வெயாங்கொடை வதுரவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் பூமிக்கு அடியில் புதையல் ஒன்றை தேடும் பணி நேற்று (21) ஆரம்பமானது.
அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இங்கு புதையல் இருப்பதாக கூறி பல ஆண்டுகளாக புதையல் திருடர்களால் அந்த இடம் தோண்டப்பட்டுள்ளது.
மேலும், பல சந்தர்ப்பங்களில் புதையலைத் தோண்ட பயன்படுத்திய உபகரணங்களுடன் பலரையும் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பிக்கு ஒருவரும் அடங்குவதாக வெயாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சதுப்பு நிலப்பகுதியில் அமைந்துள்ளது இந்த இடத்தில் தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்ட பரிசீலனையின் போது அங்கு புதையல் எதுவும் இல்லை என தகவல் வெளியாகியுது.
ஆனால் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய விசாரணையில் பூமிக்குள் ஏதோ ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதன்படி, அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்களை அறிக்கை செய்ததன் பின்னர், தொல்பொருள் திணைக்களம், சுரங்க மற்றும் புவியியல் பணியகம், வெயாங்கொடை பொலிஸ், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மீரிகம பிரதேச செயலகம் ஆகியவற்றின் பங்குபற்றுதலுடன் அதிகாரிகளின் மேற்பார்வையில் பொது மக்களின் ஒத்துழைப்புடன் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.