• Sat. Oct 11th, 2025

பிரான்ஸ் மாநாட்டில் ஜனாதிபதி வெளிப்படுத்திய சவால்

Byadmin

Jun 23, 2023

மத்திய வருமானம் பெறும் நாடுகள் எதிர்கொண்டு வருகின்ற கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட சவால்களை முறையாகவும் செயல்திறனுடம் எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

பிரான்ஸ் – பெரிஸ் நகரில் நேற்று (22) ஆரம்பமான புதிய நிதி ஒப்பந்தத்திற்கான அமர்விற்கு இணையாக நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை கொண்டிருக்கும் அனுபவங்களை எடுத்துரைத்த ஜனாதிபதி, இலங்கை தற்போது வரையறுக்கப்பட்ட நிதி வசதிகள் தொடர்பிலான பிரவேசத்திற்குள் மட்டுப்பட்டு கிடப்பதாகவும் , நாட்டில் நிதி மற்றும் பொருளாதார மறுசீரமைப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

காலோசிதமானதும் சுயாதீனமானதுமான பிரவேசத்துடன் சலுகை அடிப்படையிலான நிதிசார் கொள்கைகளை நோக்கிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அந்த செயற்பாட்டின் போது ஏற்படக்கூடிய அதிக செலவீனங்களை மட்டுப்படுத்துவதற்கான முறைமைகள் பற்றியும் அறிவுறுத்தினார்.

கடன் வழங்குநர் மற்றும் கடன் பெற்றவர்கள் மத்தியில் உயர் மட்டத்திலான கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளை ஏற்படுத்த வேண்டுமென்றும், பூகோள அரசியல் பிரச்சினைகளுக்கு புதிய தீர்வுகளைத் தேடுவது அவசியம் என்ற யோசனையையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினார்.

தற்போது காணப்படும் நிலையற்ற தன்மையை, போக்குவதற்கு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும், நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் எதிர்கொள்ளும் பெருமளவான சவால்களை வெற்றிகொள்வதற்கு அவசியமான தனியானதொரு செயற்றிட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

கடன் வழங்குநர்கள் தொடர்பிலான செயற்பாடுகளின் போது சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடு மற்றும் இலங்கையின் ஒருங்கிணைப்பு வேலைத்திட்டம் ஆகியவை பாராட்டுக்குரியதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அது குறித்து ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும் அபிவிருத்தி மற்றும் வணிகச் செயற்பாடுகளுக்கு மேற்படி நாடுகளும் சீனாவும் வழங்கிய ஒத்துழைப்புகளையும் நினைவுகூர்ந்தார்.

கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் போது, கடன் பெறுனர் மற்றும் குழுக்களுடான தொடர்புகளைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *