• Sun. Oct 12th, 2025

27 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சாதனை!

Byadmin

Jan 28, 2024

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற ​மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ​மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்சில் 311 ஓட்டங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. ஜோஷ்வா டி சில்வா 79 ஓட்டங்கள் அடித்தார்.

அவுஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதை அடுத்து, முதல் இன்னிங்சை தொடர்ந்த அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 289 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. உஸ்மான் கவாஜா 75 ஓட்டங்களிலும், கேரி 65 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பாட் கம்மின்ஸ் 64 ஓட்டங்கள் எடுத்தார்.

​மேற்கிந்திய தீவுகள் சார்பில் அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட்டும், கீமர் ரோச் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். 22 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற ​மேற்கிந்திய தீவுகள் அணி 2 வது இன்னிங்சில் 193 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

அவுஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட், லயான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதை அடுத்து, 216 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா 2 வது இன்னிங்சில் ஆடியது. 3 ஆம் நாள் முடிவில் அவுஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 60 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஸ்மித் தனி ஆளாகப் போராடி அரை சதமடித்தார். ஷமார் ஜோசப் சிறப்பாக பந்து வீசி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இறுதியில், அவுஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 207 ஓட்டங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. ஸ்மித் 91 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ​மேற்கிந்திய தீவுகள் திரில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 1-1 என சமனில் முடிந்தது.

​மேற்கிந்திய தீவுகள் சார்பில் ஷமார் ஜோசப் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ஷமார் ஜோசப்புக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம், ​மேற்கிந்திய தீவுகள் அணி, அவுஸ்திரேலிய மண்ணில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *