• Sun. Oct 12th, 2025

இந்தியா தாக்கினால், பதிலடி கொடுப்போம் – இம்ரான்கான் சீற்றம்

Byadmin

Feb 20, 2019

(இந்தியா தாக்கினால், பதிலடி கொடுப்போம் – இம்ரான்கான் சீற்றம்)

புல்வாமா தாக்குதல் நடந்தபிறகு முதல்முறையாக அது தொடர்பாக பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சியான பிடிவியில் அந்நாட்டின் பிரதமர் பிரதமர் இம்ரான் கான் கருத்து வெளியிட்டுள்ளார்.
கடந்த வியாழனன்று இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் (துணை காவல் படை) வீரர்கள் மீது நடந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அமைப்புதான் ஜெய்ஷ்-இ-முகம்மது. இந்த அமைப்புதான் புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை கடுமையாக குற்றம்சாட்டிய இந்தியா, தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தொடர்பு இருப்பதாக மறுக்கமுடியாத ஆதாரம் தங்களுக்கு கிடைத்திருப்பதாக கூறியது.
இதனால் அண்டை நாடான பாகிஸ்தானை முழுமையாக தனிமைப்படுத்த தேவையான ராஜீய ரீதியான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும் என குறிப்பிட்டது.
இந்நிலையில் இன்று இது குறித்து பேசிய இம்ரான் கான், ”பாகிஸ்தானின் இறையாண்மையை அச்சுறுத்தும் வகையில் ஏதாவது சாகசத்தை இந்தியா செய்ய நினைத்தால் அதற்கு பாகிஸ்தான் நிச்சயமான பதிலடியை கொடுக்கும்” என்று தெரிவித்தார்.
”காஷ்மீர் பிரச்சனைக்கு ராணுவ தீர்வு எதுவும் இல்லை. பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாக அமையும்” என்று இம்ரான்கான் தெரிவித்தார். ”தனது சொந்த முன்னேற்றத்தை பாதிக்கக்கூடிய நடவடிக்கையில் பாகிஸ்தான் ஏன் ஈடுபட போகிறது? என்றும் அவர் வினவினார்.
”பாகிஸ்தான் கடந்த 15 ஆண்டுகளாக பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டு வருகிறது. இதில் நாங்கள் 70 ஆயிரம் பேரை இழந்திருக்கிறோம். நாங்கள் அமைதியை நோக்கி நகரும் வேளையில் நாங்கள் ஏன் இப்படிச் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது?
இந்தியா இன்னமும் கடந்த காலத்திலேயே தேங்கியிருக்க விரும்புகிதா என நான் கேள்வி கேட்க விரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் காஷ்மீரில் ஏதாவதொரு சம்பவம் நடக்கும்போதும் இந்தியா பாகிஸ்தான் மீது பழி போடுகிறது.
காஷ்மீர் சர்ச்சையை பொருத்தவரையில் தீர்வை நோக்கி நகர, ஒரு உரையாடலை துவங்குவதற்கு பதிலாக இந்தியா தேவையின்றி எங்கள் மீது பழி சுமத்துகிறது.
நான் ஒரு விஷயத்தை இந்தியாவுக்கு தெளிவாக கூறுகிறேன். இது புதிய பாகிஸ்தான். புது சிந்தனையோடும் புது மனநிலையுடனும் நாங்கள் உள்ளோம். மற்ற நாடுகளில் நடக்கும் பயங்கரவாதச் செயல்களில் எங்கள் தரப்பில் இருந்து யாராவது ஈடுபட வேண்டும் என்பது எங்கள் விருப்பம் இல்லை. நாங்கள் என்ன எங்கள் மண்ணில் பயங்கரவாதம் வேண்டும் என்ன விரும்புகிறோமா? ” என்றும் கேட்டுள்ளார்.
”இந்திய அரசு எந்தவித விசாரணையை மேற்கொள்ள விரும்பினாலும் அல்லது எதாவது பாகிஸ்தானியர் இந்த தாக்குதலில் ஈடுபட்டார்களா என ஆராய்ந்தறிய விரும்பினால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் புலனாய்வில் பாகிஸ்தானியர் யாராவது ஈடுபட்டிருப்பது தெரிந்தால் எங்களிடம் பகிருங்கள். நாங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என உறுதியளிக்கிறேன்.
நாங்கள் இன்னொருவரின் அழுத்தத்திற்கு உள்ளாகி எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம். பயங்கரவாததுக்கு பாகிஸ்தான் மண்ணை யாராவது பயன்படுத்தினால் அவர்கள் எங்கள் நாட்டுக்கு எதிரி என உணர்கிறோம். அவர்கள் எங்களது விருப்பங்களுக்கு எதிரானவர்கள்.
எப்போதெல்லாம் நாங்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை துவங்க விரும்புகிறோமோ அப்போதெல்லாம் முதலில் பயங்கரவாதத்தை பற்றி பேச வேண்டும் என முன் நிபந்தனை விதிக்கிறது இந்தியா. பயங்கரவாதம் குறித்து பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என உறுதியளிக்கிறேன். அது ஒரு பிராந்திய விவகாரம். அந்த பிராந்தியத்தில் பயங்கரவாதம் இருக்கக்கூடாது என்றே நாங்கள் விரும்புகிறோம்.
பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது நாங்கள்தான். கிட்டத்தட்ட 70 ஆயிரம் பேரை இழந்திருக்கிறோம். பயங்கரவாதத்துக்கு சுமார் 100 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான செல்வத்தை இழந்திருக்கிறோம். ஆகவே நாங்கள் பயங்கரவாதம் குறித்து பேச தயாராகவே இருக்கிறோம்.” என்கிறார் இம்ரான்கான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *