• Sat. Oct 11th, 2025

ரோஹிங்ய முஸ்லிம்களுக்காக உரத்து குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது

Byadmin

Aug 30, 2017

இலங்கை மக்களும் அரசியல் தலைமைகளும் ரோஹிங்ய முஸ்லிம்களுக்காக உரத்து குரல் கொடுக்க வேண்டிய தருணம் இதுவாகும் என காத்தான்குடி மீடியா போரம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காத்தான்குடி மீடியா போரம் இன்று (29) செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மியன்மரில் தொடராக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகள் கடந்த சில நாட்களாக மேலும் உக்கிரமடைந்துள்ளன. மியன்மார் அரச படைகளினாலும் இனவாத தீவிரப் போக்குக் கொண்டவர்களாலும் ஆண்கள் பெண்கள், சிறுவர்கள் வயோதிபர்கள் என பாகுபாடின்றி குரூரமாக கொல்லப்பட்டு வருவதோடு அங்கு மனித பேரவலம் ஏற்பட்டுள்ளது.

ரோஹிங்ய முஸ்லிம்களுகெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இம் மிலேச்சத்தனமான படுகொலைகளை காத்தான்குடி மீடியா போரம் வன்மையாக கண்டிப்பதோடு இந்த விடயம் தொடர்பில் சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் கூடிய கவனம் செலுத்தி இந்தப் படுகொலைகள் நிறுத்தப்படுவதற்கு மியன்மார் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வினயமாக வேண்டுகிறது.

தூரத்தில் ஆங்காங்கு ஒலிக்கும் கண்டனக் குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டும். இலங்கை மக்களும் அரசியல் தலைமைகளும் ரோஹிங்ய முஸ்லிம்களுக்காக உரத்து குரல் கொடுக்க வேண்டிய தருணம் இதுவாகும். பேதங்களுக்கு அப்பால் முஸ்லிம் சமூகம் என்ற உணர்வு மேலோங்குவதன் மூலம் மாத்திரமே பெரும்பான்மை சமூகத்துள் வாழ்கின்ற சிறுபான்மையினரின் உரிமைகள் நசுக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த முடியும்.

நூற்றுக்கணக்கான ரோஹிங்ய முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளை ஆயிரக்கணக்கான மக்கள் தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக காடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். தாம் வாழும் நாட்டில் நிம்மதியாக வாழமுடியாது சொல்லெனாத் துன்பங்களை எதிர்கொண்டுள்ள அந்த மக்களை அண்டை நாடுகள் கூட அவர்களுக்கு அடைக்கலம் அளிப்பதில் தயக்கம் காட்டிவருவது மிகுந்த வேதனைக்குரிய விடமாகும்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பிரதேசத்தில் இன முறுகல் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ரொஹிங்கிய முஸ்லிம்களும் தீவிரப்போக்குடைய சமூகத்தினரும் உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்தோராக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற இன வன்முறையினைத் தொடர்ந்து ஆயிரக் கணக்கான ரொஹிங்ய மக்கள் தற்காலிக அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர்.

அண்மையில் தாக்குதல் ஒன்றில் ஒன்பது பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அரசாங்க படையினரால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் காரணமாக சுமார் 70,000 போ பங்களாதேஸுக்கு தப்பியோடினர்.

இராணுவ நடவடிக்கையின்போது ரொஹிங்கிய மக்கள் மீது பாலியல் வன்புணர்வு, கொலை, சித்திரவதை போன்றவை மேற்கொள்ளப்பட்டதாகவும் அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. எனினும் மியன்மார் அரசாங்கம் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது.

ஜுண்டா அரசாங்கதத்தின் கீழ் ஆட்சி செய்யப்பட்டுவந்த மியன்மார், நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சுய் குய்யின் கட்சியான ஜனநாயகத்திற்கான தேசிய லீக் வெற்றி பெற்றபோது சிறுபான்மையினருக்கு விடிவுகாலம் பிறக்கும் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் ஏற்பட்டபோதும் ஆட்சி மாற்றம் எந்த நல்ல மற்றங்களையும் ஏற்படுத்தவில்லை என்பதோடு நிலைமை மேலும் மேசமடைந்துள்ளமையினையே அவதானிக்க முடிகிறது.

எனவே, அந்த மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டியதும், இப்புனித நாட்களில் அவர்களுக்காக பிரார்த்திக்க வேண்டியதும் எமது தார்மீக கடமையாகும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ஊடகப் பிரிவு, KMF –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *