• Tue. Oct 14th, 2025

கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுவிட்டார் – பிரகடனம் செய்தார் பைஸர் முஸ்தபா

Byadmin

Oct 10, 2019

(கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுவிட்டார் – பிரகடனம் செய்தார் பைஸர் முஸ்தபா)

தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் சிறந்த தலைவராக கோத்தாபய ராஜபக்ஷவைக் கண்டு கொண்டோம். எனவே, சிறுபான்மை இன சமூகத்தின் துணையுடன் அவரது வெற்றிக்காகப் பாடுபடப் புறப்பட்டுவிட்டோம் என, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா கொழும்பில் இன்று  தெரிவித்தார். 
ஸ்ரீல.சு.க. தலைமையகத்தில் இன்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே, பைஸர் முஸ்தபா மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார். 
   அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது, 
   இந்நாட்டு மக்கள், மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வினாவுக்கு இன்று விடை அளித்து விட்டோம். பொதுஜன பெரமுனவுக்கு எமது ஆதரவு கிடைத்தமையால், கோத்தாபய ராஜபக்ஷ் வெற்றி பெற்றுவிட்டார்.  சிறுபான்மை மக்களின் வாக்குக் கிடைக்கும் என்று ஐ.தே.க. எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இது இம்முறை ஒருபோதும் நடக்காது. 
   ஜனாதிபதி எப்பொழுதும் இந்நாட்டிற்காக தூர நோக்குச் சிந்தனையுடனேயே செயற்பட்டார். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது, ஸ்ரீல.சு.கட்சிக்கு நான்கு இலட்சம் வாக்குகள் கிடைத்தன. ஸ்ரீல.சு.க., இனவாதக் கட்சியாக இல்லாமல், தேசியக் கட்சியாகவே  இயங்கி வருவதை பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். சுதந்திரக் கட்சி எல்லா இன மக்களையும் அரவணைத்துச் செல்லும் ஒரு கட்சி என்பதையும் பெருமிதத்துடன் நினைவுபடுத்துகின்றேன். இன்று, சிறுபான்மை மக்கள், சுதந்திரக் கட்சியுடனேயே கை கோர்த்துள்ளனர். காரணம், ஜனாதிபதி நாட்டுப்பற்று உள்ளவராகவும், எல்லோருக்கும் விசுவாசமுள்ளவராகவும் செயற்பட்டு வருகின்றார். எங்களுக்கு பிரதேச சபை, நகர சபை ஆகியவற்றில் கூடுதலான உறுப்பினர்கள் உள்ளனர். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இன நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்காகப் பாடுபட்டு வருகின்றோம். எமக்கு இன்று தேசிய பாதுகாப்பு அவசியம். இதுதான் இன்றைய எமது எதிர்பார்ப்பாகும்.
   எனவேதான், தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் வேட்பாளர் யார்…?, இன நல்லுறவைக் கட்டியெழுப்பும் தலைவர் யார்…? என்ற நிலைப்பாட்டில் இருப்பவர் கோத்தாபயதான் என்பதனைப் புரிந்து கொண்டோம். அதனால், கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எமது முழு அளவிலான ஆதரவினையும் வழங்குவதற்குத் தீர்மானித்திருக்கின்றோம். 
   யார் எதனைச் சொன்னாலும், அதி கூடிய சிறு பான்மை இன மக்கள் இன்று எம்முடனேயே உள்ளனர். 
   ஜனாதிபதியின் மீது எமக்கு அதீத நம்பிக்கை உள்ளது. இன ஒற்றுமைக்காகவும் இன நல்லுறவுக்காகவும் ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார். இதனால், ஸ்ரீல.சு.க. என்ற வகையில் கோத்தாபயவுக்கு ஆதரவு அளிக்க முன் வந்துள்ளோம். எனவே, சிறுபான்மை இன சமூகத்தின் துணையுடன்  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், கோத்தாபய ராஜபக்ஷ் நிச்சயம் அமோக வெற்றி பெறுவார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *