தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசலின் கழிப்பறைகளில் சில திருத்த வேலைகளைச் செய்வதற்கு பள்ளிவாசல் நிர்வாகம் தம்புள்ளை பிரதேச செயலாளரிடம் அனுமதி கோரியபோது தம்புள்ளை பள்ளிவாசல் சட்டவிரோத கட்டிடம் என்பதால் அனுமதி தர இயலாது என மறுத்துவிட்டதாக பள்ளிவாசலின் உப செயலாளர் எஸ்.எச்.எம். ரவூப் தெரிவித்தார்.
பள்ளிவாசலின் கழிப்பறைகளின் கழிவுகள் தேங்கும் குழி நிரம்பி வழிவதால் சுகாதாரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ரவூப், பிரதேச செயலாளரிடம் முறையிட்டபோதும் கழிப்பறை திருத்த வேலைகளுக்கு பிரதேச செயலாளர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
பள்ளிவாசல் நிர்வாகம் தம்புள்ளை நகர அபிவிருத்தி அதிகார சபையை தொடர்பு கொண்டு இவ்விவகாரம் தொடர்பில் முறையிட்டும் அவர்களால் எதுவித நடவடிக்கையும் எடுக்க முடியாதெனவும் கொழும்பு தலைமைக் காரியலயமே நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளை பள்ளிவாசல் சட்டவிரோதமானது என பிரதேச அரச அதிகாரிகள் தெரிவித்து வருவதால் பள்ளிவாசல் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு பெற்றுத் தருமாறு பள்ளிவாசல் நிர்வாகம் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
-நன்றி விடிவெள்ளி –