• Tue. Oct 14th, 2025

மனித மூளையில் சிப், சோதனையில் 1,500 விலங்குகள் மரணம் – சர்ச்சையில் சிக்கிய எலான் மஸ்க்

Byadmin

Dec 8, 2022

வாஷிங்டன், கடந்த 2016 ஆம் ஆண்டு பொறியாளர்கள் குழுவைச் சேர்த்து நியூராலிங்க் நிறுவனத்தை ஆரம்பித்தார் எலான் மஸ்க். இவர்கள் மூளையில் பொருத்தும் சிப்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த சிப்களை பக்கவாதம் வந்தவர்களுக்கு மூளையில் பொருத்துவதன் மூலம் அவர்களால் நடக்கவும், அவர்களின் நரம்பியல் பிரச்சினைகளை தீர்க்கவும் உதவுவதோடு, பார்வையற்றவர்கள் பார்க்கவும் இவை உதவும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சிப்களின் சோதனையில் பல விலங்குகள் ஈடுபடுத்தப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக நியூராலிங்க்கில் வேலைபார்த்த ஊழியர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதாவது எலான் மஸ்க் சோதனையை முடிக்கும்படி ஊழியர்கள் மீது கொடுத்த அழுத்தத்தால், விலங்குகள் மீது வேகவேகமாகப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 

2018 – ம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், ஆடுகள், பன்றிகள், எலிகள், குரங்குகள் என்று சுமார் 1,500-க்கும் மேற்பட்ட விலங்குகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். 

அதோடு எத்தனை விலங்குகள் மீது சோதனை நடத்தப்பட்டது என்பதற்கு, இந்நிறுவனம் தெளிவான ஆதாரத்தையும் வைத்திருக்கவில்லை. அதனால் அதிகப்படியான விலங்குகள் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

இது தொடர்பாக விலங்குகள் நல சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதிகாரிகள் விசாரணையைத் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து எலான் மஸ்க் மற்றும் நியூராலிங்க் நிறுவனத்தில் இருந்து இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *