• Tue. Oct 14th, 2025

தந்தையால் தாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரவலான சிறுமியும், தாயும் மீட்பு

Byadmin

Nov 10, 2022

4 வயது பெண் சிறுமி மீது கொடூரத் தாக்குதல் வீடியோ ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் குறித்த சிறுமி இன்று காலை யாழ்ப்பாணம் பண்ணைபாலத்தடியில் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இன்று காலை 7.45 மணியளவில் மோசமாக தாக்கப்பட்ட ஊர்காவற்றுறையைச் சேர்ந்த சிறுமியும் தாயும் திருகோணமலையிலிருந்து தப்பி வந்து யாழ். பண்ணைப் பாலத்தடியில் செய்வதறியாது நின்ற போது குடும்ப நல உத்தியோகத்தர் திருமதி டினுசாவால் மீட்கப்பட்டு வட மாகாண சிறுவர் பராமரிப்பு திணைக்களத்திடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது;
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரம்பன் பகுதியில் வசித்து வந்த வாய் பேச முடியாத பெண் ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவர், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார்.

திருமணம் செய்து ஒரு வருடத்தின் பின்னர் அந்தப் பெண்ணை விட்டுச்சென்றுள்ள நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இருவருக்கும் இடையே தொடர்புகள் எவையும் இருந்ததில்லை. அவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் வந்த தந்தை, சேர்ந்து வாழ்வோம் எனக் கூறி, தாயையும் மகளையும் சுருவில் பகுதிக்கு அழைத்துச் சென்று 5 நாட்களாக அப்பகுதியில் வசித்து வந்துள்ளார்.

சந்தேக நபர் கடந்த 04.11.2022 அன்று, அடிபாடு சம்பந்தமான வழக்கு ஒன்றுக்காக ஊர்காவற்றுறை நீதிமன்றத்துக்கு வருகை தந்துள்ளார்.

பின்னர் அவர், கடந்த 4ஆ திகதி, வாய் பேச முடியாதவர்களது சமூக ஊடக குழுமம் (வட்ஸப்) ஒன்றில் தனது மகளைத் தாக்கும் காணொளியை வெளியிட்டிருந்தார். அத்துடன் தனது மனைவியும், குறித்த குழந்தையின் தாயுமான பெண்ணின் மரண அறிவித்தல் போஸ்டர் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

இந்தக் காணொளியும், மரண அறிவித்தல் போஸ்டரும் சமூக ஊடகங்களில் பரவ ஆரம்பித்த நிலையில் அது ஊர்காவற்றுறை பொது சுகாதார வைத்திய அதிகாரியின் கண்களில் எட்டியது.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி, குறித்த காணொளியையும், மரண அறிவித்தல் போஸ்டரையும் ஊர்காவற்றுறை நீதிவானுக்கும் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சந்தேகநபரை கைது செய்யுமாறு ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்ட நிலையில் சமூக ஊடகங்களில் காணொளியில் வெளியான குறித்த குழந்தை இன்று காலை சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களால் மீட்கப்பட்டு யாழ். மாவட்ட சிறுவர் நன்னடத்தைப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. TL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *