நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (7) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 12 வயது சிறுவன் மற்றும் பெண்களிருவர் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவற்றில் பெரும்பாலான விபத்துக்களுக்கான காரணம் சாரதிகளின் கவனயீனமே என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
குருணாகல்
குருணாகல் – கிரிபாவ பொலிஸ் பிரிவில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதி இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் படுகாயமடைந்த நிலையில் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 27 வயதுடைய சாலியவௌ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
களுத்துறை
களுத்துறை – இங்கிரிய பொலிஸ் பிரிவில் இங்கிரிய – பாதுக்க வீதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி , கட்டடமொன்றில் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 18 வயதுடைய இங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
வவுனியா
வவுனியா – பூவரசன்குளம் பொலிஸ் பிரிவில் மன்னார் – வவுனியா வீதியில் , மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்தொன்று , குறுக்கு வீதியிலிருந்து பிரதான வீதிக்கு வந்த மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் 48 வயதுடைய தந்தையொருவரும் , 12 வயதுடைய அவரது மகனும் உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பேரூந்து சாரதி வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொரளை
பொரளை பொலிஸ் பிரிவில் டீ.எஸ். சந்தியில் நாரஹேன்பிட்டவிலிருந்து தெமட்டகொட நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்தொன்று மோட்டார் சைக்கிளொன்றில் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 47 வயதுடைய கட்டுகுருந்த பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
அம்பாறை
அம்பாறை – பதியதலாவ பொலிஸ் பிரிவில் பதியதலாவ – மகா ஓயா வீதியில் விபத்தில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதன் போது விரைந்து செயற்பட்ட பொலிஸார் காயமடைந்த நபரை பதியதலாவை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த நபர் 49 வயதுடைய பதியதலாவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
ஹபரண
அநுராதபுரம் – ஹபரண பொலிஸ் பிரிவில் கந்தளாய் நோக்கி சென்று கொண்டிருந்த காரொன்று வீதியில் சென்ற பெண்ணொருவர் மீது விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த பெண் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 69 வயதுடைய மெதிரிகிரிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
ஆனைமடு
புத்தளம் – ஆனைமடு பொலிஸ் பிரிவில் ஆனைமடு நோக்கி சென்று கொண்டிருந்த லொறியொன்று எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் , மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்; 40 வயதுடைய நவகத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
நவகுருந்துவத்தை
நவகுருந்துவத்தை பொலிஸ் பிரிவில் முச்சக்கரவண்டியொன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி தூண் ஒன்றில் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 40 வயதுடைய படிதலாவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
இரத்தினபுரி
இரத்தினரி பொலிஸ் பிரிவில் லெல்லுபிட்டி பிரதேசத்தில் இரத்தினபுரியிலிருந்து பெல்மடுல்ல நோக்கி சென்று கொண்டிருந்த காரொன்று எதிர் திசையில் வந்த சிறிய ரக லொறியொன்றுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இதன் போது காரில் பயணித்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் 78 வயதான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அங்குணகொலபெலஸ்ஸ
அங்குணகொலபெலஸ்ஸ பொலிஸ் பிரிவில் ஹூங்கம நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று , அதே திசையில் பயணித்த காரொன்றை முந்திச் செல்ல முயற்சித்த போது விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் அங்குணகொலபெலஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைகளுக்காக தங்காலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 36 வயதுடைய பெல்மடுல்லை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
கிளிநொச்சி
கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் ரணமடுவௌ பிரதேசத்தில் இரணைமடு சந்தியிலிருந்து ரணமடுவௌ நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று எதிர் திசையில் வந்த லொறியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 29 வயதுடைய கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஆவார்.
வெலிக்கடை
வெலிக்கடை பொலிஸ் பிரிவில் புத்கமுவ பிரதேசத்தில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று பாதசாரி கடவையில் வீதியைக் கடந்த நபரொருவர் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 21 வயதுடைய ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஆவார்.
இந்த விபத்துக்கள் தொடர்பான விசாரணைகளை அந்தந்த பிரதேச பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.வாகன விபத்துக்களில் ஒரே நாளில் 13 பேர் பலி