• Sat. Oct 11th, 2025

என்னை கொல்ல டிரம்ப் உத்தரவு: வெனிசூலா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு

Byadmin

Jan 31, 2019

(என்னை கொல்ல டிரம்ப் உத்தரவு: வெனிசூலா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு)

வெனிசூலாவில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு அமெரிக்காதான் காரணம் என குற்றம் சாட்டி வரும் அந்நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ அமெரிக்கா உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வதாக சமீபத்தில் அறிவித்தார்.

அதனை தொடர்ந்து நிகோலஸ் மதுரோவுக்கு மேலும் அழுத்தம் தரும் வகையில் அந்நாட்டின் அரசு எண்ணெய் நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது.

இந்த நிலையில், தன்னை கொலை செய்ய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக நிகோலஸ் மதுரோ பரபரப்பு குற்றம் சாட்டினார். ரஷியாவை சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் இதுபற்றி அவர் கூறியதாவது:-

என்னை கொலை செய்யும்படி கொலம்பியா அரசு மற்றும் கொலம்பியாவை சேர்ந்த கொலைகார கும்பல்களுக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் என்பதில் சந்தேகமே இல்லை. ஒரு நாள் எனக்கு ஏதாவது நடக்கலாம். எனக்கு என்ன நேர்ந்தாலும் அதற்கு டிரம்ப் மற்றும் கொலம்பியா அதிபர் இவான் டியூக் தான் பொறுப்பாவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலைநகர் கராக்கசில் நடந்த ராணுவ தின நிகழ்ச்சியின் போது, ஆளில்லா விமானங்கள் மூலம் அதிபர் நிகோலஸ் மதுரோவை கொல்ல முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது. #VenezuelaCrisis #NickolasMaduro #DonaldTrump

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *