• Sat. Oct 11th, 2025

53 லட்சம் ரூபாய் நட்டஈட்டை செலுத்திய முன்னாள் எம்.பி

Byadmin

Sep 27, 2024

விபத்து இடம்பெற்று இரண்டு வருடங்களின் பின்னர் தான் பயன்படுத்திய சொகுசு வாகனத்திற்கான நட்டஈட்டை அண்மையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் செலுத்தியுள்ளார்.

இது தொடர்பில் விளக்கமளித்த மேல் மாகாண சபையின் செயலாளர் தம்மிக்க கே. விஜேசிங்க, மேல் மாகாண சபைக்கு சொந்தமான சொகுசு வாகனத்தை பயன்படுத்திய போது விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் விதான கடந்த 24ஆம் திகதி மாகாண சபைக்கு 53.38 இலட்சம் ரூபாவை செலுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் விதான கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இருந்த போது அவரது பாவனைக்காக இந்த வாகனம் வழங்கப்பட்டது.

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் பயன்படுத்திய சொகுசு காரே இவ்வாறு சஹான் பிரதீப் விதானவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு பெறப்பட்ட இந்த அதி சொகுசு கார் 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பத்தரமுல்லை பெலவத்தை இசுருபாயவிற்கு அருகில் விபத்துக்குள்ளானது.

அந்த வாகனத்திற்காக சுமார் 13 மில்லியன் ரூபா காப்புறுதிப் பலன்களாகப் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த வாகனத்தை திருத்துவதற்கு தேவையான எஞ்சிய பணத்தை மேல் மாகாண சபையை வழங்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் விதான கோரிய போதிலும், எஞ்சிய பணத்தை மேல்மாகாண சபை செலுத்த மறுத்ததாக செயலாளர் தம்மிக்க கே. விஜேசிங்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *