சர்வதேச பிரச்சினைகளின் போது நியாயத்திற்கு ஆதரவாக கையுயர்த்த நாம் எவருக்கும் அஞ்சவில்லை என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.
மியன்மார் ரோஹிங்யா அகதிகள் விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் அவரிடம் வினவிய போது அவர் தெரிவித்ததாவது,
இந்த நாட்டில் நாம் இரு தடவைகள் ஆட்சியமைத்துள்ளோம்.இரு தடவைகளும் சிறுபான்மை மக்கள் எமது ஆட்சியில் பெரும்பங்கு வகிக்கவில்லை.ஆனாலும் நாம் சர்வதேச விவகாரங்களில் ஒரு கொள்கையை கடைபிடித்தோம்.அது நியாயாத்திற்காக கை உயர்த்தும் கொள்கை.
அதற்கு அமைவாகவே நாம் பல தடவைகள் சர்வதேச ரீதியில் நியாயத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை பெரும் எதிர்புகளுக்கு மத்தியில் செய்துள்ளோம்.அதில் ஒன்றுதான் இஸ்ரேலுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடைப்பிடித்த கொள்கை.
இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் எந்தவித பிரச்சினையுமில்லை.பலஸ்தீனுக்கும் இஸ்ரேலுக்குமிடையில் பிரச்சினை எழும் போதெல்லாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நெஞ்சை நிமிர்ந்து இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பார்.
அது எமது நாட்டுக்கு தேவையற்ற விடயம் இதில் அநாவசியமாக மூக்கை நுழைக்க வேண்டாமென பலர் எமக்கு அப்போது அறிவுரை கூறுவார்கள்.அவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் நியாயத்தின் பக்கம் எமது நிலைப்பாட்டை கடந்த காலங்களில் வெளிப்படுத்தினோம்.
நாம் இஸ்ரேலை கண்டிக்காது இவ்வரசை போன்று செயற்பட்டிருந்தால், பல வகையான இராஜதந்திர ரீதியிலான இலாபங்க பெற்றிருக்க முடியும்.எமது ஆட்சியை கவிழ்க்க சர்வதேசமும் களமிறங்கியிருக்காது. நாம் அதனை செய்யவில்லை.
ஆனால் இந்த அரசை பாருங்கள்.மியன்மார் விடயத்தில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க முடியாமல் திணறுகிறது.சரியோ பிழையோ அரசாங்கம் என்ற வகையில் ஒரு நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.
நேற்று கல்கிசையில் இடம் பெற்ற அசம்பாவிதத்துக்கு இவ்வரசே பொறுப்பேற்க வேண்டும். மியன்மார் அகதிகளை நாட்டினுள் வைத்துக்கொண்டு இங்கு யாரும் இல்லையென கூறியதால் வந்த பிரச்சினை தான் அது.
இவ்வரசுக்கு இவ்விடயத்தில் ஒரு உறுதியான முடிவெடுக்கும் துணிவில்லை என அவர் குறிப்பிட்டார்.