• Sat. Oct 11th, 2025

கற்றாழையின் மகிமைகள்

Byadmin

May 24, 2019

(கற்றாழையின் மகிமைகள்)

75 வகையான அத்தியாவசிப் பொருட்கள் கற்றாழையில் மிகுந்திருக்கிறது. கற்றாழையின் அருமை, பெருமைகளை அறிவோமா…

* கற்றாழையின் இரண்டு பாகங்களான சதை (ஜெல்) மற்றும் பாலில் இருந்து பல்வேறு பொருட்கள் தயாராகிறது. கற்றாழைப் பால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். கற்றாழையின் அடிப்புறத்தை உற்றுக் கவனித்தால் இதை அறியலாம். கற்றாழை தோலை நீக்கிவிட்டுப் பார்த்தால் கெட்டியான கூழ்போன்ற சதைப்பகுதி தெளிவாகத் தெரியும்.

* கற்றாழையில் 240 வகைகள் உள்ளன. 4 கண்டங்களில் இவை காணப்படுகின்றன. ஆனால் இப்போது மக்கள் 4 வகை கற்றாழைகளையே அதிகமாக பயிரிடுகிறார்கள். ஆரோக்கியம் வழங்கும் மருந்து மற்றும் உணவுப்பொருளாக இவை பயன்படுகின்றன. ‘அலோ வேரா பார்படென்சிஸ்’ இனம்தான் அதிகமாக பயிரிடப்படும் கற்றாழை இனமாகும். இது வட ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்டது.

* கற்றாழையின் ஜெல்லில் 96 சதவீதம் நீர் நிரம்பி இருக்கிறது. இதுவே வறண்ட சூழலில் அவை தாக்குப்பிடித்து வாழ காரணமாகவும் அமைகிறது.

* கற்றாழை சதைப்பகுதியில் பல்வேறு வகை வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், தாதுப்பொருட்கள் உள்ளிட்ட 75 வகை பொருட்கள் அடங்கி உள்ளன. இவ்வளவு சத்துப்பொருட்கள் நிரம்பியிருப்பதுதான் அவற்றை மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக மாற்றியிருக்கிறது.

* கற்றாழையின் சதைப்பகுதி நீரிழிவு, ஆஸ்துமா, வலிப்பு, வாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறந்த நிவாரணம் தரும். பல்வேறு சரும பிரச்சினைகளுக்கும் இது தீர்வு தருகிறது.

* கற்றாழைப் பொருட்கள் உடல்சூடு தணிக்கும். மலச்சிக்கலை தீர்க்கும். உடலின் நச்சுக் கழிவுகளை அகற்றும்.

* கற்றாழையை ஜூஸ் செய்தும், மற்ற உணவுப்பொருட்கள் மற்றும் சுவையூட்டும் பொருட்களுடன் சேர்த்தும் சாப்பிடப்படுகிறது. அப்படியே தனித்துச் சாப்பிடுவதும் உண்டு. கசக்கும், பிடிக்காது என்று காரணம் காட்டி கற்றாழையை தவிர்ப்பது ஆரோக்கியமற்ற பழக்க வழக்கமாகும்.

* மருத்துவ உலகில் பல்வேறு மருந்துகளிலும், சத்து பானங்களிலும் கற்றாழை சேர்க்கப்படுகிறது. பற்பசை, சருமப் பொருட்கள், வாசனைப் பொருட்கள் தயாரிப்பிலும் சேர்க்கப்படுகிறது.

* எகிப்தியர்கள் கற்றாழையை புனிதமான தாவரமாக கருதினர். அவர்கள் மனிதர்களின் இறுதிச்சடங்கிலும் இதை பயன்படுத்தி உள்ளனர். வரலாற்றில் பேரழகியாக வர்ணிக்கப்படும் கிளியோபாட்ரா தனது சரும அழகுப் பொருளாக கற்றாழையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

* கற்றாழை, கடுமையான வறண்ட சூழலிலும் 100 ஆண்டுகளைத் தாண்டி வாழக்கூடியது. எனவே இதை பயன்படுத்துபவர்களும் ஆரோக்கியமாக நீண்ட ஆயுள் பெறுவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அமெரிக்கர்கள், கற்றாழையை ‘சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் மந்திரத் தாவரம்’ என்று போற்றுகிறார்கள். பலவிதங்களில் அவர்கள் கற்றாழையை பயன்படுத்து கிறார்கள். தொட்டிச்செடியாக இந்த மருத்துவ தாவரத்தை வீடுகளிலேயே வளர்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *