• Fri. Nov 28th, 2025

எக்ஸ்பிரஸ் பேர்ள் உரிமையாளர்களுக்கு எதிராக சிங்கப்பூரில் இலங்கை வழக்குத் தாக்கல்

Byadmin

May 17, 2023

இலங்கையின் சட்டமா அதிபரை உரிமைகோருபராக பெயரிட்டு, எக்ஸ்பிரஸ் பேர்ள் சம்பவம் தொடர்பில் ஆறு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் சிங்கப்பூர் மேல் நீதிமன்றத்தில் உரிமை கோரல் மனுத் தாக்கல் செய்துள்ளதாக, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் (நிர்வாகம்) சேத்திய குணசேகர தெரிவித்தார். இந்த உரிமை கோரல் கோரிக்கை மனு 2023 ஏப்ரல் 25ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு மே 15 ஆம் திகதி சிங்கப்பூர் மேல் நீதிமன்றத்தில் (பொதுவான பிரிவு) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் ஜூன் 01 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.

சிங்கப்பூர் சர்வதேச வணிக நீதிமன்றத்தின் (SICC) விதிகளின் அடிப்படையில் இந்த வழக்கை சிங்கப்பூர் சர்வதேச வணிக நீதிமன்றத்துக்கு (SICC) மாற்றுவது குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் தற்போது பரிசீலித்து வருகிறது.

இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வழக்குத் தாக்கல் செய்தல் மற்றும் எதிர்கால சட்ட நடவடிக்கைகளை முகாமைத்துவம் செய்ய சிங்கப்பூர் சட்ட நிறுவனம் ஒன்று அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்டுள்ளது.

2021 மே 20 ஆம் திகதி சிங்கப்பூர் கொடியுடன் கூடிய இக்கப்பல் இலங்கையின் மேற்கு கடற்கரையில் தீப்பிடித்து மூழ்கியது. ஆபத்தான பொருட்கள் அடங்கிய 81 கொள்கலன்கள் 25 டொன் நைட்ரிக் அமிலம், 348 டொன் எரிபொருள் மற்றும் நர்டில்ஸ் (பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க பயன்படும்) என அழைக்கப்படும் 75 பில்லியன் சிறிய பிளாஸ்டிக் மூலப்பொருள் அடங்கிய 1,488 கொள்கலன்கள் கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன.

இந்தப் பாதிப்பு இலங்கையின் பிரதானமாக கரையோர சூழலுக்கு, பிரதேச மக்களுக்கு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இதன் விளைவாக அதிக எண்ணிக்கையிலான கடல்வாழ் உயிரினங்கள் அழிக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *