• Fri. Nov 28th, 2025

ஜனாதிபதி அநுரவுக்கு மனோ கணேசன் எம்.பி அவசர கடிதம்

Byadmin

Dec 25, 2024

லயன் குடியிருப்புகளிலிருந்து மக்களை வெளியேற்ற, தோட்ட நிர்வாகங்களுக்கு உடன் தடை விதிக்குமாறு கோரி தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளார்.

“ஜனாதிபதி அவர்களே, தோட்டங்களில் வாழும் மக்கள் இந்த நாட்டின் சட்டரீதியான குடிமக்கள் என்பது உங்களுக்கு தெரியும். இந்நிலையில், சுமார் 200 வருடங்களாக, தலைமுறை, தலைமுறையாக, லயன் குடியிருப்புகளில், வாழும் அப்பாவி ஏழை மக்களை தோட்ட நிர்வாகிகள், பல காரணங்களை சொல்லி வெளியேற்ற முயல்கிறார்கள். ஏற்கனவே நிர்க்கதி நிலையில் வசிக்கும் மக்களை வெளியே போக சொன்னால் அவர்கள் எங்கே போவார்கள்?”

“தற்போது, இரத்தினபுரி, எஹலியகொடை, சன்டர்லேன்ட் தோட்டத்தில் இத்தகையை முயற்சி நடக்கிறது. நமது மக்கள் தோட்டங்களில் வேலை செய்கிறார்களோ, இல்லையோ, தோட்டங்களில் வாழும் மக்கள், எக்காரணம் கொண்டும், தோட்ட நிர்வாகிகளால் வெளியேற்ற படக்கூடாது என்ற அவசர தடை பணிப்புரையை தோட்ட நிறுவனங்களை நோக்கி, நீங்கள் உடனடியாக அறிவிக்க வேண்டும்.”

“வெறுமனே தோட்டங்களில் வேலை செய்யவில்லை என்று வெளியேற்ற இது ஒன்றும் டிபார்ட்மென்ட் பணியாளர் வீடுகள் அல்ல. கடந்த காலங்களில் இத்தகைய முயற்சிகள் நடைபெற்ற போது ஸ்தலத்துக்கு சென்று நாம் அவற்றை எதிர்த்து போராடியுள்ளோம். அப்போது பாராளுமன்றத்தில் இவை பற்றி உங்களுடன் நான் பேசியுள்ளேன். இது உங்களுக்கு தெரியும். பெருந்தோட்டங்களில், வாழும் மக்களையும், தோட்டதொழிற்துறையையும் மாற்றி அமைக்கும் “சிஸ்டம் சேன்ச்” என்ற முறை மாற்றம் நடைமுறை ஆகும் வரை, தோட்டங்களில் வாழும் எவரையும் வெளியற்ற கூடாது. நாம் அதற்கு இடம் தர மாட்டோம்.”

“அனுரகுமார அரசாங்கம், பெருந்தோட்டங்களில் நிலவும் சிஸ்டத்தை முழுமையாக மாற்றட்டும். புதிய காணி உரிமை வழங்க முன்னர், முதலில் அங்கே ஏற்கனவே வசிப்பவர்களை அடாத்தாக வெளியேற்றுவதை தடுக்கும் தடை உத்தரவை ஜனாதிபதி அனுரகுமார அறிவிக்கட்டும். தமிழ் முற்போக்கு கூட்டணி அதற்கு முழு ஒத்துழைப்புகளை வழங்கும்.” என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை விளித்து, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு, மனோ கணேசன் அனுப்பி வைத்துள்ள அவசர கடிதம் ஊடகங்களுக்கு வழங்க பட்டுள்ளது. இது பற்றி மனோ கணேசன் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது

எங்களது ஜனநாயக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க விவகார உபதலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சந்திரகுமார், இரத்தினபுரி, எகலியகொடை, புசல்லாவ பிளான்டேசன் சன்டர்லேன்ட் தோட்டத்தில் வசிக்கும், எஸ். காந்திமதி, எம். தவகுமார் ஆகியோருக்கு இந்த தோட்ட நிர்வாகியால் அனுப்ப பட்டுள்ள கடித நகல்களை எனக்கு அனுப்பி, எனது கவனத்துக்கு இந்த விவகாரத்தை எனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

இன்று பாராளுமன்ற சபை நடக்குமானால், உடனடியாக இதை சபையின் கவனத்துக்கு கொண்டு வந்திருப்பேன். தற்போது பாராளுமன்ற விடுமுறை. ஆகவே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு, அவசர கடிதம் எழுதியுள்ளேன். இரத்தினபுரி, எகலியகொடை, புசல்லாவ பிளான்டேசன் சன்டர்லேன்ட் நிர்வாகியால், அங்கே வசிக்கும் சம்பந்தபட்ட இருவருக்கு அனுப்ப பட்டுள்ள இக்கடிதங்களின் நகல்களையும், எனது கடிதத்துடன் இணைத்துள்ளேன். இவை அனைத்தும் எனது அலுவலக பணியாளர் மூலம் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் ஜனாதிபதி செயலகத்துக்கு கையளிக்க பட்டுள்ளன.

வெள்ளை ஆட்சியாளர்களிடம் இருந்து உள்நாட்டு கம்பனி நிர்வாகம், தோட்டங்களை பெற்றுக்கொண்டு அதே ஆண்டான், அடிமைத்துவ நோக்கில் செயல்படுகிறது. அதன் பெயர் “மொடர்ன் ஸ்லேவரி” என்ற நவீன அடிமைத்துவம் ஆகும். இதுதான் இன்றைய பெருந்தோட்டங்களில் நிலவும் சிஸ்டம். இதை மாற்ற வேண்டும். இந்த சிஸ்டத்தை மாற்றுவது இலேசான காரியம் அல்ல. நாம் தமிழ் முற்போக்கு கூட்டணியாக இந்த சிஸ்டத்தை “ஏழு பேர்ச் காணி, தனி வீடு, மேலதிக பிரதேச சபைகள்” என படி படியாக மாற்றி வந்தோம்.

இனி இப்போது ஆட்சிக்கு வந்துள்ள அனுரகுமார அரசாங்கம், பெருந்தோட்டங்களில் நிலவும் சிஸ்டத்தை முழுமையாக மாற்றட்டும். புதிய காணி உரிமை வழங்க முன்னர், முதலில் அங்கே ஏற்கனவே வசிப்பவர்களை அடாத்தாக வெளியேற்றுவதை தடுக்கும் தடை உத்தரவை ஜனாதிபதி அனுரகுமார அறிவிக்கட்டும். தமிழ் முற்போக்கு கூட்டணி அதற்கு முழு ஒத்துழைப்புகளை வழங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *