முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தின் பொது கொள்வனவுக்கான கட்டளைகள் சமர்ப்பிக்கப்பட்டநிலையில் இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகளின் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்து, அவற்றை உடனடியாகப் போக்குவரத்துக்குப் பயன்படுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
போக்குவரத்து, போக்குவரத்து ஒழுங்குபடுத்தல், பஸ் சேவைகள், ரயில்வே மற்றும் மோட்டார் தொழிற்றுறை அமைச்சுக்களின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டம், ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (14) மாலை இடம்பெற்ற போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு ஆலோசனை வழங்கினார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தின் போது, 160 ரயில் பெட்டிகளுக்கான கொள்வனவுக் கட்டளைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அவற்றில் 120 ரயில் பெட்டிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், அவற்றில் 40 பெட்டிகள் மாத்திரமே போக்குவரத்துச் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்துச் சேவையில் இணைக்கப்படாத ஏனைய பெட்டிகளை உடனடியாகச் சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்குமாறு, இக்கூட்டத்தின் போது ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
போக்குவரத்துச் சேவையில் இணைக்கக்கூடிய வகையில் இருப்பினும் சேவைக்குப் பயன்படுத்தப்படாதுள்ள பஸ்களைப் பழுதுபார்த்து, குறுந்தூரச் சேவைகளுக்குப் பயன்படுத்துமாறும் அதன் மூலம், கிராமிய மக்களின போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பு கிட்டுமென்றும், ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்களுடன் நட்புணர்வுடன் பணியாற்றுவதன் மூலம், போக்குவரத்துக் கட்டமைப்பிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியுமென்றும் ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, மக்களை ஒடுக்கும் தொழிற்சங்கப் போராட்டங்களை நிறுத்துவதற்கு, அனைத்துத் தரப்பினரும் புரிந்துணர்வுடன் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் எடுத்துரைத்தார்.
அத்துடன் முந்தைய அரசாங்கத்தால் முறைசாரா முறையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்குப் பயிற்சி வழங்கவும் . மின்சார பஸ்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வு செய்யுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.