• Sun. Oct 12th, 2025

வணிக நோக்கில் திமிங்கல வேட்டையை மீண்டும் தொடங்குகிறது ஜப்பான்

Byadmin

Dec 26, 2018

(வணிக நோக்கில் திமிங்கல வேட்டையை மீண்டும் தொடங்குகிறது ஜப்பான்)

ஜப்பானில் திமிங்கல இறைச்சி விரும்பி உண்ணப்படுகிறது. கடலோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல நூற்றாண்டுகளாக திமிங்கல இறைச்சியை விரும்பி சாப்பிட்டாலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகே அதன் நுகர்வு அதிகரித்தது. தற்போது திமிங்கல இறைச்சி சாப்பிடுவது குறைந்துள்ளது. ஒரு சில பகுதிகளில் இறைச்சிக்காக திமிங்கலங்கள் வேட்டையாடப்படுகின்றன.

அதேசமயம் அறிவியல் ஆராய்ச்சிக்காக ஜப்பான் அரசு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு திமிங்கலங்களை வேட்டையாடியது. பின்னர் அதன் இறைச்சி விற்பனை செய்யப்பட்டது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமிங்கல வேட்டையில் ஈடுபடக்கூடாது என்று சர்வதேச நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. அந்த ஒரு வருடம் மட்டும் வேட்டையை நிறுத்திய ஜப்பான், அடுத்த ஆண்டில் இருந்து வேட்டையை மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில், வரும் ஜூலை மாதத்தில் இருந்து வர்த்தக அடிப்படையில் திமிங்கல வேட்டையை மீண்டும் தொடங்க உள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

வர்த்தக அடிப்படையிலான திமிங்கல வேட்டைக்கு சர்வதேச திமிங்கல வேட்டை தடுப்பு ஆணையம் (ஐடபுள்யூசி) தடை விதித்துள்ளது. எனவே, அந்த ஆணையத்தில் இருந்து விலகி விட்டு, திமிங்கல வேட்டையைத் தொடங்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது. திமிங்கல இறைச்சி சாப்பிடுவது தங்கள் கலாச்சாரத்தின் ஒரு அங்கம் என்றும் ஜப்பான் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஜப்பானின் இந்த அறிவிப்பு எதிர்பார்த்த ஒன்றுதான், ஆனால் ஜப்பான் அரசின் இந்த நடவடிக்கை கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று  என்று ஐடபுள்யூசி எச்சரித்துள்ளது. அதாவது, ஐடபுள்யூசியால் பாதுகாக்கப்படும் மின்கே போன்ற அழிந்துவரும் திமிங்கல இனங்களை ஜப்பான் இனி தாராளமாக வேட்டையாடும் என கூறப்படுகிறது.

இதற்கிடையே ஜப்பான் பிராந்திய நீர்ப்பரப்பு மற்றும் பொருளாதார மண்டலங்களில் வர்த்தக அடிப்படையிலான திமிங்கல வேட்டை கட்டுப்படுத்தப்படும் என்று அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். எனவே, அண்டார்டிக் கடல் மற்றும் தென்துருவத்தில் திமிங்கல வேட்டையை ஜப்பான் நிறுத்தும். எனினும் ஜப்பானின் திமிங்கல வேட்டைக்கு சர்வதேச நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #JapanWhaleHunting

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *