மலேசியாவின் பத்தாவது பிரதமராக அன்வார் இப்ராகிம் இன்று பதவியேற்க உள்ளார். இதற்கான அறிவிப்பை அரண்மனை இன்று -24- வெளியிட்டது.
இதையடுத்து தமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் அன்வார் நன்றி தெரிவித்துள்ளார். இன்று மலேசிய நேரப்படி மாலை 5 மணியளவில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும்.
அரண்மனையின் இந்த அறிவிப்பின் மூலம் கடந்த சில நாள்களாக மலேசியாவில் நீடித்து வந்த அரசியல் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் 15ஆவது பொதுத்தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இம்முறை சுமார் 70 விழுக்காட்டிற்கும் மேலான வாக்குகள் பதிவாகின. எனினும் இம்முறை எந்தவோர் அரசியல் கட்சிக்கும் கூட்டணிக்கும் ஆட்சியமைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
எனவே தேர்தலுக்கு முன்பு உருவான கூட்டணியை ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய அணிகளை அமைக்க அரசியல் கட்சிகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டன.
இம்முறை அன்வார் இப்ராகிம் தலைமையிலான நம்பிக்கை கூட்டணி (பக்காத்தான் ஹராப்பான்), மொஹைதின் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி (பெரிக்கத்தான் நேசனல்), இடைக்கால பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் சார்ந்துள்ள அம்னோ கட்சி இடம்பெற்றிருக்கும் தேசிய முன்னணி (பாரிசான் நேசனல்), முன்னாள் பிரதமர் மகாதீர் தலைமையிலான ஜிடிஏ ஆகிய நான்கு கூட்டணிகள் தேர்தல் களம் கண்டன