• Fri. Nov 28th, 2025

செய்வோம் என கூறும் சஜித், எதனை செய்வது என்பதில் தெளிவில்லாமல் இருக்கிறார் – மஹிந்த

Byadmin

Oct 14, 2019

(செய்வோம் என கூறும் சஜித்,, எதனை செய்வது என்பதில் தெளிவில்லாமல் இருக்கிறார் – மஹிந்த)

எல்பிட்டிய பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள் தான் வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கான கட்டியமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச நேற்று -13- தமிழ் ஊடக -பத்திரிகைகளின் ஆசிரியர்மாரிடம் தெரிவித்தார்.

தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பில் மஹிந்த மேலும் கூறியதாவது, எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகளில் நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம். அந்த முடிவுகள், ஜனாதிபதித் தேர்தலில் வரப்போகும் முடிவுகளை கட்டியம் கூறியுள்ளது.

அரசியல் பிரச்சினைகளுக்கு அப்பால் தெற்கில் உள்ள மக்களும் வடக்கில் உள்ள மக்களும் ஒரே பிரச்சினையையே எதிர்கொள்கின்றனர்.ஒரே வகையான பொருளாதார பிரச்சினைகளே உள்ளன.பொருளாதாரத்தில் அவர்கள் நலிந்து போயுள்ளனர்.விவசாயிகள் பட்டதாரிகள் மீனவர்கள் வர்த்தகர்கள் உட்பட்ட சமூகத்தினர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.தமிழ் வர்த்தகர்கள் நான்கு பேர் தமது வர்த்தக பின்னடைவு காரணமாக அண்மையில் தற்கொலை செய்து கொண்டதாக என்னிடம் சொல்லப்பட்டது.

அரசியல் தீர்வு குறித்து நாங்கள் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்வோம். பல தரப்பினருடன் நாங்கள் பேசிவருகிறோம்.தமிழ் கூட்டமைப்பின் சுமந்திரன் எம் பியுடன் கூட நான் அண்மையில் பேசினேன். அது உத்தியோகபூர்வமற்ற சந்திப்பு என்றாலும் கட்சிக்கு அறிவுத்துவிட்டே சுமந்திரன் என்னை சந்தித்தாக அறிந்தேன்.நாங்கள் எங்களது கொள்கைகளை முன்வைத்த பின்னர் அவர்களுடன் உத்தியோகபூர்வமாக பேசுவோம்.யாரையும் நாங்கள் களவாக சந்திக்க மாட்டோம். கூட்டமைப்பினர் தமது மக்களுக்கு எதனையாவது பெற்றுக் கொடுக்க – அதனை செய்ய முடிந்த தரப்புடன் இணைய வேண்டும்.நான் அறிந்தவரை கூட்டமைப்பு சஜித்துடன் பேசியபோதும் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்வில் அது சம்பந்தமான அறிவு சஜித்திற்கு இருப்பதாக கூட்டமைப்பினால் உணர முடியவில்லை. செய்வோம் என கூறும் சஜித் எதனை செய்வது என்பதில் தெளிவில்லாமல் இருக்கிறார்.

எங்களை சர்வாதிகாரிகள் என்கின்றனர். ஆனால் வடக்கு மாகாண சபைத் தேர்தல் உட்பட பல தேர்தல்களை நாங்கள் நடத்தினோம். எவற்றையும் ஒத்திப் போடவில்லை.ஆனால் ரணில் தேர்தல்களை ஒத்திப்போடுவது நியாயம்தானா? ஜனநாயகமா?அரசியலமைப்பின் 19 வது திருத்தம் நாட்டுக்கு நல்லதல்ல.இரண்டு அதிகாரங்கள் கொண்ட இருவர் எப்படி நாட்டை செய்வது? எனவே ஒருவர் – ஜனாதிபதி அல்லது பிரதமர் அதிகாரங்களை கொண்டவராக இருத்தலே நல்லது. – என்றார் மஹிந்த ராஜபக்ச.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *