• Sat. Oct 11th, 2025

உயிலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது இறந்த ஒருவரின் SMS

Byadmin

Oct 14, 2017

இறந்த நபர் ஒருவரின் செல்பேசியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அனுப்பப்படாத குறுஞ்செய்தி ஒன்றை அவரது அதிகாரபூர்வ உயிலாக ஆஸ்திரேலிய நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

தன் 55-ஆம் வயதில் இறந்த அந்த நபர், தனது சகோதரருக்கும், சகோதரரின் மகனுக்குமே தனது சொத்துகள் அனைத்தும் சேரும் என்று ஒரு குறுஞ்செய்தியை தட்டச்சு செய்து, அதில் அவரின் சகோதரரின் செல்பேசி எண்ணையே பெறுநருக்கான இடத்திலும் நிரப்பியுள்ளார்.

ஆனால், அந்தச் செய்தியை அனுப்பாமல் தன் செல்பேசியில் வரைவாகச் சேமித்து வைத்திருந்தார். கடந்த ஆண்டு அவர் தற்கொலை செய்துகொண்ட பின் அந்த செய்தி அவரது செல்பேசியில் இருப்பது தெரிய வந்தது.

அந்தச் செய்தியில் இருக்கும் சொற்கள் மூலம், அது ஒரு உயிலாகச் செயல்பட வேண்டும் எனும் நோக்கிலேயே இறந்த நபரால் உருவாக்கப்பட்டுள்ளது என்பது புலனாகிறது என்று பிரிஸ்பேன் உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியுள்ளது.

அந்தக் குறுஞ்செய்தியில் தன் வங்கிக் கணக்கின் விவரங்கள் மற்றும் வீட்டில் தான் பணத்தை மறைத்து வைத்துள்ள இடங்களைப் பற்றிய விவரங்களை அவர் தெரிவித்துள்ளார்.

“என்னை எரித்த சாம்பலை வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்தில் வீசவும். தொலைக்காட்சிப் பெட்டியின் பின்புறம் கொஞ்சம் பணம் உள்ளது. வங்கியிலும் கொஞ்சம் பணம் உள்ளது, ” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அந்தச் செய்தியைத் தன் கணவர் அவரது சகோதரருக்கு அனுப்பாததால் அது செல்லாது என்று கூறி, அவரின் சொத்துகளை தான் நிர்வகிக்கக் கோரி இறந்த நபரின் மனைவி மனு தாக்கல் செய்திருந்தார் என்று ஏபிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் ஒரு உயில் செல்லுபடியாக வேண்டுமானால், அது எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும் மற்றும் அதற்கு இரண்டு சாட்சியாளர்கள் கையெழுத்து இட வேண்டும்.

“எனது உயில்,” என்று அந்த நபர் தன் குறுஞ்செய்தியை முடித்துள்ளதால் அதை உயிலாகக் கருதலாம் என்று நீதிபதி சூசன் பிரவுன் கூறியுள்ளார்.

2006-இல் குயின்ஸ்லாந்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் குறைவாக முறைப்படுத்தப்பட்ட ஆவணங்களையும் உயிலாகக் கருதலாம் என்று கூறப்பட்டுள்ளது.

“என் உயில்” என்று எழுதப்பட்டிருந்த டி.வி.டி ஒன்று கடந்த 2013-இல் அங்கு உயிலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

BBC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *