• Mon. Oct 13th, 2025

பொலிஸார் போல் நடித்து முச்சக்கரவண்டி கொள்ளை!

Byadmin

Jan 27, 2024

பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் நடித்து இருவர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பிங்கிரிய படிவெல பிரதேசத்தில் சுமார் 930,000 ரூபா பெறுமதியான முச்சக்கரவண்டி ஒன்று இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பிங்கிரிய பொலிஸாருக்கு நேற்று (26) பிற்பகல் முறைப்பாடு கிடைத்துள்ளது.
இந்த கொள்ளைச் சம்பவம் கடந்த 25ஆம் திகதி இரவு 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
படிவெல பிரதேசத்தில் வீதியின் இடதுபுறத்தில் சிவில் உடையில் வந்த இருவரில் ஒருவர் குறித்த முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு தாம் குளியாப்பிட்டிய பொலிஸாரென்று கூறி சாரதி அனுமதிப்பத்திரத்தை கேட்டதாக முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
பின்னர் சாரதி முச்சக்கரவண்டியை விட்டு இறங்கி சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கியுள்ளார். அங்கு சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியை ஓட்டுவதற்கு இந்த சாரதி அனுமதிப்பத்திரம் செல்லாது எனவும் பொலிஸ் நிலையம் செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
அதன்படி பொலிஸ் நிலையத்திற்கு செல்வதற்காக சந்தேகநபர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் சாரதியை ஏற்றியதுடன், மற்றைய சந்தேக நபர் முச்சக்கரவண்டியை செலுத்தியுள்ளார்.
பின்னர் கதுருகாஸ் சந்தி பகுதியில் சந்தேகநபர்கள் சாரதியை கைவிட்டு முச்சக்கரவண்டியை கொள்ளையடித்துள்ளனர்.
சிவில் உடையில் வந்த சந்தேகநபர்கள் இருவரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்ல என பின்னர் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பிங்கிரிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாகனங்களை சோதனை செய்வதற்கு சமிக்ஞை செய்யும் போது, ​​உத்தியோகத்தர் பொலிஸ் சீருடையில் இருப்பது கட்டாயம் என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
சில சந்தர்ப்பங்களில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொள்ளும் விசாரணைகளின் போது, ​​சிவில் உடையில் வாகனங்களை நிறுத்துமாறு சமிக்ஞை செய்யும் சந்தர்ப்பங்களும் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே பொதுமக்கள் இது தொடர்பில் விழிப்புடன் செயல்படுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *