• Tue. Oct 14th, 2025

நியூஸிலாந்தில் இலங்கையர்கள் வந்து வாழலாம் – பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்வுக்கான அதிகாரி

Byadmin

Sep 15, 2022

ஏ.எச்.ஏ. ஹுஸைன் –

இலங்கையைப் போல் இரு மடங்கு பரப்பளவையும் சுமார் 5 மில்லியன் மக்களையும் கொண்ட நியூஸிலாந்தில் இலங்கையர்கள் வந்து வாழலாம். ஏற்கெனவே அங்கு 20 ஆயிரம் இலங்கையர்கள் வாழ்கின்றார்கள் என கொழும்பிலுள்ள நியூஸிலாந்து உயர் ஸ்தானீகராலயத்தின் பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்வுக்கான அதிகாரி ப்ரெட் ஷீல்ட்ஸ் (Brett Shields – Security and Migration Officer – New Zealand High Commission Colombo) தெரிவித்தார்.

நியுஸிலாந்து உயர் ஸ்தானீகராலயத்தின் நிதியளிப்பினால் ஸ்தாபிக்கப்பட்ட, காத்தான்குடி பெண்களின் நீண்ட காலத் தேவையாக இருந்து வந்த உளநல ஆற்றுப்படுத்தல் நிலையமும் சுய கற்றல் மையமும் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் அவர் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்நிலையம் செவ்வாய்க்கிழமை 13.09.2022 வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.

ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனீஸா பிர்தௌஸ்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய

நியூஸிலாந்து உயர் ஸ்தானீகராலயத்தின் பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்வுக்கான அதிகாரி ப்ரெட் ஷீல்ட்ஸ்

வேறு நூற்றுக்கணக்கான திட்ட முன்மொழிவுகள் நியுஸிலாந்து உயர்ஸ்தானீகராலயத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தபோதும் நிதியுதவி அளிப்பதற்கு நியூஸிலாந்து உயர்ஸ்தானீகர் காத்தான்குடியில் பெண்களுக்கான  இந்த உள நல ஆற்றுப்படுத்தல் மற்றும் சுய கற்றலுக்கான திட்டத்தைத் தெரிவு செய்தார்.

5 மில்லின் மாத்திரமே சனத்தொகையைக் கொண்ட நியூஸிலாந்து நாடு இலங்கையைப் போல் இரு மடங்கு பரப்பளவைக் கொண்டது. அங்கு இலங்கையர்கள் வரவேற்கப்படுகின்றார்கள். ஏற்கெனவே எமது நியூஸிலாந்து நாட்டில் சுமார் 20 ஆயிரம் இலங்கையர்கள் வசிக்கின்றார்கள். இதை நான் ஏன் கூறுகின்றேன் என்றால் இலங்கையில் இருக்கும் மக்கள் நியுஸிலாந்துக்கு வரமுடியும் அங்கே வாழ முடியும்.

இங்கே அமர்ந்திருக்கக் கூடிய இன்றைய நிகழ்வில் பங்கு கொண்ட சிறுமிகள், இளம் பெண்கள் நியூஸிலாந்துக்கு வருவதை நான் ஊக்குவிக்கின்றேன். எதிர்காலத்தில் ஒரு சிலரை நியூலாந்தில் காண முடியும் என நம்புகின்றேன். அது ஒரு நீண்ட பயண வழிமுறையாக இருந்தாலும் அது நடக்கலாம். நடப்பதற்கு சாத்தியமுள்ளது. நான் அடுத்து வரும் நான்கு ஆண்டுகளுக்கு இங்கு இலங்கையிலிருந்து பணியாற்றுவேன். அந்த வேளையில் நான் மீண்டும் கிழக்குக்கு வந்து உங்களை சந்திப்பேன். இந்தத் திட்டம் வெற்றியளித்து உங்கள் வாழ்வு மேம்பட வேண்டும் என நான் அவாவுறுகின்றேன்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *