பாராளுமன்றில் 65 பேர் மாத்திரமே மக்கள் பக்கம் உள்ளார்கள். 148 பேர் ராஜபக்ஷர்கள் பக்கமே உள்ளார்கள். சுயாதீனமாக செயற்படுகிறோம் என குறிப்பிட்டுக்கொள்ளும் தரப்பினரது அரசியல் நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சாணக்கியன் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றில் வியாழக்கிழமை (5) இடம்பெற்ற கூட்டத்தொடரின் புதிய பிரதி சபாநாயகர் தெரிவு தொடர்பில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரதி சபாநாயகர் தெரிவு ஊடாக பாராளுமன்றில் இடம்பெறும் அரசியல் நாடகம் வெளிப்பட்டு விட்டது. சுதந்திர கட்சியின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட ரஞ்சித் சியம்பலாபிடியவிற்கு ஆதரவு வழங்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுப்பினர்களிடம் தனிப்பட்ட முறையில் குறிப்பிடுகிறார். ஆனால் அவர் எதிர்க்கட்சியில் உள்ளார்.
சுயாதீனமாக செயற்படும் தரப்பினர் பரிந்துரை செய்த பெயரை ஆளும் தரப்பின் உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் உறுதிப்படுத்துகிறார். இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக அரசியல் நாடகம் வெளிப்பட்டுள்ளது.
மக்கள் பக்கம் 65 உறுப்பினர்கள் உள்ளமையும், ராஜபக்ஷர்கள் பக்கம் 148 உறுப்பினர்களும் உள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.
அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
நம்பிக்கையில்லா பிரேரணையின் போது இந்த நாடககாரர்கள், திருடர்கள் ராஜபக்ஷர்களை முழுமையாக பாதுகாப்பார்கள். நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக இவர்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்றார்.