• Sun. Oct 12th, 2025

இடிபாடுகளுக்குள் ஒரு இளம் பிஞ்சு

Byadmin

Nov 2, 2023

அவள்

தவழ்ந்த வீடு

தரை மட்டமாகிக் கிடந்தது

சோறூட்டிய தாய்

சொர்க்கத்துக்குப் போயிருந்தாள்.

வாப்பாவின் கண்கள்

வானத்தைப் பார்த்த படி

அசையாதிருந்தன.

கையிலிருந்த

கரடி பொம்மை

முன்னங் கையோடு சேர்த்து

மூலையில் கிடந்தது.

அவளுக்குக்

கண்ணீர் வரவில்லை

இரண்டு விழிகளிலும்

இரத்தம் காய்திருந்தது.

எழ முடியவில்லை

இரும்புக் கம்பியொன்று

இடுப்புக்கு மேலால்

எரிந்து கொண்டிருந்தது.

தண்ணி

தண்ணி

அவள் கெஞ்சுவது

அவள் காதுக்கே

அரைவாசிதான் கேட்டது.

யார் யாரோ

எங்கிருந்தோ

அழைப்பது

இலேசாக விளங்கியது.

மூடி திறக்கப்பட்ட

நீர் போத்தல்

நேரே விழுந்து

வாயருகில் வந்த போது

வாழ்க்கையில் கொஞ்சம்

மிச்சம் இருப்பது

மீண்டும் நினைவுக்கு வந்தது.

ஒரு கழுதை வண்டியில்

உட்கார வைக்கப் பட்டது

ஓரளவு நினைவிருந்தது.

விழித்துப் பார்த்த போது

வைத்தியசாலையின்

வராண்டாவில்

பல நூறு பேரில் ஒருத்தியாய்

படுக்க வைக்கப் பட்டிருந்தாள்.

ஒரு கைபேசியில்

ஒளி பரப்பு

ஓரத்தால் விளங்கியது.

வெற்றி கரமான

விமானத் தாக்குதலில்

வீரர்கள் ஈடு பட்டனர்.

ஒரு மிருகம்

உரையாற்றிக் கொண்டிருந்தது.

உம்மா

உன்னோட இடத்துக்கு

என்னையும் எடும்மா.

பிஞ்சு மனம்

பிரார்த்தித்தது.

தூரத்தில்…

அதே விமான ஒலி..

அதே வெடிச்சத்தம்

கூரையில் தீப்பிழம்பு தெரிய

குஞ்சுக் கோழி

உம்மாவை இருப்பிடத்துக்கு

ஓடிப் போனது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *