• Fri. Nov 28th, 2025

ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரை (முழு விபரம் இணைப்பு)

Byadmin

Feb 22, 2019

(ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரை – முழு விபரம் இணைப்பு)

ன்று இந்த பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு சபை பற்றி நடத்தப்பட்ட கலந்துரையாடலிலும் அதற்கப்பால் வெளியே பல்வேறு வைபவங்கள் மற்றும் செய்தியாளர் மாநாடுகள் அரசியல் மேடைகள் ஆகியவற்றிலும் அண்மையில் நாம் பாராளுமன்றத்தில் சுயாதீன ஆணைக்குழுக்கள் பற்றி வெளியிட்ட கருத்து தொடர்பில் கௌரவ பிரதம மந்திரி அவர்களும் கௌரவ சபாநாயகர் அவர்களும் பல அறிக்கைகளை வெளியிட்டிருந்தீர்கள்.

இன்று இந்த விவாதம் ஆரம்பமானது முதல் அதில் பங்கேற்ற சில ஆளுந்தரப்பினரும் எதிர்க்கட்சியினரும் இப்பிரச்சினை தொடர்பில் நான் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை பற்றி மிகவும் தவறான விளக்கங்களை முன்வைத்தவாறு எனது நிலைப்பாட்டை மிகக் கடுமையாக விமர்சித்ததாக எனக்கு அறியக் கிடைத்தது. இருப்பினும் கௌரவ சபாநாயகரின் அனுமதியுடன் இன்று இந்த சபைக்கு நான் வருகைத்தந்ததன் நோக்கம் அவர்களின் அந்த கருத்துக்களுக்கு பதிலளிப்பதற்காக அல்ல என்பதை முதலில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அத்தோடு எனது நிலைப்பாடு தொடர்பில் இதுவரை ஏனையோரால் முன்வைக்கப்பட்டிருக்கும் கருத்துக்களையும் விமர்சனங்களையும் நான் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றேன் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

பிரதமர் அவர்களினதும் ஆளுந்தரப்பு மற்றும் எதிர்தரப்பு அங்கத்தவர்களினதும் கருத்துக்களில் ஏற்கனவே உயர் நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கின்ற நீதியரசர்களின் நியமனங்கள் தொடர்பில் நான் எனது எதிர்ப்பை தெரிவிக்கின்றேன். அல்லது அந்நியமனங்கள் பற்றி விமர்சிக்கின்றேன் என்ற கருத்தையே அவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். ஆயினும் உச்ச நீதிமன்றத்திற்கோ மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கோ நியமனங்களைப் பெற்றிருக்கும் நீதியரசர்கள் பற்றி நான் எந்தவித விமர்சனத்தையோ குற்றச்சாட்டையோ முன்வைக்கவில்லை என்பதை மிகத் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அத்தோடு அந்த நியமனங்கள் தொடர்பில் நான் எந்தவித எதிர்ப்பையும் வெளிப்படுத்தவும் இல்லை. ஆயினும் இப்பிரச்சினையை திரிபுபடுத்தி நீதித்துறைக்கும் நாட்டுக்கும் என்னைப் பற்றி மிகத் தவறான ஒரு தோற்றத்தை உருவாக்க சிலர் முயற்சி எடுக்கின்றார்கள் என்பதை நான் உணர்கின்றேன். கௌரவ சபாநாயகரும் ஏனைய சபை அங்கத்தவர்களும் நான் இந்த உயரிய சபையின் அங்கத்தவர் அல்ல என்பதை அறிவீர்கள். நான் இன்று இங்கு உரையாற்றுவது அரசியல் யாப்பில் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்திற்கு வருகைத் தருவதற்கும் உரையாற்றுவதற்கும் வழங்கப்பட்டிருக்கும் விதிமுறைகளுக்கு அமையவே என்பதை விசேடமாக நான் இங்கு குறிப்பிட வேண்டும்.

2015 ஜனவரி 08 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது நாமும் கௌரவ சபாநாயகர் உள்ளிட்ட ஏனையோரும் ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டோம். அதில் எம்முடன் இணைந்து கையொப்பமிட்ட தரப்பினரைப் பற்றி நீங்களும் இச்சபையில் ஆளுந்தரப்பையும் எதிர் தரப்பையும் பிரதிநிதித்துவப்படுத்துவோருக்கும் ஞாபகம் இருக்கும் என நான் நினைக்கின்றேன். அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட 49 அமைப்புகள் வரலாற்று முக்கியத்துவமிக்க அப்பிரகடனத்தில் விகாரமகாதேவி பூங்காவில் வைத்து கையொப்பமிட்டார்கள். கையொப்பமிடப்பட்ட இப்பிரகடனத்தில் உள்வாங்கப்பட்டிருந்த விடயங்கள் குறிப்பாக மிக முக்கியமான உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் எண்ணக்கருக்களைக் கொண்டிருந்தது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அநேகமான நல்லாட்சி பற்றிய கருத்துக்களை அப்பிரகடனத்தில் நாம் உள்வாங்கச் செய்தோம். குறிப்பாக நல்லாட்சி என்ற கருப்பொருளும் அதற்கு அடிப்படையாக அமைந்த பெருமளவு விடயங்களும் அதில் உள்வாங்கப்பட்டன. அவ்வாறு முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாட்டு மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியினையே 19வது சீர்திருத்தம் மூலம் நாம் நிறைவேற்றினோம். நான் ஜனாதிபதி பதவியை ஏற்ற மறுகணமே கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களும் என் முன்னால் பிரதம மந்திரி பதவியில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார் என்பதை உங்களுக்கும் மதிப்பிற்குரிய இச்சபையின் அனைவருக்கும் ஞாபகமிருக்கும். எமக்கிடையே ஏற்படுத்திக் கொண்டிருந்த இணக்கப்பாட்டுக்கும் உடன்பாட்டுக்கும் அமைவாகவே அப்படி செய்து கொள்ளப்பட்டது.

அத்தோடு அந்த இணக்கப்பாட்டுக்கு அமைய செயற்படுவதற்காக எம்மால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளுக்கு அமைவாக கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட போது எனது ஞாபகத்திற்கு ஏற்ப இச்சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் 41 அல்லது 47 பாராளுமன்ற உறுப்பினர்களே இருந்தார்கள். அந்த எண்ணிக்கை சரியாக இப்போது என் ஞாபகத்தில் இல்லை. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 142 பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சமயம் இருந்தார்கள். அதிலும் 127 பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாகவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களாகவே இருந்தார்கள். ஏனையோர் இடதுசாரி முற்போக்கு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கத்துவ கட்சிகளின் உறுப்பினர்களாகும்.

அன்று நான் ஜனாதிபதி பதவியை ஏற்று சுமார் மூன்று வாரங்களுக்குள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை என்னிடம் ஒப்படைத்ததன் பின்னர் பாராளுமன்றத்தினுள் ஆளுங்கட்சி எதிர்கட்சி என்ற வேற்றுமையின்றி புதிய அரசாங்கம் என்ற வகையில் எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் ஜனாதிபதி என்ற வகையில் எனது பணிகளை முன்னெடுப்பதற்கும் இந்த உயரிய அவையின் அறுதிப் பெரும்பான்மையினர் எமக்கு கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுத்தார்கள். அதன்போது ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இவ்வனைத்து தரப்புகளும் அந்த குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் மிகுந்த ஒத்துழைப்புடனும் நட்புடனும் அரசிற்கு ஒத்துழைப்பை வழங்கின.

இந்த ஒத்துழைப்பின் காரணமாகவே எம்மால் 19வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை நிறைவேற்ற முடிந்தது. 225 உறுப்பினர்களில் 215 உறுப்பினர்கள் அதற்கு சார்பாக அவர்களது வாக்குகளை அளித்திருந்தார்கள் என்பதை கௌரவ சபாநாயகர் அவர்களும் அறிவீர்கள். இன்று எதிர்கட்சியில் இருக்கும் பெருமளவான பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இந்த மதிப்பிற்குரிய அவையை பிரதிநிதித்துவப்படுத்திய அனைவரும் அவ்வாக்கெடுப்பில் அவர்களது வாக்குகளை இதற்காக பெற்றுக் கொடுத்தார்கள். அவ்வாறு வாக்குகளைப் பெற்றுக்கொடுத்து உருவாக்கிய 19வது சீர்திருத்தமானது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிக்கப்பட்டிருந்த மிகத் தெளிவான ஒரு விடயமாக, வாக்குறுதியாக, உடன்படிக்கையாகவே இருந்தது.

2015 ஏப்ரல் 27 மற்றும் 28 ஆகிய இரு தினங்களாக 19வது சீர்திருத்தம் மீது இவ் அவையில் மிக நீண்ட விவாதங்கள் நடத்தப்பட்டன. ஆரம்பத்தில் அப்போதைய கௌரவ சபாநாயகராக இருந்த சபாநாயகர் முன்பாக கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது ஒன்றரை நாள் விவாதத்தின் பின்னர் 28 ஆம் திகதி பகல் 12 மணிக்கு வாக்கெடுப்பு நடத்துவதாகவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. கௌரவ சபாநாயகர் அவர்களே, நேற்றும் இன்றும் நான் ஹன்சார்ட் அறிக்கைகளை மிக உன்னிப்பாக வாசித்தேன். 27 ஆம் திகதி காலை ஆரம்பிக்கப்பட்ட விவாதம் 28 ஆம் திகதி பகல் 12 மணிக்கு முடிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்துவதென தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் அன்றைய தினம் மாலை 05 மணி வரை அவ் வாக்கெடுப்பு பின்போடப்பட்டது.

கட்சித் தலைவர்களின் உடன்பாட்டிற்கு அமைய அன்று மாலை ஐந்து மணிக்கு நடத்தவிருந்த வாக்கெடுப்பின் போது 19வது சீர்திருத்தம் சம்பந்தமாக மதிப்பிற்குரிய அவையின் செயற்குழுக் கூட்டத்தின் போது கடுமையான திருத்தங்கள் பற்றி ஏற்பட்ட சூடான நிலைமைக் காரணமாகவே 12 மணிக்கு நடத்தவிருந்த வாக்கெடுப்பு ஐந்து மணி வரை பிற்போடப்பட்டது. ஆயினும் அன்றைய தினம் மாலை நான்கு மணி அளவில் ஐந்து மணிக்கு நடத்தவிருந்த வாக்கெடுப்பை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. அதன்போது கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டுக்கு அமைய ஏழு மணிக்கு வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27, 28 ஆகிய இரண்டு தினங்களிலும் முழு நாளும் நான் பாராளுமன்றத்திலேயே இருந்தேன்.

அப்படி இருந்ததற்கு காரணம் கௌரவ மங்கள சமரவீர அமைச்சர் அவர்கள் இதற்கு முன்னும் குறிப்பிட்டதைப் போன்று என்னால் பெற்றெடுக்கப்பட்ட 19வது சீர்திருத்தம் எனும் குழந்தை பேறிற்கே ஆகும். அவ்வாறு நான் பெற்றெடுத்தது ஒழுக்கமான குழந்தையே ஆகும். அத்தகையதோர் ஒழுக்கமான குழந்தையை பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலேயே நான் பெற்றெடுத்தேன். இவ்வுலகில் பிறக்கின்ற குழந்தைகளை ஒழுக்கமான குழந்தைகள் என்றும் இன்னும் வேறு விதமான குழந்தைகள் என்றும் கூறப்படுவதுண்டு. நாம் பெற்றெடுத்த குழந்தை நல்வழியில் பிறந்த ஒழுக்கமான குழந்தையாகும்.

இந்த நாட்டின் சிறந்ததோர் அரச நிர்வாகத்திற்காகவே அக்குழந்தையை நாம் பெற்றெடுத்தோம். அவ்வாறு நாம் பெற்றெடுத்த 19வது சீர்திருத்தம் என்னும் குழந்தையை பெற 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் திகதி மாலை இந்த அரசாங்கத்தின் சார்பில் கைகொடுத்து உதவியவர் என்ற வகையில் இப்போது இந்த சபையில் காணப்படாவிட்டாலும் கௌரவ விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் ஒரு அமைச்சர் என்ற வகையில் அன்று இந்த அவையில் எதிர்கட்சியிலிருந்து எழுந்த அத்தனை வாதப் பிரதிவாதங்களுக்கும் முகங்கொடுத்த அவருக்கு நான் நன்றி கூற விரும்புகின்றேன்.

அதன் பின்னரும் அரசியலமைப்பு சபையின் அரசியல்வாதிகள் எத்தனை பேர், சிவில் அமைப்புக்கள் எத்தனை தொழிற்சார் நிபுணர்கள் எத்தனை பேர் ஆகிய விபரங்கள் பற்றி மிகக் கடுமையாக கலந்துரையாடப்பட்டன. எவ்வாறாயினும் ஒரு ஒழுக்கமான குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்ற உன்னதமான குறிக்கோளுடன் முன்னெடுக்கப்பட்ட அவ்விடயங்கள் மிகத் தெளிவாக சிறந்த அரச நிர்வாகத்தில் இருக்க வேண்டிய அம்சங்களுக்கு மாறாக இன்று இந்த அரசியலமைப்பு சபை லங்காதீப பத்திரிகையின் ஊடகவியலாளர் குசல் பெரேரா கூறியிருப்பதைப் போலவே 19வது சீர்திருத்தம் எனும் குழந்தை பிறப்பிலேயே முடக்கமான அல்லது அங்கவீனமான குழந்தையாக்கப்பட்டிருக்கின்றது.

கௌரவ சபாநாயகர் அவர்களே, குறிப்பாக இன்று ஆளுங்கட்சியில் இருக்கும் உறுப்பினர்கள் குசல் பெரேரா அவர்கள் சுதந்திரமான கருத்தைக் கொண்ட ஊடகவியலாளர் என நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றீர்கள் என நான் நினைக்கின்றேன். அவரின் கருத்துக்களை நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் நான் ஏற்றுக்கொள்கிறேன். இன்று லங்கா தீப பத்திரிகையில் அவர் வெளியிட்டிருந்த கட்டுரையை நான் 90 சதவீதம் ஏற்றுக்கொள்கிறேன். 19ஆவது திருத்தச் சட்டம் பிறக்கும்போதே ஊனமாக பிறந்தது என்று நான் கூறவில்லை. ஒரு ஊடகவியலாளர் கூறுகின்றார்.

அதை அவர் எவ்வாறு தெளிவுபடுத்துகிறார் என்றால் அரசியலமைப்பு சபையின் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதும் நல்லாட்சி எண்ணக்கருவிற்கு உள்ளடங்க வேண்டிய தொழில் நிபுணர்கள், அறிஞர்கள், சிவில் சமூக பிரதிநிதிகளை விட அரசியல்வாதிகள் அதில் உள்ளடங்கியிருப்பதனால் அரசியலமைப்பு சபையினூடாக எதிர்பார்த்த விடயங்கள் நிறைவேறாமல் அச்சபை வேறொரு வழியில் செல்வதை அந்த கட்டுரையில் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். கௌரவ சபாநாயகர் அவர்களே! இந்த நிலைமையை கருத்திற்கொண்டு நான் ஒன்றை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். 19ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக வரையறையற்ற நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியின் அதிகாரங்களை பாராளுமன்றமத்திற்கும் பாராளுமன்ற அரசியலமைப்பு சபைக்கும் அதனூடாக சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் வழங்கப்பட்டன.

கௌரவ சபாநாயகர் அவர்களே! இங்கிருக்கும் அனைத்து மதத்தினரும் தானம் வழங்குவதற்கு மிகவும் விருப்பம் கொண்டவர்கள். எமது இலங்கை கலாசாரத்தினுள் சிங்களவரோ இந்துக்களோ இஸ்லாமியர்களோ கிறிஸ்தவர்களோ உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாதவாறு தானங்களை வழங்குகின்றனர். இலங்கையை போல் வேறு எந்த நாட்டிலும் தானம் வழங்குகின்ற நிகழ்வுகள் எங்கும் இல்லை. பௌத்த வரலாற்றின் ஆரம்ப காலம் முதலே நாங்கள் தானங்கள் வழங்குகிறோம். அன்னதானம், ஆடைகளை தானமாக வழங்குவது, சொத்துக்களை தர்மம் செய்வது மாத்திரமன்றி, 30 ஆண்டுகால யுத்தத்திற்கு எமது இராணுவத்தினர் உயிரையே தானமாக வழங்கினர். எல்ரீரீஈ இயக்கத்தின் யுத்த தாங்கிகள் வரும்போது அவர்கள் அதன் மீது பாய்ந்து அவர்களது உயிரை தானம் செய்தார்கள்.

அதேபோன்று இரத்தத்தை தானமாக வழங்குவார்கள், நானும் அன்னதானம் வழங்கியுள்ளேன். ஆடைகளை தர்மம் செய்துள்ளேன், இளமை பருவத்தில் இரத்த தானம் செய்துள்ளேன். உலகில் சில நாடுகளில் உடலுறுப்புகளையும் தானமாக வழங்குகிறார்கள். அதை நீங்கள் அறிவீர்கள். கௌரவ சபாநாயகர் அவர்களே! ஆனால் அதிகாரத்தை தானமாக வழங்கியவர்கள் சில பேரே உள்ளனர். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான் பெற்ற வெற்றியின் பின்னர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கமைய எனது அதிகாரத்தை தானமாக வழங்கினேன். உலகில் எத்தனை பேர் அவ்வாறானதொரு செயலை செய்திருப்பார்கள் என்பதை நான் அறியேன். நான் மேல் குறிப்பிட்டது போல் உணவு, உடைகள், இயன்றளவு பணம், இரத்தம் ஆகியவற்றை தானமாக வழங்கிய நான், அதிகாரத்தை பெற்றவுடன் உலகில் எந்த தலைவரும் முன்வராத விடயமான என்னிடம் இருந்த அதிகாரத்தை நான் தானமாக வழங்கினேன். உன்னத எண்ணத்துடன் அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் கொள்கைகைளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கு நான் அவ்வாறே எனது பங்களிப்பை வழங்கினேன்.

19ஆவது திருத்தச் சட்டம் எனப்படும் குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருப்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். சபாநாயகர் அவர்களே! நான் இவ்வாறு தெரிவிப்பதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. மக்களுக்கு நன்மையை பெற்றுக்கொடுக்கும் உன்னத நோக்கத்துடன், 19ஆவது திருத்த சட்ட அரசியலமைப்பு சபையை நிறுவினோம். சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தோம். சுயாதீன ஆணைக்குழுக்களினதும் அரசியலமைப்பு சபையினதும் பொறுப்புகள் மற்றும் முன்னோடி நடவடிக்கை தொடர்பில் 19ஆவது திருத்தச் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 19ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படும் எதையுமே நாம் செய்யவில்லை.

13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்ட மாகாண சபை சட்டத்தின் கீழ் மாகாண சபைகள் நிறுவப்பட்டு தற்போது 30 வருடங்களுக்கும் மேலாகிறது. ஆனால் மாகாண சபை முறைமையில் வெற்றி, தோல்வி முறைப்பாடுகளோ, அவற்றை வலுவூட்டும் முறைமை தொடர்பிலோ 30 வருட காலமாக எந்தவொரு அரசாங்கமும் மீளாய்வு செய்யவில்லை. அதனால் மாகாண சபைகளில் நாங்கள் எதிர்பார்த்த நோக்கங்கள் வெற்றியடைந்துள்ளதா? தோல்வியடைந்துள்ளதா? என்பதை கணக்கிட்டு கூற முடியாது. இன்று மாகாண சபைக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியானது 85 சதவீதம் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கும் 15 சதவீதம் அபிவிருத்திக்கும் ஒதுக்கப்படுகிறது. மாகாண சபைகளை கலைத்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான மாகாண சபை அதிகாரிகள் பொறுப்புகளோ வேலைகளோ இன்றி உள்ளனர். மாகாண சபை முறைமை தொடர்பில நாம் எமது கடமையை சரிவர நிறைவேற்றவில்லை. மீளாய்வு செய்து அது தொடர்பில் கண்டறிந்து மாகாண சபைகளை வலுவூட்டுவதற்கும் அதை சரியான பாதைக்கு கொண்டு வருவதற்கும் முடியாமல் போயுள்ளது.

நான் இங்கு கருத்துத் தெரிவிப்பது சபாநாயகர் ஆகிய உங்களுக்கோ பிரதமருக்கோ இந்த சபையில் என்னை விமர்சிக்கின்றவர்களுக்கோ எதிராக அல்ல. நாம் ஏதாவது தவறு செய்கிறோம் என்றால் அதனை திருத்திக்கொள்ள வேண்டும். நாங்கள் வாகனத்தை செலுத்தும் போது வாகனம் சாலையை விட்டு விலகி தவறான வழியில் சென்றால் அது மின் கம்பத்தில் மோதுவதற்கு முன்னரே நாம் வாகனத்தை மீண்டும் சாலைக்கு கொண்டு வர முயற்சிப்போம்.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக நான் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் பலர் தவறான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர். நான் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு எதிராக பேசவில்லை. அரசியலமைப்பு சபையின் காலவரையறை போன்று சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் காலவரையறை உண்டா? அது தொடர்பிலான விடயங்கள் என்ன? கொள்கைகள் என்ன? வழிகாட்டல்கள் என்ன? என்பதையே நான் கேட்டேன். அவ்வகையான எந்த விடயமும் சுயாதீன ஆணைக்குழுக்களி்டம் இல்லை.

நான் அன்று கூறியதையே இன்றும் கூறுகிறேன். மோசமான குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தற்காரர்கள், பாதாள உலக கோஷ்டிகளின் தலைவர்கள் போன்றவர்களை வெலிக்கடை சிறைச்சாலையில் கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் நீதியரசருடன் கலந்துரையாடி எடுக்கப்பட்ட முடிவுக்கமைய அவர்களை அக்குனுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலைக்கு கொண்டு சென்றோம். அதன் பின்னர் போதைப்பொருள் கடத்தற்காரர்கள், பாரிய குற்றவாளிகள், பாதாள உலக கோஷ்டியினர், மனித உரிமை ஆணைக்குழு போன்ற தரப்புகளிடமிருந்து அதிரடிப்படை தலைவரிடம் பல கேள்விகள் கேட்டு பக்கம் பக்கமாக கடிதங்கள் அனுப்பி வருகின்றனர்.

அக்குனுகொலபெலெஸ்ஸ மாற்றுவதற்கு அனுமதியளித்தது யார்? குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிக்க கூறியது யார்? யாரின் பணிப்புரைகளுக்கமைய நீங்கள் அங்கு சென்றீர்கள்? நீங்கள் எவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறீர்கள்? அந்த நடவடிக்கைகளுக்கான பொறுப்புகளை நீங்கள் ஏற்பீர்களா ஆகிய கேள்விகளை அதிரடிப்படை தலைவரிடம் கேட்டு வருகின்றனர். மனித உரிமை ஆணைக்குழு, அமைச்சர் மங்கள சமரவீர போன்றவர்கள் பாதாள உலக கோஷ்டியினர், குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தற்காரர்கள் ஆகியவர்களின் மனித உரிமைகளுக்காக முன்வருகிறீர்களா? நான் உரையாற்றியதன் பின்னர் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதை நான் கண்டேன். ஜனாதிபதி அவர்கள் இவ்வாறான கருத்தொன்றை தெரிவித்திருக்கின்றார். எங்களுக்கு வேலை செய்வதற்கு மனமில்லை.

பணியிலிருந்து இராஜினாமா செய்துவிட்டு செல்வதற்கு தோன்றுகின்றது எனத் தெரிவித்திருந்தார். நான் அவரிடம் என்ன கேட்கிறேன் என்றால் மனித உரிமை ஆணைக்குழு 21 மில்லியன் நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்கின்றதா? குற்றவாளிகளினதும் பாதாள உலக கோஷ்டிகளினதும் மனித உரிமைகளை பாதுகாக்கின்றதா? மனித உரிமை தொடர்பில் பெருமை பேசும் உலகின் பெரிய நாடுகளின் தலைவர்கள் தீவிரவாதிகளையோ போதைப்பொருள் கடத்தற்காரர்களையோ பாதாள உலக கோஷ்டியினரையோ கைது செய்ததன் பின்னர் மனித உரிமைகளுக்கு அனுகூலமாகவா செயற்படுகிறார்கள். அனைத்து மனித உரிமைகளையும் எம்மிடம் தான் திணிக்கிறார்கள்.

நீதிபதிகளை நியமிப்பது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவரும் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் என்னை கடுமையாக விமர்சித்திருந்தனர். நான் நீதிபதிகளை நியமிப்பது தொடர்பில் குறை கூறியுள்ளேன் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைதான் நான் முன்பும் தெரிவித்தேன். நான் கூறியது நியமிக்கப்பட்டவர்களையல்ல. எனது கேள்வி அரசியலமைப்பு நிராகரிக்கும் சிபாரிசுகளுக்கு என்ன நடக்கும்? அதற்கு பொறுப்புக் கூறுகின்றவர் யார் என்பதே ஆகும். அச்சபையினால் இதுவரை 14 நீதியரசர்களின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலரின் பெயர்களை நான் மூன்று முறை அரசியலமைப்பு சபைக்கு அனுப்பி வைத்திருக்கின்றேன். எதனால் அவர்கள் அப்படி அனுப்பி வைக்கின்றார்கள். காரணம் நீதியரசர்களால் அரசியல் யாப்பு சபைக்கு முன்னாள் ஆஜராக முடியாது. அவர்களால் பிரதம நீதியரசரை சந்திக்கவும் முடியாது.

ஆகையால் அவர்களால் இலகுவாக பிடித்துக் கொள்ளக்கூடியவன் நான் ஒருவன் மாத்திரமே. என்னை வீதியில் வைத்தாவது பிடித்துக்கொள்ள முடியும் அதனாலேயே அவர்கள் குறைக் கூறக்கூடிய இடத்தை நாடி வந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு அநீதி விளைவிக்கப்ப்பட்டிருப்பதாக அவர்கள் கூறுகின்றார்கள். நீங்களே எம்மை கவனத்தில் கொள்ளவில்லை என அவர்கள் கூறுகின்றார்கள். அதாவது நானே அவர்களை வெட்டுகின்றேன் என்ற எண்ணம் முதலில் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. ஆனால் இப்போது அவர்களுக்கு அந்த எண்ணம் இல்லை. ஆகையால் மிகத் தெளிவாகவே நீதியரசர்களின் பெயர் அரசியலமைப்பு சபையினால் நிராகரிக்கப்படும் பட்சத்தில் அப்பதவியை வகிப்பவருக்கு தமது சேவைக்காலத்திற்கான பதவி உயர்வு தமக்கு அரசியலமைப்பு சபையினாலோ வேறொரு நிறுவனத்தினாலோ எதனால் சிபாரிசு செய்யவில்லை என்ற காரணத்தை அறிந்து கொள்வதற்கான உரிமை இருக்கின்றது.

சாதாரண ஒரு தொழிலாளியை எடுத்துக் கொண்டாலும் கூட அவருக்கு தகைமை இருந்தும் பதவி உயர்வு கிடைக்காவிட்டால் எதனால் அப் பதவி உயர்வு வழங்கப்படவில்லை எனக் கேட்கும் உரிமை அவர்களுக்கு இருக்கின்றது. அப்படி பார்க்கும் பொழுது நீதியரசர் என்பவர் ஒரு சாதாரண ஆள் அல்ல. இவ்விடயத்தில் நீதவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் ஆகிய அனைத்து நீதிமன்றங்களிலும் கடமையாற்றும் மதிப்பிற்குரிய நீதிபதிகளின் எதிர்பார்ப்புகள் இன்று சிதைந்து போயிருக்கின்றன. ஆகையால் அவர்கள் எமக்கும் இதே கதி நேருமா எனக் கேட்கின்றார்கள். எமக்கும் பதவி உயர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கு எவரின் பின்னாலாவது செல்ல நேரிடுமா? நாங்கள் கீழ் மட்டத்திலிருந்து நீதவான் நீதிமன்றிலிருந்து எமத பதவி உயர்வுகளுடன் எதிர்காலம் பற்றிய ஒர எதிர்பார்ப்புடனேயே முன்நகர்ந்து செல்கின்றோம். அதற்காக நாம் பெரும் பாடுபட்டு உழைக்கின்றோம். ஆகையால் இவ்வாறு பெயர்களை நிராகரிக்கப்படுபவர்களுக்கு அவ்வாறு அவர்கள் எதனால் நிராகரிக்கப்படுகின்றார்கள் என்ற விடயத்தை தெரிந்து கொள்வதற்கான மிகத் தெளிவான உரிமை இருக்கின்றது.

கௌரவ சபாநாயகர் அவர்களே, நான் அறிந்த வரைக்கும் நான் இப்போது கூறுவது 2015 ஏப்ரல் 27 ஆம் திகதி 19வது சீர்திருத்தம் அங்கீகரிக்கப்பட்ட போது கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் ஒரு அமைச்சர் என்ற வகையில் இந்த அவையில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை அப்போதைய சபாநாயகர் கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்கள். அப்போது நீங்கள் பொது நிர்வாக, உள்ளுராட்சி, ஜனநாயக நிர்வாகம் பற்றிய மற்றும் புத்தசாச கௌரவ அமைச்சராக இருந்தீர்கள். 19வது சீர்திருத்தம் பற்றிய விவாதத்தில் கலந்து கொண்ட நீங்கள் இவ்வாறு கூறுகின்றீர்கள்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்ரி சிந்தனை எனும் எமது கொள்கை திட்டத்தினை எடுத்துக்கொண்டு சந்தி சந்தியாக சென்று நாம் மக்களிடம் வாக்கு கேட்டமை இத்தருணத்தில் எனக்கு ஞாபகம் வருகின்றது. எமக்கு நூறு நாட்களை தாருங்கள். அந்த நூறு நாட்களுக்குள் நீதியை மதிக்கின்ற நியாயமான ஒரு சமூகத்தை உருவாக்கி இந்த நாட்டை அரசியல் மயப்படுவதிலிருந்து மீட்டெடுப்போம் என நாம் கூறினோம். அடுத்தபடியாக அவ்விவாதத்தில் நீங்கள் அரசியல்மயமான ஒரு சமூகத்தை, அரசியல்மயமான ஒரு அரச சேவையை, அரசியல்மயமான ஒரு காவல்துறையை, அரசியல்மயமான ஒரு நீதித்துறையை தூய்மைப்படுத்த வேண்டுமாயின் எமக்கு சமூகத்தில் மதிப்பிற்குரியவர்கள் தேவைப்படுகின்றார்கள். இன்று நாம் அதையே எதிர்பார்க்கின்றோம். நாம் பொதுமக்களிடமும் அதையே கூறினோம். கௌரவ சபாநாயகர் அவர்களே, பிரதமர் அவர்களே, கௌரவ எதிர்கட்சி தலைவர் அவர்களே அப்படியான புகழ்பெற்ற நபர்கள் இவ்விடத்தில் இருப்பதே வரவேற்கத்தக்கதென நான் நினைக்கின்றேன்.

நாம் ஏதேனும் ஒரு வகையில் அவ்விடத்திலிருந்து புகழ் பெற்றவர்களை ஒதுக்கிவிட வேண்டும் என எதிர்பார்க்கின்றோமாயின் ஆணைக்குழுக்களில் அரசியல்வாதிகளை மாத்திரம் நியமிக்க விருப்பம் கொண்டிருப்பின் கௌரவ சபாநாயகர் அவர்களே இச்சட்டமூலத்தைப் பற்றி கதைப்பதில் எவ்வித பிரயோசனமும் இல்லை. இதைக் கொண்டு வருவதில் எந்த பிரயோசனமும் இல்லை. அது அப்படி நடக்குமாயின் எமது குறிக்கோள் நிறைவேறியதாக நாம் கருதப் போவதில்லை. கௌரவ சபாநாயகர் அவர்களே நீங்களே அப்படி கூறுகின்றீர்கள். அவ்வாறு நீதித்துறையும் காவல்துறையும் அரச துறையும் சமூகமும் அரசியல்மயமானதாக அன்று நீங்கள் தெரிவித்தது போன்று அரசியலமைப்பு சபை அரசியல் மயமாகியிருப்பதாக நீதிபதிகள், கல்விமான்கள், புத்திஜீவிகள், பக்கசார்பற்ற நடுநிலை கொண்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சபாநாயகர் அவர்களே! வேலியே பயிரை மேய்ந்தால் யாரிடம் முறையிடுவது என்ற கதை உள்ளது.

கடந்த தினங்களில் நீதிபதிகளை நியமிப்பது தொடர்பில் நீங்கள் எனக்கொரு கடிதம் அனுப்பி வைத்திருந்தீர்கள். 2019ஆம் ஜனவரி மாதம் 02ஆம் திகதி நீங்கள் அனுப்பிய கடிதத்தில் ஒரு நபரை தேர்ந்தெடுக்கும் போது அவரின் சேவை மூப்பை மாத்திரம் ஒருபோதும் கவனத்திற்கொள்ள மாட்டோம். சட்டம் மற்றும் நீதிமன்ற சேவையில் அவர் பெற்றிருக்கும் திறமை, நிபுணத்துவம், வினைத்திறன், சுயாதீனத்தன்மை மற்றும் நேர்மை போன்றவற்றையே நாம் கருத்திற்கொள்வோம். மேலும் இலஞ்சம் வாங்கியவர்கள், திறமையற்றவர்கள், இலஞ்ச குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர்கள், சுயாதீனமாக செயற்படவில்லை என்று ஆதாரபூர்வமாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஆகியவர்கள் சபையினால் கடந்த காலங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளனர். நிராகரிக்கப்பட்டவர்களை தான் நீங்கள் இங்கு குறிப்பிட்டுள்ளீர்கள்.

இங்கு பிரச்சினை என்று நான் கருதுவது என்னவென்றால் இது உங்களதும் எனதும் பொறுப்பு மாத்திரமல்ல, பிரதம நீதியரசின் பொறுப்பும் இதில் உள்ளடங்கியுள்ளது. நீதிபதி ஒருவரை நியமிப்பதற்கு பிரதம நீதியரசருக்கும் கடமை உள்ளது. நான் அறிந்த வகையில் நீதிபதி ஒருவர் பதவி உயர்வுக்கு தகுதியானவர் இல்லையென்றால் அவர் அந்த பதவி உயர்வுக்கு தகுதியற்றவர் என்று அவருக்கே அறிவியுங்கள். ஒழுக்காற்று விசாரணையா, இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பிலான பிரச்சினையா, கடமையாற்றுவதில் தவறுகளா, இல்லையென்றால் வேறேதும் விடயமா என்பதை அவருக்கு தெரிவிக்க வேண்டும். இப்போது 14 பேர் ஏன் என் பின்னால் வருகிறார்கள்? அவர்களில் அரைவாசிக்கும் மேலானவர்கள் தற்போது ஓய்வு பெற்றுள்ளார்கள். அவர்கள் பதவி உயர்வை பெற்றிருந்தால் 65 வயது வரை கடமையாற்றியிருக்கலாம் என்றும் 60 வயதில் அவர்களுக்கு சேவையிலிருந்து ஓய்வுபெற நேர்ந்ததாகவும் கூறுகிறார்கள். அவர்களுக்கு பதவியுயர்வு வழங்கியிருந்தால் 65 வயது வரை கடமையாற்றிருக்கலாம் என்றும் ஏன் பதவி உயர்வு வழங்கவில்லை என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். அவர்களின் பிள்ளைகள் அவர்கள் என்ன குற்றஞ்செய்தார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள். அப்படியென்றால் இது தொடர்பாக ஏன் இன்னும் பதிலளிக்கவில்லை.

அத்துடன் 2019ஆம் ஆண்டு ஜனவரி 02ஆம் திகதி நீங்கள் அனுப்பிய கடிதத்தில் மற்றுமொரு விடயத்தை குறிப்பிட்டுள்ளீர்கள். தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கும் போது நியாயமானதும் வெளிப்படையானதுமான நடைமுறைகளை பின்பற்றி சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அச்சுறுத்தல்களின்றி முடிவுகளை எடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாகவும் அனைத்து கருத்துக்களையும் ஆராய்ந்து பக்கசார்பற்ற இறுதி முடிவொன்றுக்கு வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தீர்கள். நியாயமானதும் வெளிப்படையானதுமான பொறிமுறையாக இருந்தால் இந்த பதவிகளுக்காக பெயர்களை தெரிவுசெய்து உங்களிடம் அனுப்பிவைக்கும் ஜனாதிபதிக்கு நிராகரிப்பிற்கான காரணத்தை தெரிந்துகொள்ள முடியாதா? நீங்களோ பிரதம நீதியரசரோ எனக்கு அவ்வாறான எந்த விளக்கத்தையும் இதுவரை அனுப்பி வைக்கவில்லை. நிராகரிக்கப்பட்ட 14பேரும் இந்த நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதையே தெரிவிக்கின்றார்கள். 19ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதன் ஊடாக சட்டத்தின் ஆதிக்கத்தை வலுப்படுத்தி அரசியலமைப்பிற்கு இணங்க அரச நிர்வாகத்தை மேற்கொள்ளவே எதிர்பார்க்கப்படுகிறது.

அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக அந்த திருத்தத்துடன், இணைக்கப்பட்ட முக்கியமான விடயம் என்னவென்றால் அரசியலமைப்பு சபையை நிறுவுவதாகும். 18ஆவது திருத்த சட்டத்தின் மூலம் அரசியலமைப்பு சபையை அரசியல் மயமாக்கி, அது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களுக்கு கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதாக 2015 தேர்தல் சமயத்தில் ஒரு கருத்து நிலவியது. 

அது ஜனநாயக விரோத, வெளிப்படைத்தன்மையற்ற முடிவுகளை எடுப்பதற்கு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஒருவரை தூண்டும் செயலாக தொடர்ச்சியான விமர்சனங்களை முன்வைப்பதற்கான ஒரு முறைமையாக அமைந்திருந்தது. அவ்வாறானதொரு சூழ்நிலையில் நாம் அளித்த மிகவும் முக்கியமான அரசியல் வாக்குறுதி என்னவென்றால் அரசியல் தீர்மானம் ஒன்றின் ஊடாக வெளிப்படைத்தன்மை மிக்க ஜனநாயக முறைமையொன்றை அறிமுகம் செய்வதின் மூலம் மக்கள் நேய அரச நிர்வாக முறையொன்றை உருவாக்குவோம் என்று தெரிவித்திருந்தோம். 19வது திருத்த சட்டத்தின் மூலம் மேற்குறிப்பிட்ட விடயங்களை நிறைவேற்றிக்கொள்ளவே எண்ணியிருந்தோம்.

ஆனாலும் இந்த இலக்குகளை மூன்று வருடங்களுக்கு மேலான காலம் கடந்திருக்கும் பட்சத்தில் நிறைவேற்ற முடிந்துள்ளதா என்ற பிரச்சினை சமூகத்தில் நிலவுகிறது. இந்த சபையை அமைத்து அது சரிவர இயங்குவதற்கான பின்புலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது ஜனாதிபதி என்ற வகையில் எனது பொறுப்பாக உள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். அதிலுள்ள முக்கியத்துவத்தை நன்றாக புரிந்துகொண்டதால் அரசியலமைப்பின் 33வது சரத்தின் உபபிரிவு (இ) இல் 19வது திருத்தில் உள்ளடக்குவதற்கு நான் தலைமை ஏற்றதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அரசியல் அமைப்பு சபையின் தலைமைத்துவம் ஏற்பது நாட்டின் மூன்றாவது குடிமகனான நீங்கள் தான். அதில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட விசேட நபர்கள் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். இவ்வாறான ஆளுமை பொருந்திய சபையொன்றின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதற்கோ தகாத யோசனைகளை முன்வைப்பதற்கோ அரசியல் அமைப்புக்கு விரோதமான எந்தவொரு நடவடிக்கைக்கும் கடந்த நான்கு ஆண்டுகளாக நான் முன்வரவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஜனநாயக விரோத அல்லது அரசியல் அமைப்புக்கு விரோதமான அச்சுறுத்தல்களை மேற்கொள்ளாமல் அரசியல் அமைப்பு சபையின் விருப்பத்திற்கு அமைய நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு 33 (இ) சரத்துக்கு அமைய நான் எனது கடமைகளை சரிவர புரிந்துகொண்டு நடந்துகொண்டேன். ஆனால் இன்று தோற்றுவிக்கப்பட்டிருக்கும் நிலைமை காரணமாக இனியும் மௌனமாக இருக்க முடியாது. அரசியலமைப்பு சபை அரசியலமைப்புக்கு அனுகூலமாக நடடிவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றதா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. அதன் காரணமாக அரசியலமைப்பின் ஊடாக எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய 31(1) (இ) பிரிவின் கீழ் அரசியலமைப்பு சபையின் நடவடிக்கைகள் தொடர்பில் கண்டறிவதற்கான அதிகாரம் சட்டபூர்வமாக மாத்தரமல்ல பண்பாடான கடமையுமாகும். அரசியலமைப்பு சபையொன்று இயங்கும் போது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஒருவரின் அதிகாரங்களை மீறி செயற்படக் கூடாது.

ஏனென்றால் அரசியலமைப்பின் 3வது மற்றும் 4வது சரத்துக்கள் மூலம் மக்களின் நிறைவேற்று அதிகாரம் தேர்தலின் ஊடாக நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது. முதன் முறையாக அரசியலமைப்பு சபையொன்றை நிறுவுவதற்கான யோசனை 17வது திருத்தச் சட்டம் முன்வைக்கப்பட்ட போது உயர் நீதி மன்றத்தில் அது தொடர்பிலான அரசியலமைப்பு அனுகூலங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது என்னவென்றால் அரசியலமைப்பு சபையொன்றுக்கு ஜனாதிபதியின் அதிகாரங்களை மீறி செயற்பட முடியாது என்று கூறப்பட்டுள்ளது. அச்சபை இயங்கும் போது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியுடன் இணைந்தும் ஒத்துழைப்புடனும் செயற்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெளிவாக தெரிவித்துள்ளது. இந்த சட்டக் கோட்பாடுகள் அன்றும் இன்றும் ஒரே மாதிரியாக செல்லுபடியாகும்.

அதை தற்போதைய நிலைமைகளுக்கும் பொருத்திக்கொள்ள முடியும். ஆனால் இன்று அரசியலமைப்பு சபை நடந்துகொண்டிருக்கும் முறையை காணும் போது அரசியலமைப்பு சபையை நிறுவுவதன் மூலம் ஜனநாயகத்திற்கும் நல்லாட்சிக்கும் மதிப்பளிக்கும் சமூகம் எதிர்பார்த்த எந்தவொரு விடயமும் இடம்பெறவில்லை என்பது தெளிவாகிறது.

நான் தெளிவான உதாரணம் ஒன்றின் மூலம் இதை தெளிவுபடுத்துகிறேன். அரசியலமைப்பின் 41 (ஏ) (1) அமைய மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சபையினால் அதற்கு மூன்று மாதங்களுக்கு முன் இடம்பெற்ற விடயங்கள் பற்றிய அறிக்கையை எனக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

அந்தப் பதவிகளுக்கு நியமித்த நபர்கள் தொடர்பில் இன்று நாட்டில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. விசேடமாக பொலிஸ் மா அதிபர் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் அதி உயர் நீதிமன்றங்களான உச்ச நீதிமன்றத்திற்கும் மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கும் நீதியரசர்களை நியமிக்கும் போது இந்த விடயம் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் முக்கியத்துவம் பெறுவது 41 (இ) ஆகும். அதற்கமைய உயர் நீதிமன்றம் மற்றும் மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் மற்றும் நீதியரசர்களை நியமிக்கும் போது சபையினால் நீதியரசரின் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

19 திருத்தச் சட்டத்திற்கு அமைய இது கட்டாயமாக செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். ஜனநாயக அரச முறைமையினுள் அடிப்படை கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்கும் முகமாக இந்த விடயம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டது. நீதிபதிகளின் செயற்பாடுகள் நேர்மை, வினைத்திறன், தொழிலுடன் சம்பந்தப்பட்ட ஏனைய விடயங்கள் தொடர்பில் விசாரிப்பதோ முடிவுகளை மேற்கொள்ளுதல் தொடர்பிலான அதிகாரம் எனக்கோ, அரசயிலமைப்பு சபைக்கோ அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்படவில்லை. அதன் பொறுப்பு பிரதம நீதியரசருக்கும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கும் அல்லது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முறையான செயற்பாடுகளின் ஊடாக மட்டுமே அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இது தொடர்பில் எனக்கு இருந்த நுட்பமான புரிதலின் காரணமாக நீதி மன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும் போது அவர்களின் சேவை மூப்பை கருத்திற் கொண்டே பதவி உயர்வுகளை வழங்குவதற்கு அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைகளை முன்வைத்தேன். ஆனால் எந்தவித காரணங்களையும் தெரிவிக்காமல் அரசியலமைப்பு சபையினால் இந்த பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? இதற்கான காரணத்தை கண்டறிவதற்கு அரசியலமைப்பு சபையினால் எனக்கு அனுப்பிவைத்த அறிக்கைகளை உன்னிப்பாக கவனித்தேன்.

ஆனால் அந்த அறிக்கைகளில் இந்த விடயம் பற்றி தெளிவாக குறிப்பிடப்படவில்லை. அது மாத்திரமன்றி இந்தப் பரிந்துரைகள் தொடர்பில் நீதியரசர் எதை தெரிவித்தார்? அவரின் பரிந்துரை என்ன? இந்த நீதிபதிகள் தொடர்பில் அவரது கருத்து என்ன? என்பது தொடர்பில் ஒரு வார்த்தையேனும் எனக்கு தெரிவிக்கப்படவில்லை.

-ஜனாதிபதி ஊடகப்பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *