பட்டுள்ளதாக வாதிடுகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத் தொடரொன்றில் அண்மையில் உரையாற்றியிருந்த பேராசிரியர் மார்க் ஹில் பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் அடக்குமுறைகள் மற்றும் பலஸ்தீனியர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் என்பவற்றை கண்டித்துப் பல நியாயமான கருத்துக்களை முன்வைத்திருந்தார். அவர் தனது உரைக்கு வலு சேர்க்கும் வகையில் பல்வேறு ஆதாரபூர்வமான செய்திகளை எடுத்துக்காட்டியே பேசியிருந்தார்.

பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலிய அரசின் ஓரவஞ்சனையான சட்டங்கள், இஸ்ரேலிய படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல்கள், பலஸ்தீன சிறுவர்களை கைது செய்து துன்புறுத்தும் விதம், இஸ்ரேலிய நீதிமன்றங்களின் பாரபட்சமான போக்குகள், பலஸ்தீன மக்களின் சுதந்திர நடமாட்டத்துக்கு ஊறு செய்யும் இஸ்ரேலிய படையணிகள் என அத்தனை மனித உரிமை மீறல்களையும் ஆதாரபூர்வமாக ஆவணங்களுடன் வலு சேர்த்துப் பேசியிருந்தார் மார்க் ஹில்.

‘உண்மைக்கே முதலிடம்’ (Facts first) எனும் கொள்கை சுலோகத்தை கொண்டிருக்கும் CNN ஊடக நிறுவனத்தின் செயற்பாடுகளோ அதன் தொனிப் பொருளை கிஞ்சிற்றும் பிரதிபலிப்பதாக இல்லை எனவும் மாற்றமாக நகைப்புக்கிடமாகவே உள்ளது எனவும் சுதந்திர ஊடகவியலாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இயங்கி வரும் பல அமைப்புக்களில் காத்திரமான அமைப்பான Anti-Defamation League (ADL) எனும் இயக்கம் பேராசிரியர் மார்க் ஹில்லின் நடுநிலையான உரையை எதிர்த்து பலத்த கண்டனக் குரல்களை எழுப்பியதை அடுத்தே CNN நிறுவனம் அவருடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதாக பகிரங்க அறிவிப்பு விடுத்தது.
குறித்த காரணங்களுக்காகவே பேராசிரியர் மார்க் ஹில்லை பணிநீக்கம் செய்துள்ளோம் என CNN ஊடக நிறுவனம் காரணங்களை குறித்துக் காட்டாத போதும் பகுத்தறிவு சிந்தனை பெற்ற எவரும் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தையும் அதன் பின்னால் இஸ்ரேல் சார்பு போக்கு அப்பட்டமாக திகழ்வதையும் அறிந்து கொள்வர்.

ஊடக சுதந்திரம், நடுநிலைப் போக்கு பற்றி உலகத்துக்கே பாடம் சொல்லிக் கொடுக்கும் அமெரிக்க ஊடகங்கள் இவ்வாறு அநீதியான விடயங்களுக்கு எவ்வித குற்ற உணர்வுமின்றி துணை போவது இது முதல் தடவையல்லவே.
‘பலஸ்தீன் நாட்டை முழுவதுமாக விடுவிக்க வேண்டும்… அதன் நதிகள் தொடக்கம் கடற்பரப்பை அதனிடமே கையளிக்க வேண்டும்’ என்பது பலஸ்தீன விடுதலைக்காக போராடும் ஹமாஸ் அமைப்பின் சுலோகமாகும். இதே நேரடி வசனங்களை பேராசிரியர் மார்க் ஹில் ஐ.நா. சபை உரையின்போது பிரயோகித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்காவில் தொழிற்படும் இஸ்ரேலிய ஆதரவு அமைப்புக்கள் CNN ஊடக நிறுவனத்திற்கு அழுத்தங்களை பிரயோகித்தன. இதன் விளைவாகவே மார்க் ஹில்லின் பணி நீக்கம் இடம்பெற்றுள்ளதாக அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
பலஸ்தீன மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பற்றி சர்வதேச மட்டத்தில் ஆதாரபூர்வமாக கருத்துக்களை முன்வைப்பவர்கள் மீது தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் போன்ற பிம்பத்தை ஏற்படுத்த முனைவதில் இஸ்ரேலிய ஆதரவு அமைப்புக்கள் பிரயத்தனம் கொண்டு செயற்பட்டு வருகின்றன.
பலஸ்தீனில் இஸ்ரேலிய படைகள் இதனையே செய்து வருகின்றன. பலஸ்தீன மக்களின் கருத்துரிமை பறிக்கப்பட்டுள்ளது. அதற்கு சார்பாக பல்வேறு சட்டங்களை பிரத்தியேகமாக இஸ்ரேல் கொண்டுவந்துள்ளது. எந்தளவுக்கெனில், பலஸ்தீன மக்களின் மீதான அடக்குமுறை பற்றி கவிதை வடித்தால் கூட சிறைவாசத்தை அனுபவிக்க வேண்டும். அது முகநூல் கவிதையாக இருப்பினும் சரியே.

அமெரிக்காவும் இதற்கு விதிவிலக்கல்ல. பலஸ்தீன மக்கள் படும் துயரம் பற்றி பொதுவெளியில் ஊடகவியலாளர்கள் பேசுவதற்கும் தயங்குகின்றனர். பணிநீக்கம் தொடர்பில் அஞ்சுகின்றனர். மார்க் ஹில்லுக்கு முன்னரும் கூட பல்வேறு ஊடகவியலாளர்களை CNN ஊடக நிறுவனம் இதே காரணத்திற்காக இடைநிறுத்தம் செய்துள்ளது.

CNN நிறுவனத்தின் இச்செயற்பாடு இஸ்ரேலிய ஆதரவு அமைப்புக்களின் நலன் காப்பதாகவே அமைந்துள்ளது. பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முனையும் எவரையும் முளையிலேயே கிள்ளி எறியும் இஸ்ரேலிய ஆதரவு அமைப்புகளின் கெடுநோக்கிற்கு பகிரங்கமாகவே ஊடக நிறுவனங்கள் இசைந்து கொடுக்கின்றன.

இது இஸ்ரேல் – பலஸ்தீன் விவகாரம் தொடர்பில் மத்தியஸ்தம் பேணுவதாகவும் நடுநிலை வகிக்கும் வகிபாகத்தில் இருப்பதாகவும் காட்டிக் கொண்டிருக்கும் அமெரிக்கா சர்வதேச மட்டத்தில் பல கேள்விகளை எதிர்கொண்டுள்ளது.

பலஸ்தீனிய உரிமைப் போராட்டம் என்று வருகின்ற போது CNN உள்ளிட்ட மேற்குலகின் பொதுசன ஊடகங்கள் உண்மை நிலையை மறைத்து, போலியான தோற்றப்பாட்டையே மக்களுக்கு காட்டி வருகின்றன.
பலஸ்தீன போராட்டக்காரர்கள் மீதான இஸ்ரேலிய படையினரின் அடக்குமுறைகளை தெரிவிக்கும் இடங்களில் CNN போன்ற ஊடக நிறுவனங்கள் கையாளும் வார்த்தைப் பிரயோகங்களோ வேறு விதமாக இருக்கும். அவ்வாறான இடங்களில் “மோதல்கள்” எனும் வார்த்தையையே பயன்படுத்தும்.

ஆயுதமேந்திய இஸ்ரேலிய படையினரும் கோஷங்களிடும் பொதுமக்களும் சம பலத்துடன் மோதிக் கொண்டதைப் போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முனையும். உண்மையில் நடந்திருப்பதோ வேறு. பலஸ்தீன அப்பாவிப் பொதுமக்கள் இஸ்ரேலுக்கு எதிராக கோஷம் எழுப்பிய குற்றச்சாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பர்.

இது ஊடக தர்மத்திற்கு முரணானது மட்டுமன்றி பொய்யான செய்திகளை பரப்பிய குற்றச்சாட்டுக்களையும் சுமக்க நேரிடும்.
கருத்து சுதந்திரத்துக்கு போராட வேண்டிய, உண்மையை முதலில் வெளிக்காட்டப் வேண்டிய, அதிகாரத்தை நோக்கிய சுட்டு விரல் நீட்டி கேள்வி கேட்கப் போராட வேண்டிய பொதுசன ஊடக நிறுவனங்கள் உண்மையை மூடி மறைப்பதற்கும் திரிபுபடுத்தி போலி பிம்பங்களை ஏற்படுத்தவும் பிரயத்தனம் கொண்டு செயற்பட்டு வருகின்றமை வேதனைக்குரியது.

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஆதிக்கம் தொடாந்து நிலைத்திருக்க வேண்டுமாயின் மத்திய கிழக்கில் வந்தேறுகுடியாக வந்தமர்ந்து இன்று முழு மத்திய கிழக்கிற்கும் அச்சுறுத்தலாக விளங்கும் இஸ்ரேல் பலமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பு.

இஸ்ரேலின் பலம்தான் அமெரிக்கா தனது ஆதிக்கத்ததை மத்திய கிழக்கின் மீது பிரயோகிப்பதற்கும் மத்திய கிழக்கில் தொடர்ந்து அமைதியின்மை ஏறபடுத்துவதற்கும் இலகுவாக அமையும். கடந்த காலங்களில் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு திரைமறைவில் செயற்பட்டது அமெரிக்காதான் என சர்வதேச அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

ஈராக் மீதான படையெடுப்பு முதல் ஜெரூசலம் இஸ்ரேலின் தலைநகர் எனப் பிரகடனப்படுத்தியது வரை மத்திய கிழக்கின் வரலாற்று நெடுங்கிலும் அமைதியின்மையை அமெரிக்கா வலிந்து உருவாக்கியிருக்கிறது என்பதை அரபுலகில் இடம்பெற்று வருகின்ற வன்முறைகளையும் அவற்றின் அழிவுகளினதும் பின்னணிகளைக் கொண்டு உணர்ந்து கொள்ள முடியும்.

மத்திய கிழக்கில் இயங்கும் பல்வேறு கிளர்ச்சிக்குழுக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயுதங்களை விற்பனை செய்தும் ஆயுங்களை வழங்கியும் முஸ்லிம்களை முஸ்லிம்களோடு மோதவிட்டு இன அழிப்புச் செய்து கொண்டிருக்கும் அமெரிக்க போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் திட்ட வரிசையில் ஒன்றாக சிறிது காலம் அமைதியாக இருந்த பலஸ்தீன் மண்ணில் மீண்டும் இஸ்ரேல் மூலம் இன அழிப்புச் செய்யும் நடவடிக்கைக்கு உந்து சக்தி வழங்கப்பட்டிருக்கிறது அந்த உந்து சக்தியின் ஒரு வெளிப்பாடே ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து ஜெரூசலம் நகரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டமை.

பலஸ்தீன்- இஸ்ரேல் விவகாரத்தை நடுநிலையாக கையாள்வதைக் காட்டிலும் நியாயத்தின் பக்கம் நிற்பதைக் காட்டிலும் அரசியல் பாதுகாப்பு அந்தஸ்துக்கு CNN முக்கியத்துவம் கொடுத்து வருகின்றமை ஊடக தர்மங்களை படுகொலை செய்வதாக சர்வதேச ஊடக அமைப்புக்கள் குற்றம்சாட்டி வருகின்றன.

மார்ச்சில் காசாவில் இடம்பெற்ற சொந்த நிலங்களை நோக்கிய அமைதிப் பேரணியின் போது இஸ்ரேலிய ஸ்னைப்பர் படையணியினர் ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்களை சுட்டுக் குவித்த நிகழ்வை இஸ்ரேலிய சார்பு ஊடகங்கள் வெளிக்காட்டிய விதம் இதற்கு தக்க சான்று.
ஆயுதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் பேரணியில் கலந்து கொண்டவர்களை சர்வதேச ஊடகவியலாளர்கள் சாட்சி பகர்கின்றனர். இருப்பினும், இஸ்ரேலிய படையினருக்கு அச்சுறுத்தல் விடுத்தமையால் பாதுகாப்பு நோக்கம் கருதி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள நேரிட்டதாக மேற்கு ஊடகங்கள் உண்மைகளை இருட்டடிப்பு செய்தன.

பலஸ்தீனர்களின் உரிமைப் போராட்டங்களுக்கு காத்திரமாக குரல் கொடுப்போரின் குரல்வளை நசுக்கப்படினும் அதற்கான எதிரொலிகள் சர்வதேச மட்டத்தில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும் என்பதற்கு பேராசிரியர் மார்க் ஹில் பணி நீக்கம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளும் கண்டனங்களும் ஆதரவுக் குரல்களும் சான்று பகர்ந்த வண்ணமே உள்ளன.

நன்றி: நவமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *