• Fri. Nov 28th, 2025

70 ஆயிரம் குடும்பங்களுக்கு பால் மா!

Byadmin

Jan 18, 2023


பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 70,000 குடும்பங்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான தேசிய ஒன்றிணைந்த பொறிமுறை’ ஊடாக 174 மில்லியன் ரூபா பெறுமதியான பால் மாவை பெற்றுக் கொடுக்க பொன்டெரா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பொன்டெரா நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஜூடித் ஸ்வொல்ஸ், இப்பால்மாவை நேற்று (17) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் உத்தியோகப்பூர்வமாக கையளித்தார்.

நாடுமுழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 70,000 குடும்பங்களுக்கு இப்பால்மா, மாவட்டச் செயலாளர் அலுவலகத்திற்கூடாக பகிர்ந்தளிக்கப்படும்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட தேசிய உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி குழுவின் தலைவரும் ஆலோசகருமான கலாநிதி சுரேன் படகொட கருத்து தெரிவிக்கையில், அனைத்து பிரஜைகளுக்கும் அவசியமான போஷாக்கு கிடைப்பதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் உணவு பாதுகாப்பு வேலைதிட்டத்தின் நோக்கமெனத் தெரிவித்தார். மிகவும் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு போஷணை தேவையை ஈடுசெய்வதே இதன் பிரதான குறிக்கோளென்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்தமைக்காக பொன்டெரா நிறுவனத்துக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

சரியானதைச் செய்ய உறுதிபூண்டுள்ள ஒரு பொறுப்பான நிறுவனம் என்ற வகையில், இலங்கையர்களுக்கு உயர்தரமான பால் போஷாக்கைப் பெற்றுக்கொடுப்பதில் பொன்டெரா நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயற்படும். பொன்டெரா நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக முன்னெடுத்துவரும் சமூக சேவையின் தொடர்ச்சியாகவே இந்த பங்களிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *