• Mon. Oct 13th, 2025

‘ஜி-20’ மாநாட்டின் போது கனடா பிரதமருடன் சீன அதிபர் நேருக்கு நேர் மோதல்

Byadmin

Nov 18, 2022

இந்தோனேசியாவின் பாலித்தீவில் ‘ஜி-20’ நாடுகளின் உச்சி மாநாடு கடந்த 15, 16-ந் தேதிகளில் நடந்தது.

இந்த மாநாட்டின்போது, மூடிய அறையில் நடந்த விவாதத்தில் தங்கள் நாட்டின் தேர்தல்களில் சீனா தலையிட்டதாகவும், உளவு பார்த்ததாகவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டிப்பேசினார். இது தொடர்பாக அவரும் சீன அதிபர் ஜின்பிங்கும் பேசிக்கொண்டவை, அங்குள்ள நாளேடுகளில் செய்திகள் ஆகின. அவற்றை கண்டு சீன அதிபர் ஜின்பிங் அதிர்ந்து போனார். இந்தத் தகவல்களை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோதான் ஊடகங்களில் கசிய விட்டுள்ளார் என அவர் முடிவுக்கு வந்தார்.

இது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் சீன அதிபர் ஜின்பிங் நேருக்கு நேர் மோதினார். குறிப்பாக அவர், ” ஜி-20 உச்சி மாநாட்டில் பேசப்பட்ட இந்த தகவல்கள் வெளியே கசிந்தது சரியல்ல, இந்த நடத்தை பொருத்தமற்றது” என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் மாண்டரின் என்னும் சீனப்பேச்சு வழக்கு மொழியில் கூறினார். அதை அவரது மொழி பெயர்ப்பாளர் மொழிபெயர்த்தும் சொன்னார்.

ஒரு நாட்டின் அதிபர், இன்னொரு நாட்டின் பிரதமரை நோக்கி நேருக்கு நேர் கூறிய இந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனாலும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சிரித்தவாறு தலையாட்டிக்கொண்டு, ” கனடாவில் நாங்கள், சுதந்திரமான, வெளிப்படையான, மனம் திறந்த பேச்சில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அதை நாங்கள் தொடர்ந்தும் செய்வோம்,” என பதிலடி கொடுத்தார்.

மேலும், “நாம் ஆக்கப்பூர்வமான வகையில் பணியாற்றுவது பற்றி தொடர்வது குறித்து ஆராய்வோம். ஆனால், நாங்கள் உடன்படாத விஷயங்களும் அவற்றில் இருக்கும்” என குறிப்பிட்டார்.

ஆனால் அவர் இதைச் சொல்லி முடிக்கும் முன்பாக சீன அதிபர் ஜின்பிங் குறுக்கிட்டு, “முதலில் அதற்கான சூழலை நீங்கள் உருவாக்குங்கள்” என்று கூறி விட்டு ஜஸ்டின் ட்ரூடோவுடன் கைகுலுக்கிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சீனாவுக்கும், கனடாவுக்கும் ஏற்கனவே பிரச்சினைகள் உண்டு என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *