புனித நோன்பு காலத்தில் பொறுமை, நிதானத்தை கடைப்பிடித்து நல்லமல் புரிந்த முஸ்லிம்கள் இனவாதப்பூச்சாண்டிகளுக்கு இரையாகாமல் தொடர்ந்தும் பொறுமை காத்து நாட்டுக்கான நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டுமென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது: இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ரமழான் இறைவிசுவாசிகளை அல்லாஹ்வுடன் நெருக்கமாக்கும் விஷேட நல்லமலாகும். ரமழானின் பயிற்சி மனிதனின் ஏனைய அமல்களை பரிசுத்தமாக்குகின்றது. இரவில் விழித்திருந்தும், பகலில் நல்லமல்கள் புரிந்தும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுள்ள நாம் ஏனைய சமூகத்தினருக்கும் முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும். நாட்டில் இன்று சில இனவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கும் போலிப் பிரசாரங்களை இஸ்லாமியர்களான நாம், பொறுமை, புரிந்துணர்வு, விசுவாசம் என்பவற்றை வெளிப்படுத்துவதன் மூலமே தோற்கடிக்க முடியும். பல்லாண்டு காலமாக சக மதத்தவர்களுக்கு மத்தியில் புரிந்துணர்வுடன் வாழ்ந்த முஸ்லிம்களை இன்று ஒரு சிலர் துரோகிகளாக காட்ட முனைகின்றனர்.
இவர்களின் திட்டங்களுக்கு பலியாகாமல் பெரும்பான்மையினரின் மனங்களை வென்றெடுத்து இனவாதிகளைத் தோற்கடிப்பதே முஸ்லிம்களுக்கு இன்றுள்ள சாத்தியமான ஒரேவழியெனவும் அவர் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.