• Fri. Nov 28th, 2025

“இன்று எந்தவொரு மதத்தினருக்கும் சுதந்திரம் இல்லாத யுகம் ஏற்பட்டுள்ளது.” – மகிந்த ராஜபக்ஸ

Byadmin

Oct 23, 2019

(“இன்று எந்தவொரு மதத்தினருக்கும் சுதந்திரம் இல்லாத யுகம் ஏற்பட்டுள்ளது.” – மகிந்த ராஜபக்ஸ)

தனது ஆட்சிக் காலத்தில் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்து வந்ததாக எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எனினும், கடந்த 2015ம் ஆண்டில் ஆட்சிக்குவந்த நல்லாட்சியின் திட்டமில்லாத ஆட்சிமுறையினால் பழைய நிலைமைக்கே நாடு சென்றுவிட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கான தேர்தல் பிரசாரக் கூட்டம் காலி – நெலுவ பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,

“நாட்டின் பாதுகாப்பு குறித்த முக்கியத்துவத்தை மக்கள் அறிவார்கள். 10 வருடங்களாக நாட்டில் குண்டுகள் ஏதும் வெடிக்காத வகையில் பாதுகாத்தோம். போர் முடிவுக்கு கொண்டுவந்து 10 வருடங்களுக்கு சிறிது நாட்களே இருந்த நிலையில், ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த தினத்தில் குண்டுகள் வெடித்து பலர் பேர் உயிரிழந்தார்கள். இதற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். அரசாங்கம் செய்த செயற்பாட்டினால்தான் இது இடம்பெற்றிருக்கிறது.

இந்த நிலைமை குறித்து மக்களும் உணரவேண்டும். நாட்டிற்கு பாதுகாப்பை வழங்கமுடியாத தலைவர் பிரயோஜனமற்றவர். நாட்டிற்கும், மக்களுக்கும் பாதுகாப்பை வழங்கமுடியுமான ஒருவரே தலைவராக வேண்டும் என்று தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் மக்கள் பேசியதைக் கண்டேன். தலைவர்தான் பாதுகாப்பை அளிக்க பொறுப்பு உடையவர். இதுவரைக் காலமும் யார் பாதுகாப்பை வழங்கியது என்பது குறித்து நீங்கள் அறிவீர்கள். இன்று எந்தவொரு மதத்தினருக்கும் சுதந்திரம் இல்லாத யுகம் ஏற்பட்டுள்ளது. பௌத்த மக்களுக்கு சுதந்திரம் இல்லை. கத்தோலிக்க மதத்தவர்களும் குண்டு வெடிப்பின் பின்னர் அச்சத்துடன்தான் உள்ளனர். இந்து மற்றும் முஸ்லிம் மக்களும் அப்படியே.

இப்படியான நிலைமை எந்தவொரு அரசாங்கத்திலும் ஏற்பட்டதில்லை. புராதன வஸ்துக்கள் சேதமாக்கப்படுகின்றன. தொல்பொருள் காணிகளில் குடிசைகள் அமைக்கப்படும் யுகமே இது. திட்டம், சட்டம் ஒன்றுமே நாட்டில் இல்லை. பாதாள உலகம் பெருகி நாட்டினுள் ஒழுக்கமும் சீர்குலைந்துள்ளது. இந்த நிலைமையை மாற்றியமைக்கும் காலம் நெருங்கிவிட்டது” அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *