• Sun. Oct 12th, 2025

வழக்குகளில் இருந்து, உயர் நீதிமன்றத்தினால் இன்று ரணில் விடுதலை

Byadmin

Jul 27, 2022

பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்தும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இருந்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான நபர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரி இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்னவினால் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய உட்பட்ட ஐவர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே ​​முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் நிதியமைச்சரின் பயணத் தடையை ஆகஸ்ட் 02 ஆம் திகதி வரை நீடிக்குமாறு பிரதம நீதியரசர் தலைமையிலான நீதியரசர் குழாம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை இந்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வழக்கில் இருந்து நீக்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியலமைப்பின்படி, ஜனாதிபதிக்கு எதிராக மனுவை தாக்கல் செய்யமுடியாது என்ற அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலிருந்தும் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக பெயரிட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் காரணமாக முன்வைக்க முடியாது என உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது

எனினும் இந்தக் கோரிக்கைக்கு பலதரப்புக்களும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 நீதியரசர்கள் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் 12 அடிப்படை உரிமை மனுக்கள் நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் ரணில் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ நீதிமன்றில் ஆட்சேபனையை முன்வைத்து தனது கட்சிக்காரர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருப்பதால் அரசியலமைப்பின் 35ஆவது சரத்தின் அடிப்படையில் ஜனாதிபதியான அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணிகள் பூர்வாங்க ஆட்சேபனைகள் முன்வைக்கவுள்ளதாக நேற்றைய தினம் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து இந்த ஆட்சேபனைகளை இன்று சமர்பிக்குமாறு உயர்நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் இந்த மனுவின் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவை விடுதலை செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், கத்தோலிக்க மதகுருமார்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உட்பட பல தரப்பினர் இந்த அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *